Friday , November 24 2017

இஸ்லாமியத் தீவிரவாதம் ஓர் ஆய்வு…

(பி.எம்.எம்.ஏ.காதர்)

‘இஸ்லாம்’ எனும் அரபுச்சொல் சாந்தி, அமைதி என்ற பொருளையே அளிக்கின்றது. எந்தவொரு மதமும் தனது பெயரில் அமைதி, சாந்தி என்ற பொருளைத் தாங்கியுள்ளதாகத் தெரியவில்லை. மதத்திற்கு வழிகாட்டியவர் அல்லது மதம் சார்ந்த இனம் அல்லது மதம் தோன்றிய பகுதி (இடம்) ஆகியவற்றின் பெயரில் உலகிலுள்ள பல மதங்கள் காணப்படுகின்றன. இவ்வகையில் அமைதி, சாந்தி என்ற உன்னத பொருளைத்; தாங்கியுள்ள இஸ்லாம் ஒரு தனித்துவத்தைப் பெறுகின்றது.

அமைதி என்ற பொருளைப் பெயராகக்கொண்டுள்ள இஸ்லாம் அமைதிக்கான வழிகாட்டுதலைத்தான் தனது கொள்கை, கோட்பாடாகக் கொண்டிருக்க வேண்டும் உண்மையும் அதுவே. எல்லா செல்வங்களையும் அருட்கொடைகளையும் விட ஒரு மனிதன் விரும்புவது அமைதி, நிம்மதி என்ற நிலையைத்தான். ஒவ்வொரு தனி மனிதனும் பெறும் அமைதியின் மூலமே அமைதியான உலகம் உருவாக முடியும்.

இறை வழிபாடுகளில் இறுதியானதும், நிறைவானதும், திரிபுகளுக்கு ஆட்படாமல் உலகுள்ளளவும் நிலைத்திருக்கக் கூடியதுமான இஸ்லாம் ஒன்றுதான் மனித குலத்திற்கு ஏற்புடைய ஒரேயொரு வாழ்க்கை நெறியாகும். உலகம் இன்று ஏக்கத் தவிப்போடு வேண்டி நிற்கும் அமைதியைத் தரவல்ல ஆற்றல் இஸ்லாம் ஒன்றிற்குத்தான் உள்ளது.அரசியல், அறிவியல், பொருளியல் உள்ளிட்ட அனைத்து சமூக நல மேம்பாட்டு துறைகளும் என்றைக்கு காய்தல், உவத்தலின்றி இஸ்லாமின் வழிகாட்டு தலைப் பேணிட முன் வருகின்றனவோ அப்போதுதான் உலகில் அமைதி தழைக்கும்.

‘அமைதிக்கு இஸ்லாம், இஸ்லாம் தான் அமைதி’ என்று சொல்லும்போது பலர் தங்களது விழிகளை அகலவிரித்து ஆச்சரியத்தோடு நம்மைப் பார்க்கின்றனர். அவர்களுக்கு அது ஓர் அற்புதமாகவும் தெரிகிறது.ஏனெனில் இன்றைய நவீன உலகில், சத்தியத்தின் எதிரிகளான ஆதிக்க வெறியர்கள் இஸ்லாத்தின் மீது அப்படியொரு கோரச்சித்திரத்தை தீட்டி விட்டனர். அது உலகெங்கும் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது.

அதாவது இஸ்லாம் என்றால் தீவிரவாதம், முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகள் என்றொரு கர்ண கொடூரமான சித்திரத்தைத்தீட்டி ‘இஸ்லாம் தான் உலக அமைதிக்கே அச்சுறுத்தல்’ என்கிற மாயையை ஏற்படுத்தி விட்டனர். இந்த மாபாதகர்கள்! தங்களது பிரச்சார வலிமையால் இந்த பொய்ச் செய்தியை உலகின் மூலை முடுக்குகளுக்கு எல்லாம் கொண்டு சேர்த்தும் விட்டனர்.

இந்தப் பொய்ப்பிரச்சாரத்தை எதிர்க்கொண்டு முறியடித்திடப் போதிய வலிமையையும், வசதி வாய்ப்புக்களையும் இன்றைய முஸ்லிம்கள் தாராளமாகப் பெற்றிருந்துங் கூட, தங்களுக்குள் ஒற்றுமையில்லாததாலும், பதவிப் பித்துக்கொண்ட அறிவிலிகளின் தலைமைக்கு அடிமைப்பட்டுக்கிடக்க வேண்டிய கட்டாயத்திற்கு அவர்கள் ஆட்பட்டுக் கிடப்பதாலும் முஸ்லிம்கள் முற்றிலும் செயலிழந்து விட்டனர். எனவே, எதிரிகளின் விஷமனத் தனங்கள் வீரியம் பெற்று எல்லா இடங்களிலும் எளிதாகச் சென்று சேர்ந்து விடுகின்றது.

