Sunday , June 25 2017
Breaking News

‘மார்க்கத்தை பாதுகாத்தல்’ கோட்பாட்டை நவீன உலகில் பிரயோகித்தல்- ஒரு மகாஸிதிய அணுகுமுறை

1- முன்னுரை

மகாஸிதுஷ் ஷரீஆவின் உள்ளடக்கம் ஸஹாபாக்கள் காலம் தொடக்கமே பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. ஸஹாபாக்கள் குர்ஆன், சுன்னாவின் வெளிப்படை கருத்துக்கு அப்பால் சென்று அவை அடைய விரும்பிய இலக்குகளையும் கருத்தாடல்களையும் மிகக் கவனமாக புரிந்து கொண்டதோடு அவற்றை நடைமுறைப்படுத்தியுமுள்ளனர் என்பதற்கு புஹாரி, முஸ்லிம் போன்ற ஆதாரபூர்வமான கிரந்தங்களில் பல ஆதாரங்கள் காணப்படுகின்றன.

பனூ குரைழா சம்பவம் அவற்றுள் ஒன்று. உமர் (ரழி) அவர்களுடைய சட்டத்தீர்ப்புக்கள் ஷரீஆவின் இலக்குகளை கருத்திற் கொண்டிருந்தன என்பதற்கு போரட்டத்தில் கைப்பற்றப்பட்ட பொருட்களை பகிர்ந்தளிப்பதில் கைக்கொண்ட முறை சிறந்த ஆதாரம்.
தொடர்ந்து வந்த இமாம்களும் ஷரீஆவின் இலக்குகளை கருத்திற் கொண்டே தமது சட்ட ஆய்வுகளை மேற்கொண்டனர். குறிப்பாக இமாம் அபூ ஹனீபா மற்றும் இமாம் மாலிக்கின் சட்ட தீர்ப்புக்களில் தெளிவாக புலப்படுகிறது. இவர்கள் கியாஸ், இஸ்திஹ்ஸான், மஸ்லஹா போன்ற சட்டவாக்க துணைமூலாதாரங்களை அதிகம் பிரயோகித்திருக்கின்றனர். குர்ஆன், சுன்னாவும் என்ன அடைய விரும்புகின்றன என்பதை அறிந்து கொள்வதில் இமாம்களது கவனம் மிக அதிகமாகவே குவிந்திருந்தது.

மூன்றாம் நூற்றாண்டின் இறுதிக்கட்டம் வரை ‘மகாஸித் ஷரீஆ’ என்ற பிரயோகம் அறிமுகமாகியிருக்கவில்லை. மூன்று தொடக்கம் ஐந்தாம் நூற்றாண்டு காலப்பிரிவில் இமாம்களான ஹகீம் திர்மிதி, கப்பால், இப்னு பாபவைஹி மற்றும் ஆமிரி போன்றவர்கள் இத்தலைப்பில் பேச ஆரம்பித்தனர். ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து எட்டாம் நூற்றாண்டுவரையான‌ காலப்பகுதியில்தான் மகாஸித் சிந்தனை ஒரு கோட்பாடாக அல்லது சிந்தனையாக பேசப்பட்டு, பல கட்ட வளர்ச்சிகளையும் அடைந்தது. இமாம்களான ஜுவைனி, கஸ்ஸாலி, இப்ன் அப்துஸ் ஸலாம், கராபி, இப்னுல் கையிம், ஷாதிபி போன்றவர்களின் இத்துறைக்கான பங்களிப்பை மறந்துவிட்டு கடந்துசெல்வது சாத்தியமில்லை. ஷாதிபியை தொடர்ந்து வந்த காலப்பிரிவில் மகாஸித் சிந்தனை ஸ்தம்பித நிலைக்குட்பட்டது.
ஷாதிபியின் சிந்தனைக்கு மீண்டும் உயிர்கொடுத்தவராக தாஹிர் இப்னு ஆஷூர் கருதப்படுகிறார். அவரைத்தொடர்ந்து நவீன கால அறிஞர்கள் பலர் மகாஸித் சிந்தனையை வலியுருத்தினர். அலால் பாஸி, ரஷீட் ரிழா, முஹம்ம்த் அல் கஸ்ஸாலி, ஜமாலுத்தீன் அதிய்யா, தாஹா ஜாபிர் அலவானி என்று நீட்சி பெற்று ரைஸூனி, கர்ளாவி, ஜாசிர் அவ்தா, தாரிக் ரமழான் என்று விரிவுபெற்றிருக்கிறது.

