Friday , November 24 2017

ஆபாசத்தின் கூடாரங்களாக மாறும் பாடசாலைகள் – தீர்வு என்ன?

கடந்த பெப்ரவரி 2017ல் கொழும்பு பகுதியை சேர்ந்த சிங்கள மொழி மூல பாடசாலை ஒன்றில் நடைபெற்ற மாணவ, மாணவிகள் சிலரின் காமக் கழியாட்டங்கள் இணையதளங்களில் வெளியாகி அனைவரினதும் கையடக்க தொலை பேசிகளிலும் முக்கிய காட்சியாக இடம் பிடித்ததுடன் வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் யூடியுப் போன்ற சமூக வலை தளங்களிலும் வைரலாக பரவிய காட்சிகளை பார்த்திருப்பீர்கள்.

கல்வி, ஒழுக்கம், நேர்மை மற்றும் நல்ல பண்புகளை கற்று நாட்டின் நற்பிரஜைகளாக உருவெடுக்க வேண்டிய இளைஞர்கள் பாடசாலைக்குள்ளேயே அதுவும் பாடசாலை, பாட நேரத்திலேயே அசிங்கமாக நடந்து கொண்ட காட்சிகள் இலங்கை மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.

இரண்டு மாணவ ஜோடிகள் பாடசாலை படிக்கட்டில் கட்டியணைத்துக் கொள்வதும், முத்தம் கொடுப்பதும், மஞ்சப் பத்திரிக்கை கூட எழுதத் துணியாத வார்த்தைகளை உச்சரிப்பதும் குறித்த செல்போன் வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

பாடசாலை நேரத்தில் மாணவர்கள் மத்தியில் நடைபெற்ற குறித்த அசிங்கமான செயல்பாட்டின் உருவங்களை மறைத்து வீடியோவை செய்தியாக்கியிருந்தது ஒரு பிரபல சிங்கள செய்தி ஊடகம். மாணவர்கள் மத்தியில் பரவிவரும் இது போன்ற இழி செயல்கள் தொடர்பான சமூக விளிப்புணர்வுகள் இல்லாமையும், மாணவர்களுக்கு ஒழுக்கத்துடன் கூடிய உரிய கல்வி வழங்கப்படாமையும் இதற்காக முக்கிய காரணங்களாகும்.

மாற்றப்பட வேண்டிய கல்வி முறை

இலங்கையின் கல்வி முறைமையில் மாற்றம் வேண்டும் என்கிற கோரிக்கைகள் கடந்த பல வருடங்களாகவே எழுந்து வருகின்றன. பாடத்திட்ட மாற்றம், நடைமுறை மாற்றம், ஆசிரியர் செயல்பாடுகளில் மாற்றம், கல்வி சார் ஊழியர்களின் செயல்பாடுகளில் மாற்றம் என்று கல்வித் துறை பல்வேறுபட்ட மாற்றங்களையும் வேண்டி நிற்கிறது.

வலியுறுத்தப்படும் மாற்றங்கள் செயல்பாட்டிற்கு வருவதில் ஏற்படும் தாமதமும், தயக்கமுமே பலவிதமான சீர்கேடுகளும் மாணவர்கள் மத்தியில் தொடர்ந்தும் காலூன்றுவதற்கு காரணமாக அமைகிறது.

