Friday , November 24 2017

அஸ்ஹர் பிரதியதிபருடைய கைதும் சமூகத்தின் கடமையும்

அஸ்ஹர் பிரதியதிபருடைய கைது அக்குறணை சமூகத்தையே சோகத்திற்கும், பேரதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது. குறுகிய எண்ணங்கொண்ட ஒரு சிலரால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையால் பிரிதியதிபருக்கும், அந்தக் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் ஏற்பட்ட இழப்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது.

ஒவ்வொரு நிகழ்வும் விலைமதிக்க முடியாத பல படிப்பினைகளை விட்டுச்செல்லும். அத்தோடு நல்ல பல மாற்றங்களுக்கும் காரணமாக அமைந்துவிடும். அந்த வகையில், இச்சம்பவம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் முறையாக அடையாளங் காணப்பட்டு, நல்ல திசையை நோக்கி நகர்த்தப்படல் வேண்டும்.

இதற்காக, பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள், சமூகத் தலைமைகள் மற்றும், குறிப்பாக இப்பிரச்சினையின் பின்னணியில் இருக்கின்ற சகோதரர்கள் உட்பட எல்லா மட்டத்தினரும் அல்லாஹ்வுக்காகத் தங்களது செயற்பாடுகள் பற்றி மீள்பரிசீலனை செய்துகொள்ள முன்வர வேண்டும்.

எனது நடவடிக்கைகள் எந்த வகையில் பாடசாலையின் அபிவிருத்திக்குப் பங்களிக்கின்றது? அந்த நடவடிக்கைகள் பாடசாலைக்கும், சமூகத்திற்கும் எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றதா? என ஒவ்வொருவரும் தங்களை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

அண்மையில் அக்குறணையிலுள்ள கிராமப்புறப் பாடசாலை ஒன்றிற்கு, அப்பாடசாலையின் தேவை கருதி பெற்றோரால் பணம் வசூழிக்கப்பட்டிருக்கின்றது.

ஒரு தாய் தனது பிள்ளையின் மருத்துவச் செலவுக்காக சேர்த்து வைத்திருந்த சுமார் 3000 ரூபாயை கொண்டுவந்து கொடுத்திருக்கின்றார். வசதி குறைந்த அந்தத் தாயின் நிலமையை நன்கு அறிந்த அந்தப் பெற்றோர் குழுவினர், “ நீங்கள் பணம் வழங்காவிட்டாலும் பரவாயில்லை. எனவே, உங்களது பணம் தேவையில்லை” என்று வாங்க மறுத்துள்ளனர். அவ்வளவு கஷ்டமான நிலையில் வாழ்ந்து வருபவர் அத்தத் தாய்.

உடனே அவர், “இல்லை. நானும் இந்தப் பாடசாலைக்கு என்னுடைய பங்களிப்பைச் செய்ய வேண்டியிருக்கின்றது. எனவே, இந்தப் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.

எவ்வளவு அழகான அணுகுமுறை, எவ்வளவு அழகான பங்களிப்பு. இந்தப் பங்களிப்பில்தான் பரக்கத் இருக்கின்றது. மாற்றமாக, அடுத்தவர்களது நிலமை விளங்காது, கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அவர்களை அசௌகரியங்களுக்கு ஆளாக்குகியிருக்கின்றோமா என்று பணம் வசூலிக்க முன்வருகின்ற பெற்றோர் சிந்திக்க வேண்டும், இதனை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும்.

பணம் இல்லாமல் பாடசாலையை நடாத்த முடியாது. இருந்தாலும், பெற்றோரிடமிருந்துதான் பணம் சேகரிக்கப்பட்டு குறித்த தேவை நிறைவு செய்யப்படல் வேண்டும் என்ற நிலையை முடியுமானவரை மாற்றியமைக்க வேண்டும்.

குறிப்பாக, எங்களது சமூகத்தைப் பொறுத்த வரையில் எல்லாவற்றையும் மக்களது பணத்தைக் கொண்டே செய்துகொள்ள வேண்டியிருக்கின்றது.
நாங்கள் வாக்களித்து பாராளுமன்றம், மாகாண சபைகள் சென்றவர்கள் பொறுப்போடு, முறையாகப் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, நிவர்த்தி செய்தால் பிரச்சினைகள் எதற்கு? பாடசாலையின் அடிப்படைத் தேவைகளுக்கு பெற்றோர்களிடமிருந்து பணம் எதற்கு?

