Friday , November 24 2017

ஒரு பெண் ஆசிரியையை தடுப்புகாவலில் வைத்து உளம் மகிழ்கின்ற உள்ளங்கள்

கட்டுரைக்கு செல்லும் முன்: ஆக்கத்தில் இரு குழுக்கள் என்று குறிப்பிட்டு இருந்தாலும், இது ஒரு மிக சிறிய குழு (சில நபர்களின்) அவர்களது சொந்த நலனுக்காகவும்; தனிப்பட்ட காரணங்களுக்காகவும் செய்த ஒரு வேலையாகும்; இதனை அடுத்து நடந்த விடயத்தினை கேள்விப்பட்டு கொதித்து எழுந்த அஸ்ஹர் கல்லூரி பெற்றோர், பழைய மாணவர்கள், ஊர் நலன்விரும்பிகளின் போராட்டமே இதற்கு சாட்சியாகும். 100 வருடம் பழமையான கல்லூரியின் எதிர்காலத்தினை சில நபர்கள் நாசமாகுவதினை இனி ஒருபோதும் அனுமதிக்க முடியாது !! கூடாது என்பதுவே அனைவரினதும் ஒருமித்த கருத்தாக இருந்தது

அக்குரணை ஆசிரியை விளக்கமறியல்;ஒரு ஆய்வுக்கண்ணோட்டம்…

அரசாங்கம் இலவசக் கல்வி என்றும் பாடசாலைகளின் அபிவிருத்தி என்றும் அவ்வப்போது பற்பல திட்டங்களை அறிமுகப்படுத்தினாலும் அவற்றால் நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் தன்னிறைவுடன் அபிவிருத்தி காண்பதென்பது அரிதான ஒன்றாகும்.

அதற்காகவேதான் பாடசாலைகள் அமையப்பெற்றுள்ள பகுதிகளில் மாணவர்களின் பெற்றோர்களால், அப்பாடசாலையின் பழைய மாணவர்களால் பாடசாலையின் பௌதீக வளங்கள் மற்றும் ஏனைய துறைகளில் அக்கறை செலுத்தும் முகமாக சில, பல குழுக்களை அமைக்கின்ற நடைமுறை நாடு தழுவிய மட்டத்தில் இருந்துவருகிறது.

இருந்தபோதிலும் அவ்வாறு அமைக்கப்படுகின்ற குழுக்கள் பாடசாலைகளின் கல்விசார் நிருவாக கட்டமைப்புக்களில் செல்வாக்குச் செலுத்தும் விதமாக செயற்படுகின்றபோது அங்கே சில குழப்பங்களும் விரிசல்களும் தோற்றம் பெறுகின்றன.

அக்குரணை அல் அஸ்ஹர் மத்திய கல்லூரின் உப அதிபர் றுகையா ஆசிரியை கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டு தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்ற விவகாரத்தின் பின்புலமும் பாடசாலையின் நலன் கருதி அமைக்கப்பட்ட மேற்குறித்த குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட ஒரு முரண்பாடாகவே தெரியவருகிறது.

சுமார் 1600 மாணவர்கள் கல்வி கற்கக்கூடிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் மேற்கொண்டு நடப்பாண்டிற்கான தரம் ஆறு மாணவர்களை சேர்ப்பதில் ஏற்பட்ட தளபாடப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாகவே பெற்றோர்களால் ஒரு நிதி வசூலிப்பு இடம்பெற்றுள்ளது.

புதிதாக இணைக்கப்படவுள்ள சுமார் 240 மாணவர்களின் தளபாடத் தேவையினைக் கருத்திற்கொண்டு இந்த நிதி வசூலிப்பின்போது பெற்றோர்கள் ஒவ்வொருவரும் ரூபாய் இருபதாயிரம் என்று தீர்மானிக்கப்பட்டு அது படிப்படியாகக்குறைக்கப்பட்டு ஈற்றில் 5000 ரூபாய் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.

இதன்போது இப்பிரச்சினையின் தண்டுவடமாக கருதப்படுகின்ற ஒரு மாணவனின் பெற்றோர்களுக்கு இந்த 5000 ரூபாயை செலுத்துவதற்கான பொருளாதார வசதி நிலை இல்லாதுபோன போது அத்தொகையை செலுத்தத்தேவையில்லை என்றும் குறித்த நிதி வசூலிப்பில் ஈடுபட்ட ஏனைய பெற்றோர்களால் கூறப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் அப்பாடசாலையில் பௌதீக வளங்களின் நன்மை கருதிய இரு குழுக்களிடையே ஏற்பட்ட முரண்பாடே அந்த 5000 ரூபாய் செலுத்தாத பெற்றோரை கருவியாகப் பயன்படுத்தி அவர் மூலமாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினருக்கு தகவல் வழங்கி ஒரு நாடகத்தனமான முறையில் அவ்வாசிரியை பொறியில் சிக்கவைக்கப்பட்டுள்ளார்.

