Thursday , September 21 2017

தென்சீனக்கடலை விழுங்கி ஏப்பமிடத் துடிக்கும் அமெரிக்க பூதம்.



Muja Ashraff
உலகின் கடற் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பங்கையும், கடலுக்கடியிலான தொலைத்தொடர்பு வலைப்பின்னல் நிறைந்த கேபிள்களையும், போர்த்தந்திரம் மிக்க முக்கியத்துவம் வாய்ந்த குவிமையத்தையும் கொண்ட பகுதியே தென்சீனக் கடல்.

மேலும் இப்பிராந்தியத்தியமானது  200-க்கும் மேற்பட்ட ஆளில்லா சிறிய தீவுக் கூட்டங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. எண்ணெய் வளமும் எரிவாயு வளமும் கடலுணவு வளமும் நிறைந்துள்ள இத்தீவுகளுக்கு உரிமை கோரி வடக்கே சீனா மற்றும் தைவான், கிழக்கே பிலிப்பைன்ஸ், மேற்கே வியட்நாம், மலேசியா மற்றும் புருணை, தென் கிழக்கே இந்தோனேசியா போன்ற பிராந்திய நாடுகள் தமக்கிடையே பிளவுபட்டுக் கிடக்கன்றன.

தென் சீனக்கடலில் உள்ள இத்தீவுகள் யாருக்குச் சோந்தம் என்பதை அந்த வட்டார நாடுகள்தான் தங்களுக்குள் பேசித் தீர்வு காண வேண்டுமே தவிர, இதில் தலையிட்டு நாட்டாமை செய்வதற்கு அமெரிக்காவுக்கோ அல்லது பிற ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கோ எவ்வித உரிமையும் கிடையாது. ஆனால், அவ்வாறு தலையிடுவதற்கான முகாந்திரத்தைத் தேடுவதற்காகவே, தனது நட்பு நாடுகளின் பெயரால் அமெரிக்கா மூக்கை நுழைக்கிறது. பொருளாதார நெருக்கடிகள் முற்றி வருவதால் அமெரிக்காவும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் மீது குறி வைத்து, சீனாவின் செல்வாக்கைத் தடுத்து இப்பிராந்தியத்தில் மேலாதிக்கத்தை நிலைநாட்டத் துடிக்கின்றன.

கிழக்கு சீனக் கடலில் உள்ள எரிவாயு வளமிக்க சென்காகூ தீவுகளுக்கு ஜப்பானும் சீனாவும் உரிமை கோரி வருகின்றன. எண்ணெய் எரிவாயு வளமிக்க ஸ்பெரட்லி தீவுகள் தமது பாரம்பரிய உரிமை என்று சீனாவும் தைவானும் ஜப்பானை எதிர்க்கின்றன. பாரசெல்ஸ் தீவுகளில் சிலவற்றை வியட்நாமும் தைவானும் உரிமை கோருகின்றன. இந்தோனேசியாவும் பிலிப்பைன்சும் புருணையும் இன்னும் சில தீவுகளுக்கு உரிமை கோருகின்றன.

இந்நிலையில், ரஷ்யாவானது தன் வல்லரசுக் கனவுடன் 2010ம் ஆண்டில் வோஸ்டாக் எனும் பெயரில் ஜப்பானுக்கும் கொரியாவுக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் மிகப் பெரிய போர் ஒத்திகை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இது அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இப்பிராந்தியத்திலுள்ள அமெரிக்க விசுவாச நாடுகளுக்குத் தனது இராணுவ வல்லமையை வெளிக்காட்டி எச்சரிக்கும் நடவடிக்கையாகவே பார்க்கப்பட்டது இதனை ஜப்பான் எதிர்த்த போது அடுத்தடுத்து இது போன்ற போர் ஒத்திகை நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும்,2020ஆம் ஆண்டளவில்  புதிதாக நவீன அணுசக்தி நீர்முழ்கிக் கப்பல்களை இப்பகுதியில் இயக்கப் போவதாகவும் ரஷ்யா அறிவித்ததும் பிராந்திய ஆதிக்க மனப்பான்மையுடனே.

கொரிய தீபகற்பத்தில் தற்போது நிலவும் பதற்றமும் போர்ச்சூழலும் வடக்கே ஜப்பானிலிருந்து தெற்கே ஆஸ்திரேலியா வரையிலான பசிபிக் கடற்பகுதியில் ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கு இடையிலான மேலாதிக்கப் போட்டா போட்டியின் ஒரு வெளிப்பாடுதான். தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவிலிருந்து அமெரிக்க மேலாதிக்க வல்லரசு வெளியேறாதவரை தென்சீனக் கடலில் அமைதி நிலவப்போவதில்லை.

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இயற்கை மூலவளங்களைக் கொள்ளையிடுவதிலும் மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதிலும் ஏகாதிபத்திய வல்லரசுகளிடையே போட்டாபோட்டி நிலவும்வரை போர்களும் பதற்ற சூழ்நிலைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

Originally posted by Madawelanews