Friday , November 24 2017

ஷெய்க் அப்துல்லாஹ் தர்ராஸ் – ஒரு சுறுக்க அறிமுகம்

நவீன இஸ்லாமிய சிந்தனை எழுச்சிக்கு வித்திட்டவர்களை நாம் ஒரு போதும் மறந்துவிட முடியாது. அதிலும் குறிப்பாக மேற்கத்தைய, கீழைத்தேய கலாச்சாரங்களை ஆழமாகக் கற்றவர்கள், ஷரீஆ அறிவைப் பெற்று ஷரீஆ நிலைப்பாடுகளை முன்வைத்தவர்கள், ஆழமான சிந்தனையோடு ஆன்மீக ஒளியையும் தமது பேச்சு, எழுத்து மற்றும் நடத்தைகளில் வெளிப்படுத்தியவர்கள். இம்மூன்று பண்புகளை ஒருசேரப் பெற்றவர்களை நாம் மறந்துவிடுவது மிகப்பெரிய அநியாயம். இம்மூன்று பண்புகளை ஒருசேரப் பெற்றவர்கள் மிகவும் அரிது. உஸ்தாத் மாலிக் பின் நபி, அலி இஸ்ஸத் பெகோவிச், இஸ்மாஈல் பாருகி, அல்லாமா இக்பால் போன்றவர்கள் வரிசையில் ஷெய்க் அப்துல்லாஹ் தர்ராஸூம் இடம் பிடிக்கிறார்.

#ct_zlsjp2xbs3iscv9n0let {font-size:12px;}

%d8%a7%d9%84%d8%b4%d9%8a%d8%ae-%d8%af%d8%b1%d8%a7%d8%b2

1894ம் ஆண்டு எகிப்தில் மார்க்கப்பின்னணி கொண்ட குடும்பத்தில் ஷெய்க் அப்துல்லா தர்ராஸ் பிறக்கிறார். இவரது தந்தை அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி. தனது ஆரம்பக் கல்வியை வெற்றிகரமாக முடித்த தர்ராஸ் 1928ம் ஆண்டு அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இணைந்து கொண்டார். 1936ம் ஆண்டு உயர்கல்விக்காக பிரான்ஸில் அமைந்திருக்கும் ‘ஸர்பன்’ பல்கலைக்கழகத்திற்கு சென்றார். 12 வருடங்கள் பிரான்ஸில் தங்கியிருந்து தனது அறிவுப்பயணத்தை தொடர்ந்த ஷெய்க் தர்ராஸ் மேற்கத்தைய கலாச்சாரத்தையும் அதன் கோட்பாடுகளையும் அதன் மூலாதாரங்களிலிருந்தே பெற்றுக் கொண்டார். அதனை அல்குர்ஆன் முன்வைக்கும் ‘பண்பாட்டுக் கலை’யுடன் ஒப்பிட்டு நோக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். தனது கலாநிதிப்பட்டத்திற்கான ஆய்வையும் ‘அல்குர்ஆனின் பண்பாடுகள்’ எனும் தலைப்பில் அமைத்துக் கொண்டார். இவ்ஆய்வு கீழைத்தேயவாதிகள் மற்றும் மேற்கத்தய அறிஞர்களின் கவனத்தை ஈர்த்தது என்பதை இங்கு சுட்டிக் காட்டவேண்டியுள்ளது. 1958ம் ஆண்டு லாஹூரில் நடைபெற்றுக்கொண்டிருந்த ஓர் இஸ்லாமிய மாநாடொன்றிலேயே அவர் தனது இறுதி மூச்சை விட்டார்.

ஷெய்க் தர்ராஸின் குடும்பம் மொரோக்கோ வம்சத்தை சார்ந்தது. மொரோக்கோவின் அரச செல்வாக்குபெற்றிருந்த மாலிகி மத்ஹப் தர்ராஸின் ஷரீஆ நிலைப்பாடுகளில் தெளிவாவாகவே வெளிப்படுகிறது. தர்ராஸின் தந்தை இமாம் ஷாதிபியின் ‘முவாபகாத்’திற்கு விளக்கம் எழுதியிருக்கிறார். மகன் தர்ராஸ் அப்புத்தகத்தை தஹ்கீக் -செம்மைப்படுத்தல்- செய்திருக்கிறார். இமாம் ஷாதிபியின் இஃதிஸாம் எனும் புத்தகத்தில் விடப்பட்டதாக கருதும் சில பகுதிகளை தொகுத்தெழுதும் பணியில் ஈடுபட்ட ஷெய்க் தர்ராஸ் அப்பணியை பூரணப்படுத்த முன் மரணித்து விடுகிறார். அதுகால வரை தொகுத்தெழுதியவை ‘அல்மீஸான் பய்னஸ் ஸூன்னா வல் பித்ஆ’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. ஷெய்க் தர்ராஸ் இமாம் ஷாதிபியின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டிருந்தார் என்பதற்கு இது மிக சிறந்த ஆதாரம்.