ஒழுக்கமற்ற கல்வி பார்வையற்ற கண்ணுக்கு ஒப்பானது

தாம் கஷ்டப்பட்டு பெற்றெடுக்கும் பிள்ளைகளை நல்ல பிள்ளைகளாக, ஒழுக்கமுள்ளவர்களாக, நாட்டின் நற்பிரஜைகளாக வளர்த்தெடுக்க வேண்டும் என்பதற்காகவே பாடசாலைக்கு பெற்றோர் தம் பிள்ளைகளை அனுப்புகிறார்கள். மூன்று வயது, நான்கு வயது, ஐந்து வயது என்று ஒவ்வொரு பெற்றோரும் குறிப்பிட்ட ஒரு வயதை பிள்ளை அடைந்தவுடன் அவர்களை கல்வியின் பக்கம் நாட்டம் கொண்டவர்களாக மாற்ற எத்தனிக்கிறார்கள்.
LKG, UKG, Play School என்று ஆரம்பிக்கும் பாடசாலை பருவம், முதலாம் ஆண்டு முதலே மேலதிக வகுப்புகளும் ஆரம்பமாகி அதற்கும் பிள்ளைகளை பெற்றோர் அனுப்பி வைக்கிறார்கள். இவையனைத்தும் இரண்டு காரணங்களை முன்வைத்தே நடைபெறுகின்றன. ஒன்று பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். மற்றையது ஒழுக்கமுள்ள நற்பிரஜையாக தம் பிள்ளை மாற வேண்டும்.

ஒழுக்கத்தையும், கல்வியின் முன்னேற்றத்தையும் நினைத்து பாடசாலைக்கு தம் பிள்ளைகளை பெற்றோர் அனுப்பும் போது, அவர்களுக்குறிய சிறந்த கல்வியை கொடுப்பதும், ஒழுக்கமிக்கவர்களாக அவர்களை மாற்றுவதும் ஒவ்வொரு ஆசிரியரினதும் கட்டாயக் கடமையாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  மனிதன் இறந்து விட்டால் அவனது மூன்று செயல்களை தவிர மற்ற அனைத்தும் நின்று விடுகின்றன;

01. நிலையான அறக்கொடை

02. பயன்பெறப்படும் கல்வி

03. அவனுக்காக பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள். நூல்: முஸ்லிம் 3358

அதிக மதிப்பெண் பெருவதினாலோ, பாடசாலை மட்ட கணிப்பீட்டில் முதல் இடம் பெற்றுக் கொள்வதினாலோ முறையான பிரதிபலனை வாழ்வில் நாம் பெற முடியாது. மாறாக பயன்பெரும் அளவுக்குள்ள சிறந்த ஒழுக்கத்துடன் கூடிய கல்வியே நம் வாழ்வில் சிறப்பையும் கண்ணியத்தையும் நமக்கு பெற்றுத் தரும்.

ஒரு மனிதன் இறந்த பின்னர் கூட அவனுடைய மன்னறை வாழ்வின் ஈடேற்றத்திற்காக தொடர்ந்து அவனுக்கு கிடைக்கும் நன்மைகளில் மிக முக்கியமானது பயன்பெறப்படுகிற கல்வியாகும் என நபியவர்கள் நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.

நமது கல்வியினால் நமக்கு பயன் கிடைக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக அது சிறந்த ஒழுக்கத்துடன் கூடிய கல்வியாக மாத்திரமே இருக்க வேண்டும்.
பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வை கணக்கில் கொள்ளாத பெற்றோர்கள்
எந்தவொரு மாணவனும் தனது எதிர்காலத்தில் சிறந்தவனாக ஒழுக்கமுள்ளவான வளர்வதற்கு பெரிதும் காரணமாக இருப்பவர்கள் அவனுடைய பெற்றோர்கள்.

பிள்ளைகளைப் பொருத்த வரையில் பிறக்கும் குழந்தை தனது முதல் ஆசானாக தாயையும், தந்தையையும் தான் பெற்றுக் கொள்கிறது. அன்புக்கு தாயும், அறிவுக்கு தந்தையும் உதாரணமாக இவ்வுலகில் பேசப்படுகிறார்கள். தம் பிள்ளைக்கு அன்பு காட்டும் பல பெற்றோர்கள் உரிய முறையில் அறிவை குழந்தைகளுக்கு போதிப்பதில்லை. அறிவு பெற்றவனாக தன் பிள்ளையை வளர்க்க நினைக்கும் பலர் ஒழுக்கமுள்ளவான தன் பிள்ளையை வளர்ப்பதில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போல, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில் தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவதுபோல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தை விட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், நூல்: புகாரி 1385