இத்தனைக்கும் குறித்த ஆசிரியை மட்டுமல்லாது அப்பாடசாலை கூட இந்த நிதி சேகரிக்கும் விடயத்தில் சம்பந்தப்படவில்லை என்பது இப்போது தெரியவருகின்றது. ஆனாலும் அப்பாடசாலையின் உப அதிபரான அவ்வாசிரியையே இந்த நிதி சேகரிப்பை வற்புறுத்தியது போன்ற வடிவம் ஒன்று கற்பிக்கப்பட்டுள்ளது.

எது எவ்வாறாக இருப்பினும்,
குறித்த அந்த ஆசிரியை அக்குரணையைச் சேர்ந்த ஒருவரல்ல. அவர் கலகெதர பகுதியில் வசிக்கின்ற ஒருவர். மேலும் மேற்படி பாடசாலையில் பலவருட காலமாக கல்வி கற்பிக்கின்ற ஒருவர். கலகெதரயிலிருந்து அக்குரணைக்கு வந்து அவர் மேற்கொள்கின்ற கற்பித்தல் நடவடிக்கையினால் அக்குரணை வாழ் முஸ்லிம் சமூகம் கண்ட, இனிக்காணவிருக்கின்ற கல்விரீதியான முன்னேற்றம் இங்கே கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

மட்டுமல்லாது அவ்வாசிரியயுடைய மகளுக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் ஏற்பாடாகியிருந்தது. இந்த சூழலில் அவ்வாசிரியை தடுப்புக்காவலில் இருப்பதால் தனிப்பட்டரீதியாக அவர் எதிர்நோக்குகின்ற சவால்களை சற்று உணர்ந்து பார்ப்பது கட்டாயமானது.

மட்டுமல்லாது அக்குரணை பிரதேசம் என்பது தனியாக முஸ்லிம்கள் மாத்திரமே செறிவாக வாழக்கூடிய ஒரு பிரதேசம் என்று மார்தட்டிப்பேசப்படுகின்ற ஒரு பிரதேசமாகும். மேலும் வசதி படைத்த பல செல்வந்தர்களின் பூர்வீகமாகவும் அக்குரணை இருக்கின்றது.

மேலும் இலங்கை நாட்டிலேயே ழுஹர் தொழுகைக்காக பாடவேளையில் பத்து நிமிடம் ஒதுக்கிவிட்டு தொழுகையை மைதானத்தில் ஜமாஅத்தாக தொழும் முறையை அறிமுகப்படுத்தியது இந்த அக்குரணை அஸ்ஹர் மத்திய கல்லூரியேயாகும்.

அப்படியிருக்கும்போது கல்விக்கு உதவியளிக்கின்ற, கல்வியாளர்களை உருவாக்கும்படி ஊக்குவிக்கின்ற, கல்விக்கு நன்கொடைகளை வழங்கும்படி வலியுறுத்துகின்ற உன்னதமான வாழ்வியல் நெறியைப் பின்பற்றுகின்ற நாம் ஒரு பாடசாலைக்கு நிதிவழங்கிய விவகாரத்தில் நமது உடன்பிறவா சகோதரியாகிய, நமது குழந்தைகளுக்கு வருடக்கணக்கில் கல்வியூட்டிய ஒரு பெண் ஆசிரியையை இன்று தடுப்புகாவலில் வைத்து உளம் மகிழ்கின்ற அளவுக்கு நமது உள்ளங்கள் கனத்துவிட்டனவா என்றொரு நியாயமான கேள்வியும் இங்கே தவிர்க்க முடியாமல் எழுகின்றது.

எனவே இந்த விடயத்தில் வெளி மாவட்டத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அதேநேரம் அக்குரணை பகுதியை நேரடியாகவே அறிந்துணர்ந்த நான் ஒரு முஸ்லிம் பெண் ஆசிரியை எதிர்வரும் 31ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சிகரமான செய்தியை அறியப்பெற்றதும் நியாயமானவை என நான் கருதி எழுத்துக்களில் வடித்த சில வரிகளே இவை. அந்த வகையில் என்னுடைய எண்ணமும் நோக்கமும் தூய்மையானவை.

என்னுடைய இந்த எழுத்துக்களிலும் கருத்துக்களிலும் நான் தவறிழைத்திருந்தால் அதற்காக அழ்ழாஹ்விடம் மன்னிப்புக் கோருகிறேன். அதேபோன்று குறித்த ஆசிரியை இன்று விளக்க மறியலில் இருப்பதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ “நானும் ஒரு வகையில் காரணமே” என்று உங்களில் யாருடைய மனசாட்சியேனும் சிறிதளவு கருதினாலும் மரணம் நெருங்குவதற்கு முன்னர் தாமதிக்காமல் இப்போதே அதற்கான பிராயசித்தத்தை தேடிக்கொள்ளுங்கள்.

-முஹம்மது நியாஸ்,
காத்தான்குடி-

https://www.facebook.com/muhammed.niyas.7/posts/1113361512108664