Sunday , June 25 2017
Breaking News

முஸ்லிம் உலகின் குழுநிலைவாதம் -அடிப்படைகளும் தீர்வு முன்மொழிவுகளும் – 01

பேராசிரியர் முஹம்மத் முஹ்தார் ஷங்கீதியின் சிந்தனைகள்.

அறிமுகம்

சீயா-ஸூன்னி  உட்பிரிவாதம் முஸ்லிம்  உலக  அரசியல் நகர்வுகளில் நியாயமான  காயங்களை  ஏற்படுத்தி யுள்ளன. மோதல்களின் நாகரீகம் (Civilization of clashes) என  இஸ்லாத்தை ,முஸ்லிம்களை  காட்சிப்படுத்தும் அள வுக்கு அதன் தீவிரத்தன்மை வலிமையடைந்துள்ளது. ஈராக்,லெபனான்,சிரியா மற்றும் யெமன்  போன்ற முஸ்லிம்  உலக  நாகரக முதுசங்களை ‘சீயா-ஷுன்னி உட்பிரிவுவாதம்” காவுகொண்டு விட்டன. இந்தப் பின்புலத்தில் பிராந்திய சீயா-ஸூன்னி  மோதல்கள்  தொடர்பாக ஆழமான பல ஆய்வுகளை முன்வைத்து வரும் பேராசிரியர் முஹம்மத்  முஹ்தார்  ஷங்கீதியின் சிந்தனைகளை  இக்கட்டுரை அலசுகிறது. சியா-ஸூன்னி மோதல்களின் கலாச்சார  வரலாற்றியல் மற்றும் அரசியல் பின்புலங்களை அவர் நுணுக்கமாக பகுப்பாய்வு  செய்கிறார்.  அதற்கான தீர்வு  முன்மொழிவுகள் எவ்வாறு வரையப்பட வேண்டும் என்பது பற்றிய பேராசிரியர்  ஷங்கீதியின் கருத்துக்களைவும் கட்டுரை பதிவு செய்கிறது.

உலகில் எவருக்கும் எந்தப் பிரிவைவும் பிரதிநிதித்துவம் செய்யும் உரிமை இருக்கிறது. அது பெரும்பான்மை சமூகத்தின் பிரிவொன்றாகவோ அல்லது சிறுபான்மை சமூகத்தின் உட்பிரிவொன்றாகவோ காணப்படலாம். அப்பிரிவின் கருத்தியல், சமூக நெறிமுறைகள் மற்றும் கலாசாரப் பெறுமானங்களை ஒருவர் உளப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளலாம். இவ்வாறு ஒரு பிரிவினை சார்ந்து வாழ்வொழுங்கை வழிப்படுத்திக் கொள்வதனை “உட்பிரிவு வாதம்” (Sectarianism)   என அடையாளப்படுத்த முடியாது. ஆனால் ஒரு உட்பிரிவைச் சார்ந்தவர்கள்  தமது இருப்பினை பாதுகாத்துக் கொள்வதற்காக ஏனைய பிரிவுகளை சட்டபூர்வமற்றதாக கருத முற்படும் போது  அல்லது அதற்கான அரசியல்  சமூகம் சார்ந்த வேலைத்திட்டங்களில் ஈடுபடும் போது “உட்பிரிவுச் சார்பியம்”ஒரு வாதமாக வடிவம் பெறுகின்றன. அதிலும் ஏனைய பிரிவுகளை கருவறுப்பதனை“கொள்கை”சார்ந்த ஒன்றாக காட்சிப் படுத்தும் போது அல்லது ஒரு பிரிவுக்கு எதிராக அடுத்த உட்பிரிவு மேற்கொள்ளும் செயல்களை “நீதியானதாக”விளக்கமளிக்கும் போது “உட்பிரிவுவாதம்” சமூக நோயாக ஆழமாக ஊடுறுவுகின்றன.

முஸ்லிம்  உலகின்  “சீயா-ஸூன்னி” குழுநிலைவாத மோதலைத் தோற்றுவிப்பதில்  நான்கு பிரதான காரணிகள் தொழிற்பட்டுள்ளதாக பேராசிரியர் ஷங்கீதி  கூறுகிறார்.

  • முதலாவது  நீண்ட  இஸ்லாமிய வரலாற்றில் சீயா-ஸூன்னி உறவு பற்றிய வரலாற்று ஞாபகங்கள் (Historical  memories) ஆகும்.
  • இரண்டாவது தனித்துவம் சார்ந்த முரண்பாடுகள் (Identity crisis)
  • மூன்றாவது அரசியல் சுதந்திரத்துடன் தொடர்பாக அம்சங்கள் எனலாம்.

