Wednesday , June 28 2017
Breaking News

அமெரிக்க ஜனாதிபதியின் நிர்வாக ஆணை என்பது இதுதான்

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற முதல் வாரத்திலேயே குறைந்தது நான்கு நிர்வாக ஆணைகளை பிறப்பித்துள்ளார்.

நிர்வாக ஆணைகள் என்பவை, அரசு கொள்கைகளில் தனது முத்திரையைப் பதிக்க விரும்பும் எந்த ஒரு அமெரிக்க ஜனாதிபதிக்கும் கிடைக்கும் ஒரு முக்கிய கருவியாகும்.

ஒபாமா, நிர்வாக ஆணை அதிகாரத்தைப் பயன்படுத்தி, சுகாதாரம், ஒருபாலுறவினர் உரிமைகள் போன்ற விஷயங்களில் உத்தரவுகளைப் பிறப்பித்தபோது, அவர் தன் அதிகார வரம்பை மீறுகிறார் என்று குற்றம் சுமத்திய குடியரசுக் கட்சியினர்,

தற்போது ஒபாமாகேர் என்ற அந்த சுகாதாரத் திட்டத்தை விலக்கிக்கொள்ள, டொனால்ட் டிரம்ப் அதே யுக்தியைப் பயன்படுத்திய போது பாராட்டியிருக்கிறார்கள்.

நிர்வாக ஆணை என்பது, ஜனாதிபதி, மத்திய அரசுக்குப் பிறப்பிக்கும் எழுத்துபூர்வமான உத்தரவே ஆகும். இதற்கு நாடாளுமன்ற ஒப்புதல் தேவைப்படாது.

குறித்த ஆணைகள், கடும் சர்ச்சைக்குள்ளான இரண்டு எண்ணெய்க் குழாய்ப் பாதைக் கட்டுமான திட்டங்களுக்கு டிரம்ப் ஒப்புதல் வழங்கியதைப் போன்ற கொள்கை முடிவுகளை பரபரப்பான வகையில் விலக்கிகொள்வது முதல்,

2015 ஆம் ஆண்டு, கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாள் அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை தர ஒபாமா உத்தரவு தெரிவித்தது போன்ற சாதாரணமான நிர்வாக விஷயங்கள் வரை பயன்படுத்தப்படலாம்.

சில நேரங்களில் போர்க்காலங்களின் போதோ அல்லது உள்நாட்டு நெருக்கடியைத் தவிர்க்கவோ, நிர்வாக ஆணைகள் பிறப்பிக்கப்படுகின்றன.

அமெரிக்க ஜனாதிபதி ஃபிராங்க்ளின் டி.ரூஸ்வெல்ட் சுமார் 1.20 லட்சம் ஜப்பானிய அமெரிக்கர்களைத் தடுத்து வைக்கும் மையங்களை உருவாக்க வித்திட்ட நிர்வாக ஆணையை, 1942ம் ஆண்டு பிப்ரவரியில் பிறப்பித்தார்.

அதே போல, 1952 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஹாரி எஸ்.ட்ரூமன் ஒரு வேலை நிறுத்தத்தைத் தவிர்க்கும் நோக்கில், எஃகுத் தொழில்துறையை அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவரும் உத்தரவைப் பிறப்பித்தார்.

மிக பிடிவாதமாக இருந்த, குடியரசுக் கட்சியினர் உருவாக்கிய சிக்கலான முட்டுக்கட்டை நிலையை சமாளிக்க ஒபாமா அவரது நிர்வாக ஆணைகளிலேயே மிக சர்ச்சைக்குரிய நிர்வாக ஆணையைப் பிறப்பித்திருந்தார்.

ஜனாதிபதி ரூஸ்வெல்ட் பதவியில் இருந்த 12 வருடங்களில் 3,721 ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. ஒபாமா வெறும் 279 ஆணைகளை தான் பிறப்பித்தார். ஜார்ஜ் .டபள்யு.புஷ் தனது எட்டு ஆண்டு கால ஆட்சியில் 291 ஆணைகளை பிறப்பித்தார்.

நவீன கால அளவுகோல்கள்படி ஒப்பீட்டு அளவில், ஒபாமாதான் குறைந்த எண்ணிக்கையில் நிர்வாக ஆணைகளை பிறப்பித்தார் .

இது நாள் வரை இருந்த அதிபர்களில், மிக குறைந்த நிர்வாக ஆணைகளை பிறப்பித்தவராக கருதப்படும் அதிபர் குரோவர் கிளீவ்லேண்ட், 1885-89 வரை மற்றும் 1893-97 வரை தனது ஆட்சியில் ஒரு ஆண்டிற்கு சுமார் 32 ஆணைகளை பிறப்பித்தார். அதோடு ஒப்பிட்டால், ஒபாமா ஒரு ஆண்டில் சுமார் 35 ஆணைகளை ஒபாமா பிறப்பித்துள்ளார்.

ஆனால் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் ஜனாதிபதியை செயல்பட அனுமதிக்கின்றன என்பதால், நிர்வாக ஆணைகள் சர்ச்சைக்குரியவையாகின்றன.