மறுபுறம் மகாஸித் சிந்தனையை அரசியல் தளத்தில் கனூஷி போன்றவர்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றனர் என்பதை ‘மகாஸித் அணுகுமுறை’ என்ற பதத்தினூடாக சில அறிஞர்கள் விளக்குகின்றனர். இப்பின்னணியிலே ‘மார்க்கத்தைப் பாதுகாத்தல்’ எனும் மகாஸித் சிந்தனையின் முதல் இலக்கு எவ்வாறு வித்தியாசமான வியாக்யானங்களுக்குட்பட்டு வளர்ச்சியடைந்திருக்கிறது எனபதை இக்கட்டுரை ஆராய்கிறது.

#ct_ymmonw4dsvxopvdhiaqm {font-size:12px;}

2- ‘மார்க்கத்தைப் பாதுகாத்தல்’ சிந்தனையும் அது மீதான வித்தியாசமான வியாக்யாணங்களும்

ஆரம்பகால அறிஞர்களான ஜுவைனி, கஸ்ஸாலி போன்றவர்கள் ‘ஹிப்ழுத்தீன்’ (மார்க்கத்தை பாதுகாத்தல்) என்ற சொற்பிரயோகத்தையே பயன்படுத்தினர். ஆமிரி சற்று வித்தியாசமாக ‘உண்மையான மார்க்கத்தை விட்டுவிடுவதற்காக தண்டித்தல்’ என்ற பிரயோகத்தை முன்வைத்தார். இப்பிரயோகத்துக்கு ஆரம்பகால அறிஞர்கள் வழங்கிவந்த விளக்கத்துக்கு முற்றிலும் வித்தியாசமானதொரு சிந்தனையை இப்னு ஆஷூர் முன்வைத்தார். ‘மார்க்கத்தை பாதுகாத்தல்’ என்பது மதசுதந்திரம் என்ற கருத்திலேயே பிரயோகிக்கபபட வேண்டும் என விளக்கினார். சுதந்திரம் என்ற கருத்தாக்கத்தையும் விரிந்த கருத்தில் பிரயோகித்தார். பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம், மத சுதந்திரம் என்ற விரிந்த வட்டம் கொண்டது அது என கூறினார். ஆஷூர் முன்வைத்த மதசுதந்திரம் எனும் சிந்தனையை கன்னூஷி தனது ‘அல்ஹுர்ரிய்யாத் அல்-ஆம்மா’ எனும் புத்தகத்தில் மிக விரிவாக விளக்கியுள்ளார். இப்பிரயோகத்துக்கு நடைமுறை தோற்றம் கொடுக்கும் விதத்தில் அவரது நஹ்ழா கட்சி மதச்சார்பின்மைவாதிகளுடன் இணைந்து பணியாற்றியது. இன்னும் சில அறிஞர்கள் ‘மத பன்மைத்துவம்’ என்ற தலைப்பை அழுத்திக் கூறினர். இப்பின்னணியில்தான் மதம் மாறுதலுக்குரிய தண்டனை வித்தியாசமான கோணத்தில் நவீன கால அறிஞர்களால் புரிந்து கொள்ளப்படுகிறது.

2.1 மதமாற்றமும் அதற்குரிய தண்டனையும் பற்றிய புரிதல்

குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் மத சுதந்திரம் பற்றி மிக அதிகமாகவே வழிகாட்டல்கள் வந்துள்ளன. ‘மார்க்கத்தில் நிர்ப்பந்தமே இல்லை’ என்றது குர்ஆன். ‘உங்களில் விரும்பியவர் நம்பிக்கை கொள்ளட்டும். விரும்பியவர் நிராகரிக்கட்டும்’ என்ற வசனம் மதத்தை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை மனிதர்களிடம் குர்ஆன் கொடுத்துவிட்டதை விளக்குகிறது. மதசுதந்திரத்தை வலியுருத்தும் பல ஹதீஸ்கள் வந்திருக்கும் அதேநேரம் ‘மதம் மாறியவரை கொன்று விடுங்கள்’ என்றும் வந்துள்ளது. மதசுதந்திரத்தை ஏற்றல், மதம் மாறியவரை கொல்லுதல் இவ்விரு நிலைப்பாடுகள் பற்றி வந்துள்ள குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் திரட்டிப் பார்க்கின்ற போது பின்வரும் முடிவுகளுக்கு வருவது பொறுத்தமானது:

* ஒவ்வொரு மனிதனும் தான் விரும்பிய மதத்தையோ கொள்கையையோ ஏற்றுக்கொள்ளும் உரிமையை இஸ்லாம் வழங்குகிறது. யாரையும் நிர்ப்பந்திக்க முடியாது. நாத்திக நிலையிலிருக்கும் ஒருவனைக்கூட நிர்ப்பந்தித்து மதத்தினுள் நுழைக்க முடியாது.