கடைசியாக ஒவ்வொரு பிரிவும் அடுத்த பிரிவின் நாகரீகமரபுரிமைகள நோக்கும் பார்வைக் கோளாருகளைக் குறிப்பிட முடியும். இவை ஒவ்வொன்றும் வித்தியாசமான பெறுமானங்களில் “குழுநிலைவாத மோதலை” ஏற்படுத்தியுள்ளதாக  அவர்  மேலும் வாதிக்கிறார்

நீண்ட  இஸ்லாமிய வரலாற்றில் சீயா-ஸூன்னி  சமூகங்களின்  உறவு  என்பது வெறும் வரலாற்றுத் தகவல்கள் மட்டுமல்ல. மாறாக அவை இரு சமூகங்களினதும் “ஞாபகங்களாக” (Memory)  பதிவு  செய்யபட்டுள்ளன. வரலாற்றை  அதன்  நிகழ்வுகளை  வெறும் கோட்பாட்டுப் படிப்புக்காக மாத்திரமன்றி அடுத்த கட்ட கொள்கை வகுப்பிற்கு துணையாகவும் “வரலாற்று நிகழ்வுகளை” இரு சமூகங்களும் எடுத்துக் கொள்கின்றன. ஒவ்வொரு பிரிவும் தமது வரலாற்றை “தவறுகள் அற்றதாகவும்” அல்லது “தாமே அடுத்த பிரிவால் அநீதி இழைக்கப்பட்டதாகவும்” எழுத முயற்சிக்கின்றன. இத்தகைய வரலாற்றெழுங்கையை “Idealization of History”  என வரலாற்றுத் துறை விற்பன்னர்கள் கருதுகின்றனர். ஆனால்  முழுமையாக  வெள்ளைப் பக்கங்களையோ  அல்லது  கருப்புப்  பக்கங்களையோ  மட்டுமே எந்த சமூகத்தின் வரலாறும் கொண்டதில்லை என்ற இயற்கை நோக்கை சீயா-ஸூன்னி சமூகங்களினதும் வரலாற்றெழுதுகை  புறக்கணித்துள்ளதனை  அவதானிக்க முடியும்.எனவே இன்றைய  மத்திய கிழக்கில் குழுநிலைவாதத்தை தோற்றுவிப்பதில் “அரசியல் காரிணிகளுக்கு” பிரதான பங்கிருப்பதாக தென்பட்டாலும்  இரு சமூகங்களிலும் “வரலாறு” பற்றிய  நோக்கு மறைமுகமான பிரதான தூண்டல் காரணியாக தொழிற்படுவதாக பேராசிரியார் ஷங்கீதி  எழுதுகிறார். மேலும் இரு சமூகங்களினதும் தனித்துவங்களை தீர்மானிப்பதிலும் “வரலாற்று ஞாபங்கள்” பிரத்தியேகமான இடத்தை வகிக்கிறது  என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

விளைவாக  சீயா-ஸூன்னி  உறவைப் பலப்படுத்துவதில் அரசியல் உடன்பாட்டுச் சிந்தனைக்கு அப்பால் தத்தமது  வரலாற்றை மீள் எழுதுவதனையும் முக்கியமான ஒன்றாக கருத முடியும் என அவர் தெளிவுபடுத்துகிறார் . “சிறந்த எதிர்காலத்தினை அடைந்து கொள்வதற்கு      தெளிவான இறந்த காலத்தை கட்டியெழுப்ப  வேண்டும்” என்ற வரலாற்றாசிரியர்களின் கருத்து  “சீயா-ஸூன்னி வரலாறு” மீது பிரயோகிக்கப்பட வேண்டும் என மேலும் பேராசிரியர் ஷங்கீதி கருதுகிறார்.

இவ்வாறு சீயா-ஸூன்னி உறவை வடிவமைப்பதில் வரலாற்று நிகழ்வுகள் கொண்டுள்ள பருமனை புரிந்து கொள்வதற்கு பேராசிரியார் சங்கீதி சில உதாரணங்களைக் குறிப்பிடுகிறார்.

முதலாவதாக கார்பாலா நிகழ்வும்  ஹூசைன் (றழி) அவர்களின் படுகொலையும் சீயா சமூகங்களின் கொள்கையை அரசியல் நிலைப்பாடுகளை வடிவமைத்திருப்பதனைக் காணலாம். அஹ்லுல் பைத்திற்கு நிகழ்ந்த அரசியல் அநீதிகளை  கவலைகளை “நிறுவனமயப்படுத்தி” தமது சட்டபூர்வத்தன்மையை தக்கவைத்துக் கொள்ள சீயாக்கள் முயற்சிக்கின்றனார். மாறாக ஸூன்னி சமூகங்களும் “கர்பாலாவை” கவலையான வரலாற்று நிகழ்வாகவே நோக்குகின்றன. ஆனால் குறித்த சம்பவம் ஏற்படுத்திய “கவலைகளை” நீண்ட வரலாற்றோட்டத்தில் ஒரு அத்தியாயம் எனக் கருதி கடந்து சென்றுவிடுகின்றனர். ஸூன்னி சமூகங்களின் நிலைப்பாட்டை அநீதியானதாகவும் அஹ்லுல் பைத்திற்கு நடந்த பழிவாங்கல்களுக்கு மௌன அங்கீகாரம் அளிப்பதாகவும் சீயா சமூகங்கள் கருதுகின்றன. ஒரு நிகழ்வை ஒரு சமூகம் “வரலாற்றுக் கவலையாக” கருத்துவதற்கும் மற்றைய சமூகம் “வரலாற்றின் ஒரு அத்தியாயம்” என நோக்குவதற்கும் இடையிலான வித்தியாசம் தோற்றுவிக்கும் சமூக விளைவுகள் தெளிவானவை. சீயா-ஸூன்னி உறவை திசைப்படுத்துவதிலும் வடிவம் கொடுப்பதிலும் “கர்பாலா” பற்றிய இரு சமூகங்களிலும் நோக்கு நிலைகள் காத்திரமான தாக்கம் செலுத்துகின்றன.