ஷெய்க் தர்ராஸிற்கும் மாலிக் பின் நபிக்குமிடையிலான சிந்தனை ரீதியான ஒற்றுமை இங்கு குறிப்பிடப்பட வேண்டும். குறிப்பாக குர்ஆன் பற்றிய ஆய்வுகளையும் பார்வைகளையும் மீள்பரிசீலனைக்கு உற்படுத்தலில் இருவரும் உடன்படுகின்றனர். மாலிக் பின் நபியின் ‘அல்லாஹிரா அல்குர்ஆனிய்யா’ வையும் ஷெய்க் தர்ராஸின் ‘அந்நபஉல் அழீம்’ மற்றும் ‘மத்கல் இலல் குர்ஆனில் கரீம்’ ஆகிய இரு புத்தகங்களையும் ஒப்பிட்டுப்பார்ப்பவர் அவர்களிருவரதும் சிந்தனை முறைமையில் இருக்கும் ஒற்றுமையை தெளிவாகவே புரிந்து கொள்வார்.

#ct_50l2qslh6qerx1p7igh6 {font-size:12px;}

ஷெய்க் தர்ராஸ் கீழைத்தேய கல்வியைக் கற்பதோடு நின்றுவிடாமல் மேற்கத்தைய கல்வியையூம் கற்றுக் கொண்டார். ஷெய்க் கர்லாவி குறிப்பிடுவது போன்று ‘அவர் அஸ்ஹர் மற்றும் ஸர்பூனின் மாணவன்’ இஸ்லாமிய கலைகளையும் மேற்கத்தைய கலைகளையும் ஒருசேர பெற்றவர். இமாம் கஸ்ஸாலி, ஹகீம் அத்திர்மிதீ, அபூதாலிப் அல்மக்கி போன்றவர்களின் ஆன்மீகப்பாசறையில் புடம்போடப்பட்டவர். டேகாட், கான்ட் போன்றவர்களின் தத்துவங்களை ஆழமாகக் கற்றவர். இவ்விரு வகையான சிந்தனைகளையும் ஒருசேரப் பெற்றிருப்பது ஷெய்க் தர்ராஸூக்கு தனித்துவமான சிந்தனை முறைமையைப் பெற்றுக் கொடுத்தது.

ஷெய்க் தர்ராஸ் எப்போதும் நடுநிலை சிந்தனையை ஏற்றுக்கொள்ளக் கூடியவராக இருந்தார். இஸ்லாமிய சிந்தனையில் பலரையும் குழப்பத்திற்குள்ளாக்கும் அக்ல்- நக்ல், சுன்னா- பித்ஆ, தேர்வுச்சுதந்திரம்- நிர்ப்பந்தம், போராட்டம்- சமாதானம், அறிவு- மார்க்கம்… போன்ற இரட்டைப் பரிணாமங்களுக்கிடையில் மிக நிதானமான நடுநிலைப் போக்கை ஷெய்க் தர்ராஸ் கொள்கிறார்.

ஷெய்க் தர்ராஸ் எப்போதும் அல்குர்ஆனை நேசிக்கும் குர்ஆனிய மனிதராகவே திகழ்ந்தார். நாளாந்தம் ஆறு ஜூஸ்உக்களை ஓதுபவராகவும் தப்ஸீர் விரிவுரைகளின் போது ஸஜ்தா வச‌னங்கள் வந்தால் உடனே சிரம் தாழ்த்தி ஸூஜூத் செய்பவராகவும் இருந்தார். குர்ஆனைக் கற்க வரும்போது வூழுஃ உடைய நிலையில் வரும்படி தனது மாணவர்களை கண்டிப்பாக வேண்டிக்கொள்வார். இமாம் அபூ ஸஹ்ரா கூறுவதைப் பாருங்கள்: ‘தர்ராஸ் எமக்கு இஷா தொழுவிப்பார். பின் நாமனைவரும் படுக்கைக்கு சென்றுவிடுவோம். ஆனால் அவர் குர்ஆன், தொழுகையோடே தொடர்ந்திருப்பார். தொழுபவராக அல்லது குர்ஆன் ஓதுபவராகவே நீங்கள் அவரை பெரும்பாலும் கண்டு கொள்வீர்கள்’.

குர்ஆனுடனான அவரது தொடர்பு வெறும் உணர்வுபூர்வமானதாக மாத்திரம் இருக்கவில்லை. மாற்றமாக அவர் அறிவுபூர்வமாக குர்ஆனை அணுகினார்.

அல்குர்ஆனுடன் தொடர்புபட்ட இருகலைகளை அவர் தோற்றுவித்தார். அதில் முதலாவது ‘குர்ஆனின் பண்பாட்டுக் கலை’. ‘துஸ்தூருல் அக்லாக் பில் குர்ஆன்’ எனும் புத்தகத்தில் இக்கலை பற்றி மிக விரிவாகவே பேசுகிறார். அடுத்தது அல்குர்ஆனின் மூலாதாரத் தன்மையை அறியும் கலையை உருவாக்கல். ‘நபஉல் அழீம்’ மற்றும் ‘ மத்கல் இலல் குர்ஆனில் கரீம்’ ஆகிய இரு புத்தகங்களும் இப்பகுதியை விளக்குகின்றன. அல்குர்ஆனின் உண்மைத்தன்மையை நிறுவுவதற்கு காலம்பூராக அறிஞர்களால் பின்பற்றப்பட்டு வந்த முறைமைக்கு மாற்றமாக அல்குர்ஆனிய தூதை தர்க்கரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் நிறுவ முற்படுகிறார் ஷெய்க் தர்ராஸ்.

இக்கட்டுரை ஷெய்க் முக்தார் ஷன்கீதியின் உரையொன்றை வைத்து எழுதப்பட்டது என்பதை கருத்திற்கொள்க.

#ct_1p66mozejckskbcqy1kc {font-size:12px;}