இவ்ஆய்வில் இஸ்லாத்தைப் பற்றியும், தீவிரவாதத்தைப் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இஸ்லாம் அமைதியின் மார்க்கம் என்ற வகையில் அது ஒருபோதும் தீவிரவாதத்தை அனுமதிக்கவில்லை. ஆனால் இன்று இஸ்லாம் அனுமதித்துள்ள ஜிஹாத் தீவிரவாதமாகக் காட்டப்படுகின்றது. இதில் மேற்குலக சக்திகள் பெரும் பங்காற்றுகின்றன.

எனவே எனது இந்த ஆய்வின் மூலம் இஸ்லாத்துக்கும் தீவிரவாதத்துக்கும் எவ்விதத் தொடர்புமில்லை எனப் பல சான்றுகள் மூலம் நிறுவ முற்பட்டுள்ளேன் அல்ஹம்துலில்லாஹ்.

இஸ்லாம் வலியுறுத்தும் நடுநிலைக் கொள்கை.

இஸ்லாம் மார்க்கத்தின் சிறப்புக்களில் ஒன்று அது அல்வஸத்திய்யா என்ற எண்ணக் கருவைத் தனது போதனைகள் மூலம் வலியுறுத்துகின்றது. அதனைத் அத்தவாஸூன் என்ற கலைச் சொல்லால் அறிஞர்கள் அழைக்கின்றனர். அதுவே நடுநிலைக் கொள்கை எனப்படும்

‘இவ்வாறே நாம் உங்களை நடுநிலையான சமுதாயமாக ஆக்கினோம்;;. மக்களுக்கு இதன் மூலம் நீங்கள் சான்றுபகர்பவர்களாக மாறுவீர்கள்’ என அல்குர்ஆன் அறிவிப்புச் செய்திருப்பதன் மூலம் முழு மானிட சமூகத்திற்கும் நடுநிலையைக் கற்றுக் கொடுத்து சமூகங்களிடையே இணைப்புப் பாலமாகத் திகழ வேண்டியது முஸ்லிம் சமூகத்தின் அமானமிதமாகக் கருதப்படுகின்றது.

மனித சமூகத்துக்கு வழிகாட்டியாக வந்த மாநபி(ஸல்) அவர்கள் நடுநிலமையைப் பல அமுத வாக்குகளில் வலியுறுத்தியுள்ளார்கள். ‘விவகாரங்களில் சிறந்தது நடு நிலமையாக நடந்து கொள்வதாகும்.’ என்று அருளியதன் மூலம் தீவிரவாதம், பிடிவாதம் என்பவற்றைக் களைந்து நிதானம், நெகிழ்வுத் தன்மை என்பனவற்றை அன்னார் வலியுறுத்தியுள்ளார்கள்.

குர்ஆன், ஹதீஸ் வழிகாட்டலின் கீழ் வளர்க்கப்பட்ட ஸஹாபாக்கள், தாபிஈன்கள், தபஉத் தாபிஈன்கள், சட்ட மேதைகளான இமாம்கள் தமது அறிவு, பிரச்சாரப் பணிகளில் நடுநிலைமையையும், நிதானமான போக்கையுமே கையாண்டுள்ளார்கள். சில போது கருத்து வேறுபாடுகள் அவர்களுக்கிடையில் தோன்றினாலும் அதனை சகித்துக் கொண்டு மனித உறவுகளுக்கு மதிப்பளித்து பிளவுபடாமல் உடன்பாடு கண்டு நடந்து கொண்டமைக்கு பல சான்றுகள் முன்வைக்கப்படுகின்றன. உதாரணமாக ஸூபஹூத் தொழுகையில் குனூத் ஓதுவது இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களின் கருத்தாகும். அதேவேளை இமாம் அபூ ஹனிபா (ரஹ்) அவர்களின் கருத்துப்படி ஸூபஹூத் தொழுகையில் குனூத் ஓதத் தேவையில்லை.