அதே போன்று சிலுவைப் போர்  அதன் நிகழ்வுகள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளும் “சீயா-ஸூன்னி” உறவில் நியாயமாக செல்வாக்குச் செலுத்தியுள்ளதாக பேராசிரியர் ஷங்கீதி தெளிவுபடுத்துகிறார். இங்கு சீயா சமூகங்களை விட ஸூன்னி சமூகங்கள் வரலாற்றை தமக்கு சார்பாக விளக்கமளிப்பதற்கு முயல்வதாக பேராசிரியர் ஷங்கீதி விமர்சனம் செய்கிறார். அதாவது “சிலுவை வீரார்களுடன்” சீயா சமூகங்கள் ஒன்றிணைந்து ஸூன்னி உலகை ஆக்கிரமித்தாக ஸூன்னி சமூகங்களுக்கு மத்தியில் ஒரு புரிதல் வலம் வருகின்றன. குறிப்பாக ஸூன்னி முஸ்லிம் பாரம்பரியத்தைக் கொண்ட ஸல்ஜூக்கிய  அப்பாஸிய ஆட்சிகளை பலவீனப்படுதத்துவதில் சிலுவை வீரர்களுக்கு பாதிமீக்கள்  துணை போயினர் என ஸூன்னி முஸ்லிம்களின் வரலாற்று வாசிப்பு அமைந்துள்ளது. உண்மையில் இது தவறானது என அவர் விளக்குகிறார். இவ்வாறு சீயா-ஸூன்னி கருத்தியல் நேர் கோடுகளில் சிலுவைப் போருக்கு விளக்கமளிக்கும் தவறு இமாம் இப்னு தைமியா (றஹ்) அவர்களால் முதலாவது இடம்பெற்றுள்ளதாக பேராசிரியர் ஷங்கீதி வாதிக்கிறார். ஆனால் ஆதாரங்களின் அடிப்படையில் நோக்கும் போது சீயா இமாமிய்யா சமூகங்கள் அஹ்லுஸ்ஸூன்னாக்களுடன் இணைந்து சிலுவைப் போராட்டங்களில் பங்கு கொண்டுள்ளதனை நிறுவுவதாக அவர் கோடிட்டுக் காட்டுகிறார்.

உண்மையில்  இஸ்மாஈலிய்யா  ஹஷ்ஷாஷிய்யா பிரிவைச் சேர்ந்த சீயா பிரிவினர்களே சிலுவை வீரர்களுடன் இணைந்து செயற்பட்டவார்கள். இதனை வைத்து “முழு சீயா சமூகங்களும்” சிலுவை வீரர்களுடன் இணைந்து செயற்பட்டதாக விளக்கமளிப்பது தவறாகும். இன்னும் இஸ்மாலிய்யாகள் சிலுவை வீரார்களுடன் சல்ஜூக்கிய அரசுக்கு எதிராக கூட்டிணைந்த செயற்பட்டதனைக் கூட “முழுமையாக கருத்தியல் தூண்டல்களே காரணம்” என்பதும் தவறான விளக்கமாகும். ஏனெனில் துருக்கியிலிருந்து நகர்ந்து வந்த ஸல்ஜூக்கிய படை சிரியா வழியாக எகிப்தை நோக்கி முன்னகர்ந்தது. அகன்ற அதிகார கனவை அடிப்படையாகக் கொண்ட பாத்திமிய்யாக்ள் ஸல்ஜூக்கியர்களது நகர்வை கட்டுப்படுத்துவதற்கான Buffer zone”  ஆக சிலுவை வீரர்களை பயன்படுத்திக் கொள்ள முயற்சித்தனர். இங்கு சிலுவை வீரர்களுக்கும் பாத்திமிக்களுக்கும் இணைந்து ஸூன்னி ஸல்ஜூக்கியர்களை தாக்குதவற்கான திட்டத்தை“கருத்தியல் பின்புலம்” கொண்டு அணுகுவதனை விட “புவியரசியல் ஆதிக்க நலன்” சார்ந்த கோட்பாடுகளின் பின்புலத்திலேயே அணுக வேண்டும் என ஷங்கீதி எழுதிச் செல்கிறார். சிலுவை யுத்தங்களின் நிழலில் வடிவம் பெற்ற“பாத்திமிய்ய-சிலுவை அணியினரின் கூட்டை” கருத்தியல் ரீதியில் விளக்கமளித்த இமாம் இப்னுதைமியாவின் அணுகுமுறை பிற்பட்ட கால சீயா – ஸூன்னி உறவில் நியாயமாக காயங்களை ஏற்படுத்தியது எனவும் அவர் வலியுறுத்துகிறார்.