உலகில் பிறக்கும் எல்லாக் குழந்தைகளும் இயற்கையாக சிறந்தவர்களாகத்தான் இறைவனால் படைக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்களை வளர்த்தெடுக்கும் பெற்றோர்கள் தான் ஒழுக்கமற்றவனாக, நற்குணமற்றவனாக, கல்வியறிவற்றவனாக, மார்க்கத் தெளிவற்றவனாக என்று பல விதங்களில் அவனை மாற்றி விடுகிறார்கள்.
எதிர்காலத்தில் டாக்டராக, எஞ்சினியராக, விஞ்ஞானியாக, மேதையாக வர வேண்டும் என்றெல்லாம் கனவு காணும் இன்றைய பெற்றோர்கள் தம் பிள்ளை ஊரில் சிறந்த, ஒழுக்கமுள்ள நல்ல குணமுள்ளவனாக வளர வேண்டும் என்பதில் அக்கறையற்றிருக்கிறார்கள்.

பொறுப்புகளை உணர வேண்டிய ஆசிரியர்கள்

இந்த உலகத்தில் வாழும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்புகள் தொடர்பில் மறுமையின் விசாரனையில் அவர் கண்டிப்பாக விசாரிக்கப்படுவார். அந்த விசாரனையில் சரியான பதிலை கூறி இறைவனின் தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்றால் மாணவர்கள் விஷயத்தில் ஆசிரியர்கள் தம் பொறுப்புக்களை சரிவரி நிறைவேற்ற வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப் படுவார்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள், நூல்: புகாரி 2409
உலகில் உள்ள தொழில்களில் மிகவும் மதிப்பு மிகுந்த தொழிலாக ஆசிரியர் தொழிலே பார்க்கப்படுகிறது. உலகில் எவ்வளவு பெரிய இடத்திற்கு உயர வேண்டும் என்றாலும் அதற்குறிய வழிகாட்டல்கள் ஆசிரியர் மூலம் தரப்படுகிறது. எந்தத் துறையில் ஒருவன் கோலோச்ச வேண்டும் என்றாலும் அதற்குறிய வழிமுறைகள், வழிகாட்டல்களை வழங்குபவர்கள் ஆசிரியர்களாக இருக்கிறார்கள்.

இவ்வளவு முக்கியத்துவம் மிக்க ஆசிரியர் பணியில் கடமையாற்றும் பல ஆசிரியர்கள் தமது பொறுப்புக்களை உணர்ந்து நிறைவேற்றாதவர்களாகவே இருக்கிறார்கள். சம்பளத்திற்கு வேலை செய்யும் அதிகாரியாகவே பலர் இருக்கிறார்களே ஒழிய. சமுதாயத்திற்கு சேவை செய்யும் உன்னத பணியாக ஆசிரியர் பணியை அவர்கள் நினைப்பதில்லை.

தாம் பெற்ற கல்வியை, ஒழுக்கத்தை முறைப்படி மாணவர்கள் மத்தியில் ஆசிரியர் ஒப்புவித்தால் கண்டிப்பாக அந்தக் குழந்தைகளும் ஒழுக்கமுள்ள சிறந்த கல்வியாளர்களாக மாறுவார்கள்.

ஆகவே, பிள்ளைகளின் பொறுப்பாளர்களாக பாடசாலையில் பொறுப்புச் சுமத்தப்பட்டுள்ள ஆசிரியர்கள் தமது பணியில் கூடிய கவனம் செலுத்துவதே மாணவர்களின் எதிர்கால ஒழுக்க வாழ்வுக்கு உகந்ததாக அமையும்.

கல்விக்கு முன் ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்.

பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன் தன்னுடன் கல்வி கற்கும் சக மாணவியுடன் காதல் வயப்படுகிறான். மாணவனும் மாணவியும் சல்லாபத்தில் ஈடுபடுகிறார்கள். அதனை சக மாணவன் தன் மொபைலில் வீடியோ படமெடுக்கிறான் என்றால் என்ன காரணம்?

மாணவர்கள் புத்தகத்தை சுமக்கும் சுமைதாங்கிகளாகத் தான் வளர்க்கப்படுகிறார்களே தவிர, ஒழுக்கத்தை சுமக்கம் உத்தமர்களாக அவர்கள் வளர்க்கபடுவதில்லை என்பதே யதார்தமானதாகும்.