* இஸ்லாத்தை ஏற்று பின் தமது பழைய கொள்கைக்கு திரும்பியவர்கள் பற்றி பேசும் எந்தவொரு குர்ஆன் வசனமும் இவ்வுலக தண்டனை பற்றி பேசவில்லை. மறு உலக தண்டனை பற்றியே அவை பேசியிருக்கின்றன.

* கொலை செய்யப்படுவதற்கான காரணம் மதம் மாறியதல்ல, மாற்ற்மாக கொலைக்குரிய வேறொரு குற்றத்தில் ஈடுபட்டமையே என இன்னும் சில அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். பத்ஹு மக்காவின் பின் சிலர் கொல்லப்பட்டமைக்கான காரணம் அவர்கள் செய்த கொலைக்குரிய குற்றங்களே.
* மதீனா காலப்பிரிவு நிகழ்வுகளை ஆழமாகப்பார்க்கின்ற போது சில யஹூதிகளது மதமாற்றத்துடன் தொடர்பான நடவடிக்கைகளும் அக்கட்டங்களில் குர்ஆன் வழிகாட்டல்கள் எவ்வாறு அமைந்தன என்பதுவும் தெளிவாகிறது. சில யஹூதிகள் இஸ்லாமிய தூதின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தி சேறுபூசும் நோக்கில் இஸ்லாத்தை தாம் ஏற்றுக்கொண்டதாகவும் சில நாட்களின் பின் மீண்டும் பழைய கொள்கைக்கு மீண்டு விட்டதாகவும் கூறிவந்தனர். இது பற்றி இறங்கிய குர்ஆன் வசனம் அல்லாஹ் அவர்களை மன்னிக்க மாட்டான் என்று கூறியதே தவிர அவர்களை கொலை செய்ய ஒருபோதும் ஏவவில்லை.

#ct_h60s2nfah3oqiorg3p7e {font-size:12px;}

கூறியதே தவிர அவர்களை கொலை செய்ய ஒருபோதும் ஏவவில்லை.

* இஸ்லாத்திலிருந்து வேறு மதங்களுக்கு சென்று இஸ்லாத்துக்கெதிராக போராட்டக் களத்துக்கு வருபவர்களை கொல்லும் படி குர்ஆன் ஹதீஸ்களதும் வழிகாட்டல்கள் அமைந்திருக்கின்றன. அல்லது மதம் மாறிய ஒருவன் கொலைக்குரிய குற்றமொன்றை செய்திருப்பின் கொலைக்கு கொலை தண்டனை அவனுக்கும் நிறைவேற்றப்படும். இக்காரணங்கள் தவிர மதமாற்றம் என்ற ஒரே காரணத்துக்காக கொலை செய்யப்படல் பல குர்ஆன் வசனங்கள் முன்வைக்கும் மதசுதந்திரம் என்ற சிந்தனைக்கு முரண்படுவதாக அமைகின்றன.

* இன்னும் சில அறிஞர்கள் மதமாற்றத்தை நபி (ﷺ) அவர்களின் காலத்து சமூகவியல், அரசியல் பின்னணியில் நோக்குகின்றனர். கோத்திர கட்டமைப்பு வலுவாக ஊடுருவியிருந்த அச்சமூகத்தில் மதமாற்றம் என்பது வெறுமனே நம்பிக்கை கோட்பாடுகளை மாற்றிக்கொள்ளல் என்ற கருத்தையும் தாண்டி இன்னோர் அணியுடன் கைகோர்த்துக்கொண்டு ஆரம்பத்தில் இருந்த நம்பிக்கை கோட்பாட்டுக்கு எதிராக போராடுதல் என்ற நிலைதான் இருந்தது. இச்சமூக ஒழுங்கின் பின்னணியில் மதமாற்றத்தையும் அணுகமுடியும் என சில அறிஞர்கள் கருதுகின்றனர்.