ஏன் சிலுவைப் போர்கள் வரலாற்றை சீயா-ஸூன்னி பிரிகோடுகளின் மீது நின்று இமாம் இப்னு தைமியா விளக்கமளித்தார் என்பது சிக்கலான கேள்வியாகும். அவர் வாழ்ந்த காலம் அவரது கருத்தியல் பின்புலம் மற்றும் அக்கால ஆதிக்க போட்டிகள் என்பன அவரின் கருத்துருவாக்கத்திற்கு பங்களித்திருக்கலாம். அதாவது மங்கோலியார்களது ஆக்கிரமிப்பு பக்தாதை அழித்து மூன்று வருடங்களில் இமாம் இப்னு தைமியா பிறக்கிறார். அவரது சிந்தனைப் போராட்டம் வலிமையடையும் போது சிலுவைப் போரை எதிர்கொள்கிறார். மறுபுறம்  பாத்திமிய்யர்களின் முன்னகாவுகள் அபாயகரமான தோற்றப்பாடாக இஸ்லாமிய உலகை ஆக்கிரமிக்க துவங்குகிறது. இவ்வாறு மூன்று இக்கட்டான நிகழ்வுகளுக்கு மத்தியில் இமாம் இப்னு தைமியாவின் வரலாற்றுப் பாத்திரம் அமைந்துள்ளன. இஸ்லாமிய உலகின் மீது மங்கோலியர்கள் சிலுவை வீரர்கள் மற்றும் பாத்தமிக்கள் பிரயோகித்த அழுத்தங்கள் இமாம் இப்னு தைமியாவின் வரலாற்று வாசிப்பை “கருத்தியல் சார்ந்ததொன்றாக” வடிவமைத்திருக்க வாய்ப்பிருக்கிறது.

அதனோடிணைந்த வகையில் இமாம் இப்னு தைமியா “ஹன்பலி மத்ஹபை” சேர்ந்தவர் என்பதும் இங்கு பிரதான பகுப்பாய்வுகுறிய விடயமாகும். பொதுவாக இஸ்லாமிய வரலாற்றில் ஹன்பலிகளுக்கும் சீயா சிந்தனைக்கும் இடையில் பல   நூற்றாண்டு கால பகை காணப்படுகின்றன. ஹிஜ்ரி 4ம்,5ம்     நூற்றாண்டுகளை  “ஹன்பலி-இஸ்னா அஷரி” மோதல்களின் நூற்றாண்டு என வரலாறு அடையாளப்படுத்துகிறது. சீயாக்களின் ஒவ்வொரு விசேட தினத்திலும் ஹன்பலி மத்ஹப் சார்ந்தவர்கள் சீயாக்களுடன் மோதி வந்துள்ளனர். ஹன்பலி-சீயா மோதல்களுக்கு “சீயா சிந்தனையின் நம்பிக்கைக் கூறுகள்” காரணமல்ல. மாறாக அகீதா சார்ந்த நிலைப்பாடுகளில்“முஃதஸிலா சிந்தனைப் பாரம்பரியத்தை” சீயாக்கள் பின்பற்றியதாகும்.முஃதஸிலாக்களால் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் கொடுமைப்படுத்தப்பட்டமை அறிந்ததே. அத்தகைய முஃதஸிலாக்களின் கொள்கையை சீயாக்கள் ஏற்றுக் கொண்டமையே ஹன்பலிக்களுக்கும் சீயாக்களுக்கும் மத்தியில் கடுமையான மோதல்கள் இடம்பெறுவதற்கான நேரடிக் காரணமாகும்.