பாடசாலை நேரத்தில் மாணவர்களும், மாணவியரும் சக மாணவர்களுக்கு முன்னால் சல்லாபத்தில் ஈடுபடுகிறார்கள். அசிங்கமான வார்த்தைகளை, ஆபாசமான வாசகங்களை பேசிக் கொள்கிறார்கள். கீழ் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் அதனை பார்க்கிறார்கள். இவ்வளவும் நடக்குமளவுக்கு பாடசாலையின் ஒழுக்கம் கீழ்நோக்கி சென்று விட்டது என்பதே உண்மையாகும்.

“சிங்கள பாடசாலை தானே அப்படித் தான் இருக்கும்” என்ற அசட்டுப் பேச்சின் மூலம் பல முஸ்லிம் பாடசாலை ஆசிரியர்களும், அதிபர்களும், புத்திஜீவிகளும், சமுதாயப் பெரியவர்களும் இந்த இடத்தை தாண்டிச் செல்வதற்கு முற்படுவார்கள்.

காதலுக்கோ, காமத்திற்கோ முஸ்லிம் பாடசாலை, சிங்கள பாடசாலை, இந்துப் பாடசாலை என்ற வித்தியாசம் இல்லை. ஒழுக்கம் எங்கில்லையோ அங்கு இவை சாதாரணமாக நடந்தேறிவிடும்.

இன்னும் சொல்லப் போனால் மாற்று மதப் பாடசாலையாக இருந்தால் கூட அவர்களிடம் இஸ்லாம் இல்லை. அவர்களின் மதம் வேறு, கலாசாரம் வேறு, பண்பாடு, ஆடை முறை என்று அனைத்திலும் வித்தியாசம் இருக்கிறது எனலாம். ஆனால் முஸ்லிம் பாடசாலைகளில் இஸ்லாமிய மாணவர்கள் படிக்கும் கல்லூரிகளிலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றனவே அதற்கு என்ன காரணம்? இஸ்லாமிய ஒழுக்கம் அவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட வில்லை என்பதே முழுக் காரணமாக அமைகிறது.
நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனாகியன உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத் தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது அல்லாஹ்வின்  தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்துச் சாப்பிடு!” என்று சொன்னார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது.

நூல்: புகாரி 5376

உணவு உண்ணும் போது தன் மகனை அருகில் வைத்துக் கொள்ளும் நபிகள் நாயகம் அவர்கள், உண்ணும் முறையைப் பற்றி தன் மகனுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள். உணவின் ஒழுக்கத்தை பாடம் நடத்துகிறார்கள். சிறு பிள்ளை தானே என்ன செய்ய? விளையாடி விட்டுப் போகட்டுமே. என விட்டு விட வில்லை. சிறு வயது தான் ஒழுக்கம் கற்றுக் கொடுக்க வேண்டிய முக்கியமான வயது என்பதினால் அச்சிறுவனுக்க நபியவர்கள் அழகாக பாடம் கற்றுக் கொடுக்கிறார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: மரத்தின் அறுவடையின்போதே பேரீச்சம் பழத்தின் ஸகாத், நபி(ஸல்) அவர்ளிடம் கொண்டு வரப்படும். இவ்வாறு ஒவ்வொருவரும் தத்தமது பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்ததும் அது பெரும் குவியலாக மாறிவிடும். (சிறுவர்களான) ஹசன் (ரலி) ஹுசைன் (ரலி) இருவரும் அக்குவியலருகே விளையாடுவார்கள். ஒரு நாள் அவ்விருவரில் ஒருவர் ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்துத் தம் வாயில் போட்டார். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் உடனே அதை வெளியே எடுத்துவிட்டு “முஹம்மதின் குடும்பத்தார் ஸகாத்தின் பொருளை உண்ணக் கூடாது என்பதை நீ அறியவில்லையா?” எனக் கேட்டார்கள்.
புகாரி: 1485