ஒரு நாள் இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் பக்தாதிலுள்ள மஸ்ஜிதுக்கு ஸூபஹூத் தொழுகைக்காக வருகை தந்த போது அந்த மஸ்ஜிதுக்கு அருகாமையில் இமாம் அபூ ஹனிபா (ரஹ்) அவர்களின் கப்ரு இருப்பதாக அறிந்து கொண்டார். ஸூபஹூத் தொழுகை நிறைவேற்றிய இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் அன்றைய ஸூபஹூத் தொழுகையில் குனூத் ஓதவில்லை. இது பற்றி மக்கள் அவரிடம் வினவிய போது இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் வழங்கிய பதில் ஆச்சரியமானது. ‘ இமாம் அபூ ஹனிபா (ரஹ்) அவர்களின் கருத்தை மதிப்பதற்காக வேண்டித்தான் ஸூபஹூத் தொழுகையில் குனூத் ஓதவில்லை’ என்று தனது நிலைப்பாட்டை அன்னார் வெளிப்படுத்தியமை தற்காலத்தில் குனூத் தொடர்பாக வாதப் பிரதிவாதங்களில் ஈடுபடுவோருக்கு படிப்பினை ஊட்டக் கூடிய ஒரு சான்றாக விளங்குகின்றது.

நடுநிலமை என்ற சிந்தனை இஸ்லாமிய தஃவாத் துறையிலும், இறைபாதையில் செலவழிக்கின்ற துறையிலும், மனிதர்களிடையே முரண்பாடுகளைத் தீர்த்து நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலும் செல்வாக்குச் செலுத்துகின்றது. உதாரணமாகக் கடமையான ஸக்காத்தைப் பொறுத்த வரையில் அதனை வழங்க வேண்டிய செல்வந்தர்கள் தாம் சம்பாதித்த அனைத்தையும் இறைபாதையில் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. மாறாக அதற்கு ஒரு வரையறையை எல்லையை இஸ்லாம் வகுத்துள்ளது. அதனைத் தான் நிஸாப் என்று சட்டவியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

இஸ்லாத்தின் பெயரால் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் தீவிரவாத அமைப்புக்கள்.

இஸ்;லாம் தோன்றிய வரலாற்றுக் கால கட்டத்திலிருந்து இன்றுவரை இரண்டு படையெடுப்புக்களைச் சந்தித்து வருகின்றது.

1. சிந்தனா ரீதியான படையெடுப்பு.

2. இராணுவ ரீதியான படையெடுப்பு.

இராணுவ ரீதியான படையெடுப்பின் விளைவாக இஸ்லாமிய வரலாற்றில் பல யுத்தங்கள் குறிப்பாகத் தெமாடரான சிலுவைப் போர்கள் இடம்பெற்று வந்தன. மஸ்ஜிதுல் அக்ஸா புனித ஸ்தலத்தை மையப்படுத்திய பலஸ்தீனப் போராட்டம் இஸ்லாமிய உலகில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கி செப்-11-2011 உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டதன் விளைவாக கடந்த 15 வருடங்களாக போராட்ட வடிவங்கள் தீவிரவாத உணர்வைக் கூர்மைப்படுத்தியதன் விளைவாகப் பல போராட்ட, தீவிரவாதக் குழுக்கள் ஊடகங்களில் இஸ்லாத்தின் மிதவாத சிந்தனைகளுக்குப் பெரும் சவால்களை ஏற்படுத்தி வருகின்றன. அவைகளுள் முக்கியமான அமைப்புக்கள் வருமாறு,

2. போகோ ஹறாம்.

3. தாலிபான்

4. அல் காய்தா.

இதேவேளை 2011ல் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட ‘அறபு வசந்த எழுச்சிப் போராட்டங்கள் இஸ்லாமிய நாடுகளை ஆட்சி செய்த பலம் வாய்ந்த தலைவர்களான சதாம் ஹூசைன், முஅம்மர் கடாபி, ஹொஸ்னி முபாறக் போன்றவர்களை மண் கவ்வச் செய்ததோடு அறபு வசந்தத்தின் விளைவு எதிர் மறைத் திசையில் பயணிப்பதை நாம் ஊடகங்கள் வாயிலாக அறிகிறோம். அதன் பெரிய பிரதி விம்பமே சிரியாவிலும், ஈராக்கிலும் நடக்கும் போராட்டமும் ஐளுஐளு ன் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் என களநிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று உலகளாவிய ரீதியில் பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம், அடிப்படை வாதத்திற்கெதிரான யுத்தம் எனும் பெயர்களில் முடுக்கிவிடப்பட்டிருக்;கும் யுத்தங்கள் வெறுமனே இராணுவ ரீதியான படையெடுப்புக்ள் அல்ல. உண்மையில் சகல யுத்தங்களும் ஊடகத்தினூடாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ‘கத்தியின்றி ‘கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ என்று ஒரு புலவன் பாடினான். அந்தப் புலவன் இதன்மூலம் எதை நாடி இருந்தாலும் இன்று கத்தியின்றி இரத்தமின்றி நடந்து கொண்டிருக்கும் யுத்தம் தான் ஊடகவியல் யுத்தம். (Media war/ war through media) என்ற பெயர்களில் இது அழைக்கப்பட்டு ‘இஸ்லாம் தீவிரவாதத்தின் மார்க்கம்’ என்ற பிழையான விம்பம் முஸ்லிமல்லாதவர்களுக்கு மத்தியில்; தி;ட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டு வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.