இன்றும் ஹன்பலி மத்ஹப் பாரம்பரியத்தைக் கொண்டவர்கள் சீயாக்களை கடுமையாக எதிர்கொள்வதனைக் காணலாம். சீயா-ஸூன்னி கருத்தியல் சார்ந்து இஸ்லாமிய வரலாற்றைப் புரிந்து கொள்ளும் ஹன்பலிகளது அணுகுமுறை பிற்பட்ட கால முஸ்லிம் சமூகத்தின் பொதுப் புத்தியில் பிரதான இடத்தை பிடித்துக் கொண்டதாக ஷங்கீதி வாதிக்கிறார். மறுபுறம் “சீயா விவகாரத்தை” ஓரளவு மென்மையாக அஷ்அரிக்கள் அணுகியுள்ளதனை சீயா சிந்தனை தொடர்பான இமாம் கஸ்ஸாலியின் நிலைப்பாடுகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன எனவும் அவர் விளக்கிச் செல்கிறார். உதாரணமாக ஒரு முறை “அபூபக்கர் (றழி)  உமர் (றழி) போன்றவர்கள் “பதவி மோகம் பிடித்தவர்கள்” என சீயாக்கள் கூறுகிறார்களே? என இமாம் கஸ்ஸாலியிடம் வினவப்பட்ட போது“அல்லாஹ்வின் பண்புகள் பற்றிய விடயத்தில் முரண்படுபவார்களையே காபிர்கள் எனக் கூறமுடியாது. அபூபக்கர் மற்றும் உமர் விடயத்தில் முரண்படுபவர்களை எவ்வாறு காபிர்கள் எனக் கூறலாம்” என இமாம் கஸ்ஸாலி பதிலளித்தமை குறிப்பிடத்தக்கது. இங்கு  சீயாக்களை ஹன்பலிக்கள் அணுகியதனை விட மென்மையான நோக்கில் அஷ்அரீக்கள்  அணுகியுள்ளதனை அவதானிக்க முடியும். எனவே சிலுவைப் போர் மற்றும் சியாக்களின் வகிபாகம் தொடர்பாக இமாம் இப்னு தைமியா கடுமையான நிலைப்பாடுகளுக்கு “ஹன்பலி மத்ஹப்” சார்ந்தவராக அவர் காணப்பட்டமையும் ஒரு பின்புலக் காரணி எனக் கூறலாம். மட்டுமன்றி ஹன்பலி மத்ஹபினா  கட்டமைத்த ‘சீயா-ஸூன்னி உறவுகள்” பற்றிய வரலாற்று விளக்கமானது இவ்விரு சமூகங்களினதும் வரலாற்றுக்குள் புதைந்துள்ள ‘சமூகலாசார அரசியலாதிக்க காரணிகளை” முழுமையாக மறைத்து விட்டன. வெறும் “கொள்கை ரீதியான வித்தியாசமே” Ideological camping அனைத்து வரலாற்று முரண்பாடுகளுக்கும் ஏக நியாயம் என்ற மனப் பதிவை அது ஏற்படுத்தி விட்டது என்கிறார் கட்டார் பல்கலைக்கழப் பேராசரியர்.

சுருக்கமாக சீயா-ஸூன்னி வரலாறு தொடார்பான வாசிப்பில் மூன்று தவறுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்துள்ளதாக அவர் தெளிவுபடுத்துகிறார்.

அதிலொன்று சாரம்சவாதம் “Essentialism” எனப்படும் “வரலாற்றில் எப்போதும் இவர்கள் இப்படித்தான்”என்ற மனப்பதிவை உருவாக்கும் பாணியில் அமைந்த அணுகு முறையாகும்.

இரண்டாவது வரலாற்றில் இடம்பெறும் நிகழ்வொன்று ஏற்படுத்தும் தாக்கத்தை விளைவை வைத்து அதனை“மாறாத விதியாக” பொதுமைப்படுத்தும் அணுகுமுறை எனலாம். இதனை வரலாற்றாசிரியார்கள் ; “Selectivisam” என பெயரிட்டு அழைக்கின்றனர்.

மூன்றாவது சமகால சூழலில் மீது நின்று வரலாற்றை நோக்கும் அணுகுமுறை “Presentisam” ஆகும். அதாவது  இன்று ஈரான் அமெரிக்காவுடன் இணைந்து சூழ்ச்சிகளை மேற்கொள்வதும் அன்று சிலுவை வீரர்களுடன் சீயாக்கள் இணைந்து செயற்பட்டமையையும் ஓன்றுதான் என ஒப்பிட்டு நோக்கும் அணுகுமுறையே இதுவாகும். இத்தகைய வரலாற்று அணுகுமுறைகள்  சிறந்த உடன்பாடான எதிர்காலத்தை பிராந்தியத்தில் ஏற்படுத்துவதற்கு துணை செய்ய மாட்டாது என்பது பேராசிரியர் முஹம்மத் முஹ்தார் ஷங்கீதியின் அவதானமாகும்.