நபியவர்களின் குடும்பத்தினர் ஸக்காத் பொருட்களை உண்ணக் கூடாது என்பது மார்க்க விதி. இந்த விதியைப் பற்றிய சரியான புரிதல் இல்லாத சிறு வயது சிறுவனாக இருந்த ஹஸன் அல்லது ஹுஸைன் (ரலி) அவர்கள் ஸக்காத் வகையை சார்ந்த பேரீச்சம் பழம் ஒன்றை எடுத்து வாயில் போட்டு விட்டதை, உடனே எடுத்து வெளியில் வீசிய நபிகள் நாயகம் அவர்கள் நமது குடும்பத்திற்கு இந்தப் வகை பொருட்கள் உண்பது தடுக்கப்பட்டுள்ளது. என்றும் விபரித்து விளக்கம் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

உண்பதின் ஒழுக்கத்தை மாத்திரமல்லாது, ஹராம், ஹழால் போன்ற சிறுவர்கள் அறியாத பல ஒழுக்க விஷயங்களை நபியவர்கள் தனது பேரப்பிள்ளைக்கு கற்றுக் கொடுத்துள்ளார்கள். இப்படி கற்றுக் கொடுக்கப்படும் போது அறியாத பிள்ளைகள் சரியானதை அறிந்து கொண்டு அதன் படி வாழப்பழகுவர்.

(ஒரு முறை) அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் சிறுவர்களை கடந்து சென்ற போது அவர்களுக்கு ஸலாம் சொன்னார்கள். மேலும் “நபி (ஸல்) அவர்கள் இவ்வாறுதான் செய்து வந்தார்கள்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஸாபித் அல் புனானி (ரஹ்), நூல்: புகாரி 6247

பெரியவர்கள் என்றால் சிறுவர்கள் தான் முதல் மரியாதை வழங்க வேண்டும் என்று பழக்கப்படுத்தப்படும் உலக வாழ்வில் மரியாதை அனைவருக்கும் சமமானது. என்பதை மிகத் தெளிவாக இஸ்லாமிய மார்க்கம் கற்றுக் கொடுத்தது மாத்திரமற்றி ஒழுக்கத்தின் ஆரம்ப இடமான அடுத்தவர்களை கண்டால் ஸலாம் சொல்லும் வழிமுறையை நபியவர்கள் சிறுவர்களுக்கு முதலில் கற்றுக் கொடுக்கிறார்கள். எனக்கு நீ ஸலாம் சொல்ல வேண்டும் என்று சொல்லாமல் இறைவனின் தூதர் அவர்கள், தானே முன்சென்று ஸலாம் சொல்லி ஒழுக்கம் கற்றுக் கொடுக்கிறார்கள்.

இது போன்ற ஒழுக்க நடைமுறைகள் கற்றுக் கொடுக்கப்படாமல் எவ்வளவு பெருமதியான உலகியில் கல்வியை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தாலும் அதனால் எவ்வித பயணும் ஏற்படப் போவதில்லை.

மாணவிகளுக்கான ஆடை முறையில் மாற்றம் வேண்டும்.
ஒழுக்கத்தையும், நல்ல பண்புகளையும் கற்றுக் கொடுக்க வேண்டிய பாடசாலைகளிலேயே மாணவர்கள் தவறான நடத்தையில் ஈடுபடுவதும், காதல், காம, களியாட்டங்கள் செய்வதும் நடந்தேறுவதற்கு இன்னொரு முக்கிய காரணமான அமைவது மாணவிகளின் ஆடை முறையாகும்.

இலங்கை நாட்டில் முஸ்லிம் மாணவிகளுக்கு தனியானை ஆடை முறையும், முஸ்லிம் அல்லாத மற்ற மதங்களை பின்பற்றும் மாணவிகளுக்கு வேறு விதமான ஆடை முறையும் நடைமுறையில் இருக்கிறது.