3- மதபன்மைத்துவமும் நவீன உலகும்
நவீன உலக ஒழுங்கு மிக வித்தியாசமானது. பல புதிய சொற்கள் உலகில் அறிமுகமாகியிருக்கின்றன. பன்மைத்துவ சிந்தனை பல மட்டங்களிலும் வலியுருத்தப்படும் ஒன்று. பிறரை அங்கீகரித்தல், சகவாழ்வு, மதபன்மைத்துவம் போன்ற சொற்கள் மிக அதிகமாக பிரயோகிக்கப்பட்டு வருகின்றன. விரும்பிய மதத்தை அல்லது கொள்கையை ஏற்றுக்கொள்ளும் தெரிவுச்சுதந்திரத்தை குர்ஆன் சுன்னாவும் மனிதனுக்கு கொடுத்திருக்கிறது என்பதை ஆரம்பமாக விளக்கினோம். அவ்வாறிருப்பினும் இன்றைய முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் மதபன்மைத்துவம் பின்பற்றப்படும் விதம் கேள்விக்குரியானது. ஓர் ஆய்வின் முடிவுகள் இவ்வுண்மையை தெளிவிபடுத்துகிறது:
* மதகட்டுப்பாடுகள் மிக அதிகம் கொண்ட 10 நாடுகளில் 07 நாடுகள் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகள்.

* மதகட்டுப்பாடுகள் அரசாங்க ரீதியாக மிக தீவிரமாக அமுல்படுத்தப்பட்ட நாடுகளாக -2007காலப்பிரிவில்- மத்திய கிழக்கு, வட ஆபிரிக்க நாடுகளே கருதப்படுகின்றன.

* மதமாற்றம் விடயத்தில் கடுமையான சட்டங்கள் கொண்ட 29 நாடுகளில் 25 நாடுகள் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகள்.

*மதமாற்றம் காரணமாக உடலியல் ரீதியான அத்துமீறல்களுக்கு உட்பட்டவர்கள் அதிகம் கொண்ட 13 நாடுகளில் 10 நாடுகள் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகள்.
இவ்வாறான ஆய்வறிக்கைகளை வாசித்துப்பார்க்கின்ற போது சவூதி அரேபியா, எகிப்து போன்ற நாடுகளில் மதசுதந்திரம், மத பன்மைத்துவம் போன்றன மிகவுமே கீழ்மட்டத்தில் இருப்பதை புரிந்து கொள்ளலாம். இஸ்லாமிய ஷரீஆவின் முதல் இலக்கில் இருக்கும் கடும் பொடுபோக்கு இஸ்லாமிய தூது பற்றிய பிழையான புரிதலை வழங்கி விடுகிறது.

#ct_oyykwedna9e9e5ay6atp {font-size:12px;}

4- இலங்கையும் மதபன்மைத்துவமும்

ஒரு நாட்டின் தன்மைகளையும் பண்புகளையும் அந்நாட்டின் சட்டயாப்பினூடாக புரிந்து கொள்ள முடிகிறது. ஆரம்பமாக சட்ட யாப்பின் உள்ளடக்கமும், பின் சட்டவாட்சியும் முக்கியமானது. அவ்வகையில் இலங்கை சட்டயாப்பு மதபன்மைத்துவத்தை எவ்விதத்தில் அணுகியிருக்கிறது என்பதை இங்கு பதிவது பொறுத்தமானது. 1978 யாப்பின் இரண்டு மற்றும் மூன்றாம் அத்தியாயங்கள் மதபன்மைத்துவம் அல்ல்து மத சுதந்திரத்துடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கின்றன. இரண்டாம் அத்தியாயம் பெளத்த மதம் பற்றியும் மூன்றாம் அத்தியாயம் அடிப்படை உரிமைகள் பற்றியும் பேசுகின்றன. பெள்த்த மதம் பற்றிய அத்தியாயம்:இலங்கை குடியரசில் பெளத்த மதத்துக்கு முதன்மை இடம் வழங்கப்படுதல் வேண்டும் என்பதோடு அதற்கிணங்க 10ம், 14 (1)(உ) ம் உறுப்புரைகளால் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை எல்லா மதங்களுக்கும் காப்புறுதி செய்யும் அதேவேளை, பெளத்த சாசனத்தை பாதுகாத்தலும் பேணிவளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தல் வேண்டும்.
இங்கு எழுதப்பட்டிருக்கும் கருத்துக்களில் சில கருத்துவேறுபாடுகள் இருக்கின்றன என்பதை அரசியல் துறை அறிஞர்களது கருத்துக்களை வாசித்துப்பார்க்கின்ற போது புரிந்து கொள்ள முடிகிறது. பெளத்த மத்தத்துக்கு ‘முதன்மை இடம்’ வழங்கள் என்ற பகுதியில் இரு வகையான கருத்துக்கள் நிலவுகின்றன. பாதிரியார் இந்தமல்கொட போன்றோர் இவ்வசனப்பிரயோகம் சிறுபான்மையை சமஅந்தஸ்து கொடுத்து பார்ப்பதாக இல்லை என்றும் மதகிரியைகளுக்கு தடைவிதிக்காத இன, மத வேறுபாடின்றி அனைவரையும் சமமாக மதிக்கும் மதச்சார்பின்மை அரசு எனும் நிலைக்கு நிலைமாற்றம் பெற வேண்டும் என்ற வாதத்தையும் முன்வைக்கின்றனர். மறுபுறம் பெளத்த தலைமைகள் இவ்வாதத்தை ஏற்றுக்கொள்வதாக இல்லை. உத்தியோகபூர்வ மதம் ஒரு நாட்டைப்பொறுத்தவரை அவசியமானது என்ற கருத்தை அவர்கள் வலியுருத்துகின்றனர். இம்முரண்பாட்டை தீர்ப்பதென்பது இலகுவானதொன்றல்ல. கிட்டத்தட்ட 70 சதவீத சனத்தொகை கொண்ட பெளத்த பெரும்பான்மை இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதாக இல்லை.