பாரசீக-அரபு நாகரீகங்களுக்கு இடையிலான  மேலாண்மைக்கான போட்டி நிலைகள் ‘சீயா-ஸூன்னி” முரண்பாட்டுக்கு கருவியாக்கப்படும் அபாயம் காணப்படுகின்றன. இதுவும் கூட வரலாறு பற்றிய பிழையான புரிதலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதொரு அம்சமாகவே நோக்கப்பட வேண்டும் என பேராசிரியார் ஷங்கீதி விவரிக்கிறார். குறிப்பாக பாரசீக இலக்கியங்களில் அரபு நாகரீகங்களை விமர்சனம் செய்து எழுதப்பட்டவைகளை அல்லது அரபு இலக்கியங்களில் பாரசீகத்தை விமார்சனம் செய்து எழுதப்பட்டவைகளை ‘சீயா-ஸூன்னி’ மோதலுக்கு ஆதாரங்களாகவும் குழுநிலைவாத பிளவுக்கு நியாயங்களாகவும் பரவலாக கொள்ளப்படுகின்றன. அதிலும் பாரசீகத்தை சீயாஇஸத்துடனும் அரபு துருக்கிய நாகரீகங்களை ஸூன்னி இஸ்லாத்துடனும் குழுநிலைவாத விவாத்தை கட்டியெழுப்புபவர்கள் தொடர்புபடுத்துகின்றனர்.ஆனால் வரலாற்றின் ஒளியில் நுணுக்கமாக பகுப்பாய்வு செய்யும் போது  பாரசீகத்தில் ஸூன்னி இஸ்லாமே நீண்ட நெடுங்காலம் ஆதிக்கம் செலுத்தியதை புரிந்து கொள்ள முடியும். மட்டுமன்றி துருக்கியைச் சர்ந்த ஸல்ஜூக்கியர்களுக்கு ஸூன்னி இஸ்லாத்தை நகர்த்திச் சென்றவர்களும் பாரசீகர்களே. மறுபுறம் சீயா கோட்பாடுகளை பாரசீகத்திற்கு அறிமுகஞ் செய்தவர்கள் “ஸபவீக்கள்” எனும் துருக்கிய வம்சாவழியினராகும்.

மேற்கூறப்பட்ட வரலாற்றுக் குறிப்புகள் பாரசீக-அரபு நாகரீக மேலாண்மைக்கான போட்டி நிலைக்கு “சீயா-ஸூன்னி” வடிவம்  கொடுப்பதன் பாரதுரத்தை சுட்டிக் காட்டுவதாக முஹ்தார் ஷங்கீதி குறிப்பிடுகிறார்.

அதே போன்று அரபு கலாச்சாரப் பின்புலத்தில் எழுந்ததோர் தோற்றப்பாடே சீயா சிந்தனையாகும். அதனை“யெமனிய தோற்றப்பாடு”என வரையறுத்துச் சொல்லலாம். ஏனெனில் சீயாஇஸத்தை வீரியத்துடன் தூக்கிப் பிடித்தவர்கள் யமனிய அஹ்லுல் பைத் ஆதாரவாளர்களே.  கார்பலாவிற்கு ஹூசைன் (றழி) அவர்களுடன்  சென்றவர்களில் அதிகமானவர்கள் “யெமனியர்கள்” என்பது மற்றொரு வரலாற்றுத் தகவலாகும். இத்தகைய தகவல்களை ஆய்தறியும் போது “பாரசீக நாகரீகத்தை சீயாஇஸத்துடனும் அரபுலக நாகரீகத்துடன் ஸூன்னி இஸ்லாத்தையும் தொடர்புபடுத்துவது  பிழையானது என பேராசிரியர் முஹ்தார் ஷங்கீதி வலியுறுத்துகிறார் மேலும்  சர்வதேசத் துதாக இஸ்லாத்தை நிலைத்து நிற்கச் செய்வதில் குர்திய  அரபு  துருக்கிய  பாரசீக நாகரீங்கள் அனைத்திற்கும் பங்கிருக்கிறது. இஸ்லாமிய நாகரீகத்தின் சுருக்கமே அரபுகளின் வாளும்  துருக்கியார்களின் கேடயமும் பாரசீகத்தின் பேனையுமாகும். இவ்வாறு பல நாகரீகங்களுடன் உறவாடிய  செழிமையான வரலாற்றை பெற்றுக் கொண்டதன் விளைவாகவே  இஸ்லாமிய வரலாறு இன்றும் இஸ்லாமிய சிந்தனைக்கு மூலாதாரமாக கருதப்படுகின்றன. இந்த விரிந்த பார்வையை கட்டுப்படுத்தும் நோக்கில் ‘பாரீசீக-அரபு” நாகரீக ஆதிக்க போட்டியை முன்வைக்கக் கூடாது என பேராசிரியார் ஷங்கீதி வலியுறுத்துகிறார்.

முரண்பாட்டு முகாமைத்துவம் பற்றி எழுதும் சில நிபுணர்கள் “Give war a chance” எனக் கூறுவார்கள். ஏனெனில் குறித்த முரண்பாட்டினை போரினால் தீர்க்க முடியாது என்பதனை அதனுடன் தொடர்புபட்ட அரசியல் கதாநாயகர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக. இதனையொத்த அரசியல் தலைமைதான் மத்திய கிழக்கில் இன்று நிலவுகிறது என்கிறார். முஹ்தார் ஷங்கீதி. எந்தவொரு மாற்றத்திற்கு முன்னரும் “சிவில் யுத்தம்”  தவிர்க்க முடியாதவொன்றாகும். சிவில் யுத்தத்திற்கு அடுத்த கட்டமே “மாற்றமாகும்”. இதனையொரு அரசியல் வரலாற்று நியதி என்றும் கூறலாம். ஆனால் சிவில் யுத்தத்தின் பருமனையும் இரத்தக் களரியையும் குறைக்கும் இரண்டு வழிமுறைகளை அரசியல் விஞ்ஞானிகள் பரிந்துரை செய்வார்கள். அவை“Preventive Reforms”(தற்பாதுகாப்பு சீர்திருத்தங்களை) ஏற்படுத்தல் மற்றும் உடன்பாட்டு அரசியல் பொறிமுறைக்கான கலந்துரையாடல்களை துவங்குதல் என்பவனாவாம் என பேராசிரியர் ஷங்கீதி எழுதிச் செல்கிறார்.