முஸ்லிம் மாணவிகளின் ஆடை முறை ஆபாசமற்ற, ஒழுக்கம் மிக்கதாக அமையப் பெற்றுள்ளது. இதே நேரம் மற்ற மதம் சார்ந்த மாணவிகளின் ஆடை ஆபாசத்தை தூண்டும் விதமாக அமையப் பெற்றுள்ளது. இப்படியான ஆடை முறையும் இது போன்ற வழிகேடுகளுக்கு காரணமான அமைந்து விடுகிறது.

முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடைகள் ஒழுக்கம் மிக்கது. முஸ்லிம் மாணவிகள் அணியும் ஆடை சிறந்தது. என வஜிர சிறுவர் நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி ஹுனுபலாக வஜிர ஸ்ரீ நாயக்க தேரர் அண்மையில் தெரிவித்திருந்தமை இவ்விடத்தில் அவதானத்திற்கு உரியதாகும்.

பௌத்த தேரரான ஹுனுபலாக வஜிர ஸ்ரீ நாயக்க தேரர் முஸ்லிம் மாணவிகளின் அணியும் ஆடை சிறந்தது என கருத்து வெளியிட்டமைக்குக் காரணம் என்ன? பெண்களுக்கு ஆண்களிடமிருந்து ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு தீர்வாக இஸ்லாம் கற்றுக் கொடுக்கும் ஆடை முறை அமைந்து விடுகிறது.

அதே போல் “இஸ்லாமியப் பெண்கள் எப்படி பர்தா அணிகிறார்களோ அதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களும் பர்தா அணிய வேண்டும். இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும்“ என்று தமிழகத்தின் பிரபலமான சாமியார்களில் ஒருவரான மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத் தக்கதாகும்.

மாற்று மத அறிஞர்களே இஸ்லாமிய பெண்களின் ஆடை முறைதான் சரியானது என்பதை ஒப்புக் கொள்ளும் விதமான சிறந்த ஆடை முறையை இஸ்லாம் பெண்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.

(முஸ்லிம் பெண்கள் முகத்தை திறந்து, கைகளில் மணிக்கட்டு வரை மறைத்து, காலில் கரண்டை வரை மறைக்கும் பகுதியைத் தான் இஸ்லாம் ஹிஜாப் என்று சொல்கிறது. இந்தப் பகுதிகளை எவ்வகையான ஆடையில் மறைத்தாலும் அது ஹிஜாப் என்ற வகையைத் தான் சாறும்).

இன்றைய பாடசாலை மாணவிகளின் ஆடை முறையில் மார்பகங்களை முந்தானையிட்டு மறைக்காத ஆபாசத் தனமான ஆடை முறையே பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலை காமத்திற்கு மாணவர்களை இழுத்துச் செல்லும் தவறான ஆடை முறையாக அமைந்திருக்கிறது.

சில பொழுதுகளில் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களே மாணவிகளுடன் தவறாக நடந்து கொள்ள முற்பட்டு கையும் களவுமாக மாட்டிக் கொண்ட வரலாறுகளும் இலங்கையில் இல்லாமலில்லை.

அத்துடன், மாணவிகளின் ஆடை முறை ஆபாசமாக அமையப் பெற்றிருக்கிறது அதில் மாற்றம் வேண்டும் என்பது மட்டுமல்லாது ஆசிரியைகளின் ஆடை முறையிலும் கண்டிப்பான மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்.

பாடம் கற்பிக்கும் ஆசிரியைகள் மறைக்க வேண்டிய பகுதிகளை வெளிக்காட்டிக் கொண்டு ஆடை அணிந்து வருகிறார்கள். இதுவும் பாடசாலை பருவத்திலேயே மாணவ, மாணவிகள் வழி தவறிச் செல்வதற்கு வழியமைத்துக் கொடுக்கிறது.

பாடசாலை மாணவனுடன் ஆசிரியை ஓட்டம், ஆசிரியை காதலித்து கரம் பிடித்த மாணவன் போன்ற பத்திரிக்கை செய்திகளெல்லாம் உலகுக்கு புதியவை அல்ல.