அத்தியாயம் மூன்று அடிப்படை உரிமைகள் பற்றி பேசுகிறது. குறிப்பாக இவ்வத்தியாயத்தின் 10,11,12 ம் உறுப்புரைகள் மதசுதந்திரம், இன மத பேதங்களுக்கப்பால் நாட்டுப்பிரஜைகள் யாவரும் சமன் என்ற கருத்தை வலியுருத்துகிறது. ஒப்பீட்டளவில் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளை விட மதசுதந்திரம் இலங்கையில் மிக அதிகமாகவே வழங்கப்படுகிறது என்பதை இலகுவாக புரிந்து கொள்ளலாம். நடைமுறை ரீதியாகவும் இலங்கை முஸ்லிம்களும் தமிழர்களும் போதியளவு சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை.மறுபுறம் சிறுபான்மைக்கெதிரான அசம்பாவிதங்களும் உரிமை மீறல்களும் நடக்காமலுமில்லை. அவை சட்டவாட்சியினூடாகவே திருத்தப்படவேண்டும்

#ct_3ktov2m2sadjd33ix1mk {font-size:12px;}

முடிவு

ஷரீஆவின் முதல் இலக்கு ‘மதத்தைப்பாதுகாத்தல்’. நவீனகாலத்தில் இப்பிரயோகம் ‘மதசுதந்திரம்’ அல்லது ‘மதபன்மைத்துவம்’ போன்ற கருத்தில் பயன்படுத்தப்படுகின்றது. மதசுதந்திரம் வழங்குவதையும் மதபன்மைத்துவத்தை அங்கீகரிப்பதையும் குர்ஆன் சுன்னாவும் மிகவுமே வலியுருத்தியிருக்கிறது. அவையிரண்டும் பிழையாக புரியப்பட்டதன் காரணமாக மதமாற்றம் போன்ற நிகழ்வுகளுக்கு கடுமையான தண்டனையை இஸ்லாம் வழங்குகிறது என்ற முடிவு பெறப்பட்டிருக்கிறது. நவீன இஸ்லாமிய சிந்தனையாளர்கள் சட்டப்பகுதியை மீள்வாசிப்புசெய்கின்றனர். இறுதியாக மதபன்மைத்துவத்தை நடைமுறைப்படுத்தும் நாடுகளில் மிகவும் கீழ்மட்டத்தில் இருப்பவை முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் என்பதுதான் கவலைக்குரியது. மதபன்மைத்துவத்தில் இலங்கை ஓரளவு ஆரோக்கியமான நிலையில் இருப்பதாக கருதலாம்.

குறிப்பு: நவமணியில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை. தலைப்பில் சிறுமாற்றத்துடன் மீள்பிரசுரிக்கப்படுகிறது.

#ct_4eyad54t3jq6p9jnbwee {font-size:12px;}

Alwasath.org