Friday , November 24 2017

அக்குரணை அஸ்ஹர் கல்லூரி ஆசிரியை கைதும் எமது சமூகப் பொறுப்பும் ..

சில தினங்களுக்கு முன், அக்குரணை அஸ்ஹர் கல்லூரியின் பிரதி அதிபர்  இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நிகழ்வு, பலமட்டத்திலும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக முக நூலில் இவ்விவாகரம் குறித்து பல்வகைக் கருத்துக்களும், விமர்சனங்களும் பரிமாறப்பட்டு வருகின்றன. 

தரம் ஆறு புதிய மாணவர்கள் அனுமதியை தொடர்ந்து, வகுப்பறை உட்கட்டமைப்பு உட்பட இன்னும் சில அடிப்படை அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான நிதி பற்றாக்குறையின் நிமித்தம், பெற்றோர்கள் மத்தியில் ஒரு குழு அமைக்கப்பட்டு மாணவர்களிடேயே நிதி வசூல் செய்வதற்கு, தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த வசூல் நடவடிக்கைக்கு குறிப்பிட்ட ஒரு பெற்றோர் எதிர்பினை தெரிவித்ததனை அடுத்தே, பிரதி அதிபரின் கைது நடவடிக்கை இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது. 

இந்த சம்பவத்தின் பின்னரான கருத்தாடல்கள், நேர்மையானதாக, ஒழுங்குபடுத்தப்பட்டதாக, சம்பவத்தின் பின்னனியை முறையாக அலசி ஆராய்ந்து மனசாட்சிக்கு விரோதமில்லாததாக இருக்க வேண்டும் என்பதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். வெறுமனே மேம்போக்கான, எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற நிலைப்பாடு ஆரோக்கியமானதல்ல. “ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கப்படலாம்; ஆனால் ஒரே ஒரு நிரபராதியேனும் தண்டனை பெறக்கூடாது” என்ற உண்மைத் தத்துவத்திற்கேற்ப கைது செய்யப்பட்ட ஆசிரியை மீதான மிக மிக ஆழமான வாசிப்பு அவசியம். “ஆசிரியை இலஞ்சம் பெற்று விட்டார், இதற்கு வக்காலத்து வாங்கக் கூடாது” என்ற ஒற்றை வார்த்தை விமர்சனங்கள் மிகவுமே ஆபத்தானது. மட்டுமல்லாமல் ஆசிரியை நிரபராதியாக இருந்து அவரால் இந்த அநியாத்திற்கு எதிராக கேட்கப்படும் பிரார்த்தனைக்கும் இறைவனிடத்தில் மிகபெரிய இடம் உண்டு என்பதையும் மனதிற் கொள்ளுதல் வேண்டும். அல்லாஹ் நம்மனைவரையும் பாதுகாப்பானாக!

குறித்த கைது நடவடிக்கையின் பின்னனியை சற்று ஆராய்ந்தால், பாடசாலை அபிவிருத்திக் குழு மற்றும் பழைய மாணவர் சங்கம் ஆகிய குழுக்களின் அதிகாரப் போரட்டத்தின் நீண்டகால இழுபறி நிலைக்கு மத்தியிலே, பிரதி அதிபர்  திட்டமிடபட்டு பொறியில் சிக்கவைக்கப்பட்டுள்ளார் என்பதே தெளிவாகின்றது.

ஒரு சாராரின் பாடாசாலை மேலாண்மையை முடக்குவதற்கான ஒரு கருவியாகவே இதனை திட்டமிட்டு ஒரு குழு நகர்த்தியுள்ளது. குறிப்பிட்ட சிலரின் சுய நலன்களுக்காக இத்தகைய ஒரு ஈனச்செயலை கட்டவிழ்த்துவிட்டிருப்பதானது ஒட்டுமொத்த ஊருக்கே அவமானம் மட்டுமல்லாமல், ஊரின் கல்வி வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாகவும் உறுவெடுத்திருக்கிறது. 