இன்று மத்திய கிழக்கின் அரசியல் முரண்பாடுகள் அனைத்தும் சீயா-ஸூன்னி வடிவம் பெறுவதற்கான பிரதான நியாயம் யாதெனில் முஸ்லிம் உலகின் அரசியல் பொறிமுறைகளில் காணப்படும் போதாமைகளே. குறிப்பாக இரண்டாம் உலக மகா யுத்தத்தைத் தொடர்ந்து சுதந்திரம் பெற்ற அதிகமான அரபுலக நாடுகள் “தேச-அரசு” பொறிமுறைக்கு உகந்தாக அமைந்திருக்கவில்லை. விளைவாக அரச இயந்திரத்தை தன்வசப்படுத்தாமல் தனது மத,இன,குழு பிரிவுகளுக்கு எதிர்காலம் இல்லை என ஒவ்வொரு பிரிவினரும் எண்ணத் துவங்கின. எனவே எப்படியாவது அரசை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என அவை முந்திக் கொண்டன. குறிப்பாக சிரியாவில் அஸதிய குடும்பத்தின் சார்வதிகாரம் ஈராக்கில் சீயா அரசியல் கட்சிகளது அனுபவம்  லெபனான் சிவில் யுத்தம் போன்றவற்றை அதன் வெளிப்பாடாகக் கூற முடியும். அதிலும் அரசென்பது “சிவில் சமூகத்தின் வெளிப்பாடு” என்ற நிலையைத் தாண்டி“ஒரு பிரத்தியேகக் சமூகக் குழுவின் பாதுகாப்பிற்கான கேடயம்”Sect and state”  என்ற தளத்தை நோக்கி சுதந்திரத்திற்குப் பிந்திய முஸ்லிம் உலகின் அரசியல் ஒழுங்குகள் வடிவம் பெற்றன. இதனால் உடன்பாட்டுக் கலாசாரம் சிவில் சமூகம்  பங்குபற்றல் மற்றும் அதிகாரச் சுழற்சி போன்ற அரசுக் கோட்பாட்டின் பல்வேறு கூறுகள் குறைந்த முக்கியத்துவம் பெற்றதனை அவதானிக்க முடியும். அதிலும் துருக்கி  சிரியா மற்றும் ஈராக் பிராந்தியங்களில் அரசு பற்றிய வாசிப்பு முழுமையாகவே “இனத்துவரீதியில்” மட்டுமே புரியப்பட்டு வந்துள்ளன. அரசைக் கட்டுப்படுத்துவதே தனது இனத்தின் இருப்பினை பாதுகாப்பதற்கான ஒரே வழிமுறை என்ற சிந்தனை சகல சமூகக் குழுக்களையும் வழிநடாத்தி வந்துள்ளன. இவ்வெதிர்மறை உளவியலை திருத்தியமைக்கும் வரை முரண்பாடுகள் தொடரவே செய்யும். என்கிறார் கட்டார் பல்கலைக்கழகப் பேராசிரியர்.

சீயா-ஸூன்னி உட்பிரிவுவாதத்திற்கு பிரதான தூண்டல் காரணியாக இரு சமூகங்களும் கடந்து வந்த வரலாற்றுப் பாதையைக் கருத முடியும். இந்தப் பின்புலத்தில் வரலாற்றெழுதுகையில் இருதரப்பினரும் நான்கு விதமான தவறுகளை விட்டுள்ளனர். முதலாவது தத்தமது வரலாற்றை அரசியல் தவறுகளற்ற தூய்மையானதொன்றாக எழுத முற்படுதல்  இரண்டாவது இரு சமூகங்களுக்கும் இடையிலான உறவை  எக்காலத்திற்கும் மதிப்பீடு செய்வதற்கான அளவுகோலாக வரலாற்றுச் சம்பவங்களை கருதுதல்  மூன்றாவது  சமகால நிகழ்வுகளை வரலாற்று நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு விளக்கமளிக்க முற்படுதல் நான்காவது வரலாற்றில் இடம்பெற்ற ஒரு தவறை அடிப்படையாக வைத்து ஒரு சமூகம் பற்றிய பொது விதியை வடிவமைத்தல் போன்றனவாகும். மொத்தத்தில் சீயா-ஸூன்னி உள்முரண்பாடுகளுக்கு பெரும்பாலும் வரலாறு தொடர்புபடுவதானால்“நடுநிலையான மற்றும் விமர்சனபூர்வமான வரலாற்றைக் கட்டியெழுப்பாமல் சிறந்த எதிர்காலமொன்றை கட்டியெழுப்ப முடியாது”என முஹ்தார் ஷங்கீதி கூறுகிறார்.