தேர்தல் காலத்தில் மாத்திரம் வாக்குப் பிச்சை கேட்டு வருகின்றவர்கள் தங்களது பொறுப்பை மறந்து செயல்படுகின்றதன் விளைவுகள்தான் இவை. பெற்றோர் ஒன்றிணைந்து எங்களது அரசியல்வாதிகளை அணுக வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கெதிராக வீதியில் இறங்கிப் போராட வேண்டும். நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட திகதி போன்று காத்திருக்க வேண்டியதில்லை. அந்தப் போராட்டங்களுக்கு உடனடிப் பெறுமானங்கள் பல காத்திருக்கின்றன என்பதை உணர வேண்டும்.

அடுத்தாக, யார் என்ன உதவினாலும், எவ்வளவு செலவு செய்தாலும், ஆசிரியர்கள் திறந்த மனதுடன் பணியாற்றாத வரையில் கல்வி அபிவிருத்தியையோ, மாணவர்களில் ஏனைய நல்ல மாற்றங்களையோ எதிர்பார்க்க முடியாது.

ஆசிரியர்களுக்கு மரியாதை வழங்குவது குறைவு என்று சொல்லப்படுகின்ற ஒரு வியாபார சமூகத்தில், ஒரு ஆசிரியருக்காக ஆயிரக்கணக்கானவர்கள் பாதையில் இறங்கினார்கள். இரவு பகலாகப் பிரார்த்தித்தார்கள். நோன்பு நோற்றார்கள். லட்சக் கணக்கில் செலவு செய்தார்கள். பல சகோதரர்கள் முழு மூச்சாக அவரது விடுதலைக்காகப் பாடுப்பட்டார்கள்.

இவ்வாறு, வேறு எந்த துறையைச் சேர்ந்தவர்களுக்காவது நடக்குமா? வாய்ப்பேயில்லை. எனவே, ஆசிரியர்கள் மீது பெற்றோரும், ஏனையவர்களும் எவ்வளவு மதிப்பும், மரியாதையும், நம்பிக்கையும், அன்பும் வைத்திருக்கின்றார்கள் என்பதை இந்த நிகழ்வுகள் உணர்த்தியிருக்கின்றன.

இது, ஆசிரியர்கள் மத்தியில் சமூகம் குறித்த நல்லதொரு பதிவை ஏற்படுத்தியிருக்கும், ஆசிரியர் தொழிலின் உண்ணதத் தன்மையை உணர்த்தியிருக்கும். சமூகமானது, ஆசிரியர்கள் மீது பெரியதொரு நம்பிகையை வைத்திருக்கின்றது என்பதை மனப்பூர்வமாக உணர்ந்து பணியாற்றுவதற்கு வழிவகுக்கும் என நம்புகின்றேன்.

அத்துடன், ஒருசிலர் குறுகிய எண்ணத்துடன், தமது சொந்த நிகழ்ச்சி நிரலை பாடசாலையில் அரங்கேற்றிக்கொள்ள முடியாது போன வைராக்கியத்தில், சித்த சுவாதீனமற்றவர்கள் போன்று நடந்து சமூகத்தின் மானத்தை கப்பலேற்றிக் கொண்டிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது.

எல்லாப் பக்கத்திலும் குறைகளும், பிரச்சினைகளும் இருக்கலாம். ஆனால், ஏனையவர்கள் யாரும் பாடசாலைக்கும், சமூகத்திற்கும் இவ்வாறான மிக மோசமான பணிகளுக்குத் துணைபோகவில்லை. ஆதரவளிக்கவில்லை.

எனவே, குறித்த சகோதரர்கள் மக்களது உணர்வுகளைப் புரிந்து நடந்தகொள்ள வேண்டும். தங்களது செயல்பாடுகளினால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள ஈடுசெய்ய முடியாத இழப்புக்களை எண்ணிப்பார்க்க வேண்டும். இல்லாவிட்டால், இந்த உலகிலும் மறுமையிலும் நிறையவே கைசேதப்பட வேண்டியிருக்கும்.

Irfan Cader