அரசாங்க பாடசாலைகளின் வளப் பற்றாக்குறைகளை அரசாங்கமே நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதே நியதி. ஆயினும் அரசாங்கத்தின் வரவு செலவு திட்ட அறிக்கையின் அடிப்படையில் கல்விக்கான ஆண்டு நிதி ஒதுக்கீட்டின் மூலம் நாடு தழுவிய பாடசாலைகளின் ஒட்டுமொத்த தேவைகளையும் நிவர்த்தி செய்வதென்பது மிகவுமே அசாத்தியமானது. இதனால்தான் பாடசாலை தழுவிய தன்னார்வ குழுக்கள் நாடு முழுவதும் இயங்கி வருகின்றன. இத்தகையதோர் செயற்பாடு என்பது கல்வி அமைச்சின் சுற்றறிக்கையிலும் தடைசெய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அவ்வாறானதொரு குழுவின் ஊடாகவே குறித்த ஆறாம் தர மாணவர்களின் வளப்பற்றாகுறைக்கான நிதி சேகரிப்பு நடவடிக்கையும் இடம்பெற்றது என்பது ஊரறிந்த உண்மை. இதில் மாணவர்களிடத்தில் எந்த வற்புறுத்தல்களும் கையாளவில்லை  என்பதும் தெளிவு. எனினும் இதனை  ஒரு குழு கச்சிதமாக பயன்படுத்தி தலைமறைவில் சதி செய்து குளிர்காய நினைத்துள்ளனர் என்பதே புலனாகின்றது. 

மேலும் இதில் நாம் ஓர் உண்மையையும் புரிந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம். அதாவது,

நேரடியாக, சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர் குழுவினூடாக நிதிசேகரித்த விடயம் விமர்சனத்திற்குறியது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பாடசாலைகளில் இத்தகைய பொறிமுறைகள் நீங்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. காரணம் பாடசாலையை அடிப்படையாக கொண்ட குழுக்கள் ஏலவே செயற்பாட்டில் இருக்கின்றன. அந்த குழுக்களினூடாகவே குறித்த நிதியும் திரட்டப்பட்டிருக்க வேண்டும். ஏழை, எளிய மாணவர்கள் இதனால் அசௌகரியப்படுவது தவிர்க்கப்படும். என்றாலும் நடைமுறையிலுள்ள குழுக்களின் பலதரப்பட்ட உட்பூசல்களினால் இத்தகையதோர் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தம் இருந்திருக்கலாம். எனவே ஒட்டுமொத்தமாக இந்த நடவடிக்கையை இலஞ்சம், ஊழல் என்ற கண்ணோட்டத்தில் நோக்க முடியாது. ஓர் சிறந்த மாற்றுத் தீர்வுக்கான வழிகாட்டுதலாகவே இச்செயற்பாட்டை அணுகவேண்டுமே தவிர கை நீட்டி குற்றம் சுமத்துவதற்கு எவ்வித நியாயமும், முகாந்திரமும் இல்லை.

அடுத்து, இச்சம்பத்திலிருந்து பாடசாலையின் எதிர்காலம், முன்னேற்றம் கருதி பல சீர்திருத்தங்களை நோக்கி நகர வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். குறிப்பாக பாடசாலை தழுவிய தன்னார்வ குழுக்களின் அதிகாரப் போட்டி, பொறாமை, ஒற்றுமையின்மை போன்றன முற்றாக துடைத்தெறியப்படல் வேண்டும். தற்போது செயற்பாட்டில் இருக்கின்ற குழுக்கள் கலைக்கப்பட்டு ஜனநாயக முறையில் தகுதிவாய்ந்த புதிய நிர்வாகத்தினர் தேர்வு செய்யப்படல் வேண்டும். குழுக்களின் கொள்கை யாப்பு, ஒழுக்கக் கோவை என்பன தயார்செய்யப்பட்டு, முறைசாரா நடவடிக்கையின் போது மக்கள் கேள்வி கேட்டு நடவடிக்கை எடுக்கும் விதமாக அவைகள் முறையாக ஒழுங்குபடுத்தப்படல் வேண்டும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை பகிரங்கமாக பொதுமக்கள் முன்னிலையில் ஆதாரங்களுடன் கணக்கறிக்கை வெளியிடப்படல் வேண்டும்.  மேலும் பாடசாலையில் கல்வி கற்கும் ஏழை, எளிய மாணவர்கள், தனித்துவமாக இணங்காணப்பட்டு அவர்களை விசேடத்துவமாக கவனிக்க வேண்டும்.    எல்லாவற்றிற்கும் மேலாக, எவ்வித சுய இலாபமும் இன்றி இறைவனிடத்தில் மட்டுமே கூலியை எதிர்பார்த்து சமூகத்தின் தூணான கல்விக்கு பங்களிப்புச் செய்கிறேன், என்ற தூய எண்ணம் அனைத்து அங்கத்தவர்களிடமும் கட்டாயம் இருக்க வேண்டும்.  

சுய நல நோக்கற்ற பொது நல நோக்குக் கொண்ட ஓர் ஈமானிய ஊரின் உறுவாக்கத்தைக் கொண்டே சிதைக்கப்பட்ட கல்விப் பாதையினை முறையாக செப்பனிட முடியும் என்பதை அடிமனதில் ஆழமாக பதிந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம். 
Originally posted by Madawelanews