Monday , May 1 2017

லசித் மலிங்கா போல திறமையானவர் பும்ரா: பிரபல கிரிக்கெட் வீரர் புகழாரம்

இலங்கை அணி வீரர் மலிங்கா போன்று பந்து வீச்சில் சிறப்பாக செயல்படுவதாக இந்திய இளம் வீரர் பும்ராவுக்கு மூத்த வீரர் ஆசிஷ் நெஹ்ரா புகழாரம் சூட்டியுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற 2வது T20 போட்டியில் இந்திய பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா கடைசி ஓவரில் திறம்பட பந்து வீசியதால் இந்திய அணி வெற்றி பெற்றது.

இதுகுறித்து இந்திய அணியின் 37 வயதான சீனியர் வேகப்பந்து வீச்சாளர் நெஹ்ரா கூறுகையில், நாக்பூர் போட்டியில் 145 ஓட்டங்களே சேர்த்தபோதும் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் வீழ்த்தி நெருக்கடி கொடுத்தோம்.

அமித் மிஸ்ரா மட்டும் நோ பால் வீசாமல் இருந்திருந்தால் ஆட்டத்தை முன்கூட்டியே முடித்திருந்திருப்போம்.

கடைசி வரை ஜஸ்பிரித் பும்ரா மிகச்சிறப்பாக பந்து வீசினார். பும்ரா இதுபோன்று சிறப்பாக செயல்படுவது ஒன்றும் முதன்முறையல்ல.

ஆரம்பத்தை விட அதிக நெருக்கடியான கடைசி கட்டத்தில் சிறப்பாக செயல்பட பும்ரா அதிகம் விரும்புவார்.

பழைய பந்துகளில் யார்க்கர் பந்துகளை வீசுவதில் பும்ரா லசித் மலிங்கா போல தனித்துவமாக செயல்படுபவர் என தெரிவித்துள்ளார்.