இன்றைய உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம் ஊடகம் தான். இதற்கு, மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹாதீர் முஹம்மத் குறிப்பிட்ட ஒரு கருத்தை ஆதாரமாகச் சொல்லலாம். ‘யாரிடம் கடற்படை இருந்ததோ அவர்கள் தான் 19ம் நூற்றாண்டின் சக்தியாக விளங்கினார்கள்.விமானப்படை எவர் வசமிருந்ததோ அவர்கள் தான் 20ம் நூற்றாண்டின் சக்தியாக திகழ்ந்தார்கள். யாரிடம் மீடியா இருக்கின்றதோ அவர்கள் தான் 21ம் நூற்றாண்டின் சக்தியாக விளங்குவார்கள்.’ சமூகவியல் அறிஞர் கோவிந்தநாத் வெளியிட்டுள்ள கருத்தும் இங்கு கோடிட்டுக் காட்டத்தக்கது. ‘இன்றைய உலகின் ஜாம்பவான்களாக ஊடகத் துறையினரே. அவர்கள் தான் இந்த உலகில் கருத்துருவாக்கத்தைத் தீர்மானிப்பவர்கள். (Opinion Makers)’என அவர் குறிப்பிடுகின்றார்.

இன்று உலகளாவிய ரீதியில் BBC, FOX NEWS, ABC, AFP, REUTER போன்றவை செல்வாக்குச் செலுத்துவது போல அறபு, இஸ்லாமிய உலகில் சக்தி வாய்ந்த ஊடகம் ஏதாவது உள்ளதா? ‘அல் ஜெஸீரா’ இருந்தாலும் அதன் வலிமை, கொள்ளளவு போதாது.

இதனால் ஊடக வலிமை இல்லாத முஸ்லிம் சமூகத்தால் சவால்களை எதிர் கொள்ள, சுடச் சுட பதிலடி கொடுக்க முடியாத அவல நிலை நீடிப்பதால் இஸ்லாத்திற்கெதிரான தீவிரப்; பிரச்சாரங்கள் மேற்குலக ஊடகங்களால் கன கச்சிதமாக மேற்கொள்ளப்படுகின்ற கசப்பான உண்மையை ஏற்க வேண்டியுள்ளது.

உலகப் பொருளாதாரத்தின் போக்குகளை தற்போதைய அறேபிய வசந்தப் புரட்சி பெருமளவில் பாதித்திருப்பதோடு ஒரு புதிய உலக ஒழுங்கை முழு உலகிலும் அது உருவாக்கலாம். இன்று அறபு முஸ்லிம் நாடுகளில் 1.4 டிரில்லியன் பணம் அமெரிக்க ஜரோப்பிய நாடுகளில் முதலீடு செய்துள்ளது.

500 பில்லியன் கடன் தொகையைக் கொண்டுள்ள அறபு நாடுகள் அமெரிக்காவில் மாத்திரம் 2400 பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது. மேற்படி பணம் யாவும் யுத நிறுவனங்களின் கைகளுக்குச் சென்றுள்ளதால் பொல்லைக் கொடுத்து அடி வாங்கியவன் கதை போல இஸ்லாமியத் தீவிரவாதம் திட்டமிட்டு வளர்க்கப்பட்டு மனிதப் பேரவலம் முஸ்லிம் நாடுகளில் அணைக்க முடியாத நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது.

அஷ்ஷெய்க். அன்ஸார் பழீல் மௌலானா,

(நளீமி), MA, MATE

விரிவுரையாளர்,

அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலை.

Originally posted by Madawelanews