Friday , November 24 2017

நயீமாக்களின் பெருமூச்சுகள் தமிழீழத்தைச் சுட்டெரிக்கும்.

அப்துல் மனாபை கட்டி இழுத்துக் கொண்டு சென்ற காட்சி அவளுக்கு இன்னும் நினைவிருக்கிறது. முகத்திலிருந்தும் தலையிலிருந்தும் இரத்தம் வழிய வழிய அவனை இழுத்துச் சென்றார்கள். அவர்கள் தான் விடுதலைப்புலிகள் அவர்களுக்குத் தான் தமிழீழம் வேண்டும்………..

கற்பிட்டிக் கடற்கரையில் அவள் கால்கள் பதழத்த தடங்களை அழித்து விட அலைகள் முட்டி மோதிப் பாய்ந்து திரும்பின.

அவள் மனக் கடலில்பிரளயத்தை ஏற்படுத்திப் படார்! தடார்! என்று விழும் எண்ண அலைகளை முறியடிக்க இந்தக் கடலுக்கு முடிந்து விடப்போகிறதா என்ன?.

கற்பாறையொன்றில் குந்திக் கொண்டு வளைந்த வானும் நெளிந்த கடலும் சந்திக்கும் புள்ளியை அவள் கண்கள் ஊடறுத்துப் பாய்ந்து கொண்டிருந்தன.

‘மனாப் வரமாட்டான்! இந்த வானும் கடலும் கைகோர்த்த இடத்துக்கு அப்பால் எங்கோ அவன் போய்விட்டான். அவன் இனித் திரும்பி வரப்போவதில்லை. அப்படித்தான் எல்லோரும் சொல்லிக் கொண்டார்கள். அது உண்மையில் உண்மையாக இருக்கலாம்.

ஆனால் நயீமா அதனை நமப விரும்பவில்லை. அதை ஏற்க மறுத்தாள். ஒரு விதவையின் பரிதாபப் போர்வைக்குள் ஒரு எரிமலையை அவள் ஒளித்து வைக்க முடியாது. அவளால் விதவையாய் வாழ முடியாது.

வதியிருந்தால் இன்னொருத்தனின் மனைவியாக மாறும் வசதி அவளுக்குக் கிட்டும். அவள் இளமைக்கும் அழகுக்கும் அவள் விலைபோக முடியாத பண்டம் அல்ல.

ஆனால் இன்னொருத்தனின் மனைவியாவதையும் அவள் வெறுத்தாள். வேறொருவனின் விருப்பத்து விருந்தாகும் ஒரு கட்டுப்பாட்டு வாழ்வை அவள் நிராகரித்தாள்.

அவளுக்கு இன்று ஆண் சுகம் தேவைப்படவில்லை. ஆண் பாதுகாப்பும் தேவைப்படவில்லை. இந்த இரவில் இந்தக் கடற்கரையில் எவனாவது இச்சை மீறியவன் அவளை கற்பழித்து விட்டு சென்றாலும் அவள் கவலைப்பட போவதில்லை.

அவளிடம் எதுவுமே இல்லை. அந்தப் பிடிவாதம் ஒன்றைத் தவிர. அவள் நியாயம் தேடிப் போராடினாள். தனக்கு இழைக்கப்பட்ட இந்த அநியாயத்துக்கு புலிகள் மட்டுமல்ல, தமிழர்கள் மட்டுமல்ல, இந்த நாடு முழுவதுமே பதில் சொல்லியாக வேண்டும் என்று அவள் தனக்குள் பெருமினாள். அந்த நாள் வந்தால், தனது நகத்தோடு நகத்தை மோதி நெருப்புப் பொறியைப் பறக்க வைத்து அந்த நெருப்பு பொறியால் புலிகளின் தமிழீழக கற்பனையைச் சுட்டுப் பொசுக்குவதற்காக அவள் வாழ்ந்தாள்.

அவளுக்கு வேறு லட்சியங்களில்லை. அவளது இரு ஆண் குழந்தைகளையும் பெரிய கல்விமான் களாக்க வேண்டும் என்று அவள் கனவு காணவில்லை. இந்த நாட்டுக்கு பெரும் புகழைத் தேடித்தரும் எந்த மகனாகவும் தன் எந்த மகனும் வளர வேண்டும் என்று அவள் நினைக்கவில்லை.