ஆகவே, மாணவிகளின் ஆடை முறையில் மாத்திரமன்றி ஆசிரியைகளின் அடை முறையிலும் ஒழுக்கமான ஆடை முறைமை ஒன்று வகுக்கடுவதே இது போன்ற செயல்களுக்கு முடிவாக அமையும்.
அப்படியானால் முஸ்லிம் பாடசாலைகளின் காதல் போன்ற வழிகேடுகள் அரங்கேருவதில்லையா? என்றொரு கேள்வி எழுவது இவ்விடத்தில் தவிர்க்க முடியாயது. முஸ்லிம் பாடசாலைகளிலும் நடைபெறுகிறது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் மாற்ற மதம் சார்ந்த பாடசாலைகளை விட குறைவான அளவு தான் நடைபெறுகிறது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். காரணம் முஸ்லிம்கள் மதம் சார்ந்த நடைமுறைகளை ஓரளவுக்காவது பாடசாலைகளில் நடைமுறைப் படுத்துவதே இதற்கான காரணமாகும்.

முஸ்லிம் பாடசாலைகள் பல ஆண், பெண் கலவன் பாடசாலைகளாக இருப்பதும் முஸ்லிம் பாடசாலைகளிலும் இது போன்ற அனாச்சாரங்கள் நடைபெறுவதற்கு வழியமைத்துக் கொடுக்கிறது.

ஆண்களுக்கு தனியான பாடசாலையும், பெண்களுக்கு தனியான பாடசாலையும் அனைத்துப் பகுதிகளிலும் அமைக்கப்படுமாக இருந்தால் இந்தப் பிரச்சினைகளை வெகுவாக குறைக்கப்பட்டு விடும் என்பதில் சந்தேகமில்லை.

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், ‎‎(ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க ‎விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) ‎அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.‎
அல்குர்ஆன் 33 : 59

சீரழிக்கும் சினிமா

சினிமா தொடர்பான விளிப்புணர்வுகள் மாணவர்கள் மத்தியில் இல்லாமலிருப்பதும் இது போன்ற ஆபாச காடைத்தனத்திற்கு மாணவர்களை இட்டுச் சென்று விடுகிறது.

குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் மத்தியில் தமிழ் சினிமா ஆதிக்கம் செலுத்துவதைப் போல், சிங்கள மொழி பேசும் மக்கள் மத்தியில் ஹிந்தி சினிமா பாரிய தாக்கத்தை செலுத்துகிறது. மொத்தத்தில் அனைத்து மொழி சினிமாக்களும் தெளிவாகவே இந்த அனாச்சாரங்களுக்கு வித்திடுகின்றன என்பதில் சந்தேகமில்லை.

சினிமா கற்றுக் கொடுக்கும் காதல் சமாச்சாரத்தை பார்க்கும் மாணவனும், மாணவியும் நிஜத்தில் அதனை நடைமுறைப்படுத்த நினைக்கிறார்கள். பாடசாலை மாணவர்கள் முதல் பல்கலைக் கழக ஆசிரியர்கள் வரை அனைவரின் காதல் கதைகளும் சினிமாவாகவே காணப்படுகிறது.
சினிமாவில் தான் ரசிக்கும் ஹீரோவைப் போல் தன்னை கற்பனை செய்யும் மாணவன் தன் காதலியை தனது ஹீரொயினாக கற்பனை செய்கிறான். பாடசாலை பாடத்தில் கவனம் செலுத்துவதை விட தன் காதலியை பார்த்து ரசிப்பதில் அதிக கவனம் செலுத்துகிறான். பெரும்பாலான பாடசாலைகளில் ஆண்களை விட பெண் பிள்ளைகள் கல்வியில் முன்னிலையில் இருப்பதற்கும் மாணவர்கள் பின்தங்கி இருப்பதற்கும் இதுவொரு முக்கிய காரணமான இருக்கிறது.