சீயா-ஸூன்னி முரண்பாட்டிற்கு துணை செய்யும் மற்றொரு காரணியாக “அரபு-பாரசீக நாகரீகங்களுக்கு” இடையிலான போட்டி நிலை கருவியாக்கப்பட்டுள்ளது. அதாவது இஸ்லாமிய நாகரீகத்திற்கு அரபு நாகரீகமா அல்லது பாரசீக நாகரீகமா அதிகமாக பங்களிப்புச் செய்துள்ளது? என்ற கேள்வியானது முரண்பாட்டிற்கான புள்ளியாக கொள்ளப்படுகின்றன. வரலாற்றியல் மற்றும் இஸ்லாமிய நாகரீக கட்டமைப்பின் அடிப்படைகளில் இப்பார்வை பிழையானது. ஏனெனில் சீயாக் கோட்பாடும் சிந்தனையும்  கோலோச்சியதனை விட ஸூன்னி இஸ்லாமிய கோட்பாடுகள் பாரசீகத்தினை வழிநடாத்திய  காலப் பிரிவு நீண்டது. மேலும்  பாரசீக  அரபு  துருக்கிய நாகரீக இடையுறயு என்பது சீயா-ஸூன்னி கோட்பாடுகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒன்றல்ல. ஏனெனில் துருக்கிக்கு ஸூன்னி இஸ்லாத்தை அறிமுகஞ் செய்தவர்கள் பாரசீகர்கள். மறுபுறம் பாரசீகத்திற்கு சீயாஇஸத்தை அறிமுகஞ் செய்தவர்கள் துருக்கியார்கள். எனவே பாரீசகத்தை முழுமையாக சீயா சிந்தனையின் மூலமாகவும் அரபு மற்றும் துருக்கிய நாகரீகங்களை முழுமையாக ஸூன்னி இஸ்லாமாகவும் சுருக்கி நோக்க முடியாது. மட்டுமன்றி முழுமொத்த இஸ்லாமிய நாகரீகமென்பது அரபுகளின் போராட்ட உணர்வுகளும் துருக்கியர்களின் வீரமும்  பாரசீகத்தின் அறிவுப் பாரம்பரியமுமாகும்.

இன்றைய அரபுலகில் மற்றும் அகன்ற முஸ்லிம் உலகில் நிலவும் “அரசு” பற்றிய இனத்துவப் புரிதலை புனர்நிர்மாணம் செய்வதும் ‘சீயா-ஸூன்னி’ முரண்பாட்டை ஒழுங்குபடுத்துவதில் பெரிதும் துணை செய்யும் விடயமாகும். ஏனெனில் ஒவ்வொரு உபகுழுக்களும் ‘அரசை” (controlling the state)  கட்டுப்படுத்துதான் தனது குழுவின் எதிர்காலத்தினை உத்தரவாதப்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்ற உளவியலிலேயே அரசியல் செய்ய முற்படுகின்றன. இதனை சீயா-ஸூன்னி முரண்பாட்டின் மற்றொரு பரிணமானம் எனலாம். எனவே சகல உரிமைகள் கடமைகள்  பொருளாதார சமத்துவம் சிவில் உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்படும் அரசு குறித்த விவாதமும் அதற்கான வேலைத் திட்டங்களும் சிவில் சமூகத்திற்கு மத்தியில் அமைதி நிலையை ஏற்படுத்த வழிவகுக்கும்.

துணை செய்த கட்டுரைகளும் விரிவுரைகளும்

 الثورة السورية والبنية الإقليمية الشيعية ، مجلة العصر ، مختار الشنقيطي

الحرية والسورية ، مجلة العصر ، مختار الشنقيطي

العرب والإيران : إشكالية تعريف العدو ، مجلة العصر ، مختار الشنقيطي

السلفيون والإيران ، مجلة العصر ، مختار الشنقيطي

من الثورة المضادة إلى الإصلاح الوقائي ، الجزيرة نت ، مختار الشنقيطي

السنة والشيعة : التواصل والقطيعة ،الجزيرة نت ، مختار الشنقيطي

الطائفية في زمن الثورات ، منتدى العلاقات الدولية ، مختار الشنقيطي

تراكم الهويات وتزاحمها ، مؤتمر فور شباب ، مختار الشنقيطي

الحروب الصليبية وعلاقاة السنة والشيعة ، المركز العربي للبحوث والدراسات السياسية ، مختار الشنقيطي

الحصاد الطائفي في المنطقة ، الحزيرة نت ، مختار الشنقيطي

أين تتجه الشرق الأوسط ، منتدى الجزيرة للدراسات ، مختار الشنقيطي