மாணவர் மன்றங்கள் என்ற பெயரில் பாடசாலை மாணவர்களின் திறமைகளை வெளிக்காட்ட நடத்தப்படுகிற நிகழ்வுகளில் கூட ஆண் பெண் கலவை களியாட்டங்களும், சினிமா பாடல்களும், ஆடல்களும், குத்தாட்டங்களும் நடந்தேறுவதை நாம் அவதானிக்க முடிகிறது.
அண்மையில் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு முஸ்லிம் பாடசாலையில் ஆசிரியர் ஒருவரே சினிமா பாடலொன்றுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ அனைவரின் வாட்ஸ்அப்களிலும் வைரலாக பரவியதை அவதானித்திருப்பீர்கள்.

இந்த சினிமா பைத்தியங்களினால் ஒன்றுமறியா மாணவர்களின் வாழ்வும் வீனாகி, எதிர்காலத்தில் எவ்வித அறிவுமற்ற போதை பொருள் வியாபாரியாக, சாராய கடை நடத்துபவனாக, பெரும் ரவுடியாகவெல்லாம் மாணவர்கள் மாறிப் போவதற்கும் இதுவே காரணமாக அமைகிறது.

செல்போன் – இணையதளங்கள்

பாடசாலையில் குறித்த மாணவர்கள் இருவரும், மாணவிகள் இருவரும் சல்லாபத்தில் ஈடுபட்டதை ஒரு மாணவன் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளான்.

அந்த மாணவன் வீடியோ பதிவு மேற்கொண்ட நேரம் பாடசாலை பாட நேரமாக இருக்கிறது. குறித்த நேரத்தில் பாடசாலைக்குள் அவன் செல்போன் வைத்துக் கொண்டிருப்பதை எந்த ஆசிரியரும் கண்காணிக்க வில்லை. பகிரங்கமாக சல்லாபத்தில் 04 மாணவர்கள் ஈடுபடுகிறார்கள். அதனையும் ஆசிரியர்கள் கண்காணிக்க வில்லை.

மாணவர்களை ஒழுக்கமுள்ளவர்களாக வளர்ப்பதற்காக இல்லாவிட்டாலும் அரசு தரும் சம்பளத்திற்காகவாவது கண்காணித்திருக்க வேண்டாமா?
காலையில் 07.00 மணிக்கு பாடசாலை செல்ல வேண்டிய பல ஆசிரியர்கள் தங்கள் இஷ்டப்படி பாடசாலைக்கு செல்வதும், அதிபரை சமாலித்து பொய் காரணம் சொல்லி ஏமாற்றுவதும், பல பொழுதுகளில் ஆசிரியர்களின் இத்தகைய செயல்பாட்டுக்கு அதிபர்களே துணை போவதும் சகஜமான ஒன்றாகி விட்டது.

அதே போல் பாட நேரத்தில் அசமந்தமாக, அசட்டையாக சக ஆசிரியருடன் அநாவசியப் பேச்சுக்களில் ஈடுபடுவதும், கொஞ்சுவதும், கெஞ்சுவதும் கூட பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கு மத்தியிலேயே நடைபெறும் காரியங்கள் தான்.

கல்வியையும், ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டியவர்களே இப்படியிருக்கும் போது மாணவர்கள் எப்படியிருப்பார்கள்?

பாடசாலைக்குள் செல்போன் எடுத்து வருவதும், இணையதளங்கள் பயன்படுத்துவதும், பாடசாலைக்குள்ளிருந்தே பேஸ்புக்கில் தகவல் பதிவதும் கூட இன்று சர்வ சாதாரணமான ஒன்றாக மாறியிருக்கிறது. இவற்றுக்கெல்லாம் காரணமாக இருப்பது ஆசிரியர்கள் தான்.
கொழும்பில் குறித்த பாடசாலையில் ஏற்பட்டதைப் போன்ற காரியங்கள் இனியும் பாடசாலை மட்டத்தில் மாணவர்களுக்கு மத்தியில் ஏற்படாமல் இருக்க வேண்டுமாயின் உரிய முறைப்படி ஒழுக்கமுள்ள இஸ்லாத்துடன் கூடிய ஒழுக்கக் கல்வி புகட்டப்பட வேண்டும் என்பதே சரியான தீர்வாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

-ரஸ்மின் MISc –