அவளுக்கு வேண்டியிருந்ததெல்லாம் பழி, பழிக்குப் பழி. இரத்தத்துக்கு இரத்தம். அத்தனைப் புலிகளையும் தன் கையாலேயே கொன்று குவித்து அந்த நரமாமிச புலிகளின் இரத்தத்தில் தனது நோன்பைத் திறக்க வேண்டுமென்பதே. அவளது ஆதங்கம். அதற்கு எத்தனை வருடங்கள் சென்றாலும் பரவாயில்லை.

அதற்காக என்ன விதமான வாழ்கையை வாழ வேண்டி வந்தாலும் பரவாயில்லை. இன்று அகதியாகவும் நாளை அநாதையாகவும், பிச்சைக்காரியாகவும் பாதை முழுக்க அலைந்து வாழவேண்டி வந்தாலும் பரவாயில்லை.

அவள் பாதை திசை மாறாது. ஆவள் பயணம் நின்று போக்கூடாது. இன்னும் ஐந்து வருடங்கள், பத்து வருடங்கள் அல்லது இருபது வருடங்கள் – எத்தனை வருடங்கள் ஆனாலும் பரவாயில்லை.

என்றாவது ஒரு நாள் அவள் தன் ஊருக்குத் திரும்பிப் போவதற்காக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டாள்.
என்றாவது ஒரு நாள் தான் பிறந்து வளர்ந்து குழந்தையாய் தவழ்ந்து, சிறுமியாய் ஓடிவிளையாடி, கன்னியாய் கனவு கண்டு, மகிழ்ந்திருந்து, அன்னையாயட பிள்ளைகளைப் பெற்று வாழ்ந்த தன் ஊருக்குத் திரும்பிப் போவதற்கே அவள் விரும்பினாள்.

எந்த ஊரிலும் பூமியும் வானமும் தான் இருந்தன. ஆனால் அந்த ஊரின் நினைவுகள் அவளைப் பொறுத்த வரையில் எந்த ஊருக்கும் கிடையாது.

அந்த ஊரில் தான் அப்துல் மனாப் பிறந்தான்: வளர்ந்தான் : வாழ்ந்தான்.
அந்த ஊரில் தான் அப்துல் மனாப் நயீமாவைக் கண்டான்: காதலித்தான்: கல்லியாணம் செய்து கொண்டான்.

அந்தக் குளமும், கடலும், பனைமரங்களும், புழுதிக் காற்றும் அவளால் மறக்கக் கூடியனவல்ல.
அவற்றையெல்லாம் மறநது விடலாம். ஏன்? அப்துல் மனாபையும் மறந்து விடலாம்.

ஆனால் அவள் இருதயத்தைக் குத்திக்கிளறிக் கொண்டிருந்த விடயம் இவைகளேதுமில்லை. அப்துல் மனாபுக்கு  இழைக்கப்பட்ட அநியாயத்துக்காக இந்த உலகில் போராட வேறுயாருமில்லை. அவன் அனாதையாக செத்துப் போனான் என்று யாரும் சொல்லக் கூடாது என்பதுவே அவளது திக்காக இருந்தது.

அவனது அநியாயக் கொலைக்கு நியாயம் தேட யாருமில்லாதவளாய் அவன் இறந்து போனான் என்று யாரும் எண்ணக் கூடாது என்பதே அவள் திசையாக இருந்தது.

அவனுக்காய் நியாயம் கேட்;க, அவனுக்காய் வாதாட, அவனுக்காய் போராட, அவனுக்காய் பழிவாங்க, அந்தப்பயணத்திலேயே தாகும் மரித்து தன் குழந்தைகளையும் பறிகொடுக்க அவள் தயாராய் இருந்ததாள்.

அதற்காக அவள் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு போக வேண்டும். அங்கு முள்ளியவளையிலுள்ள ஹிஜ்ரா புரத்திற்கு போக வேண்டும்.
அப்துல் மனாபை கட்டி இழுத்துக் கொண்டு சென்ற காட்சி அவளுக்கு இன்னும் நினைவிருக்கிறது. முகத்திலிருந்தும் தலையிலிருந்தும் இரத்தம் வழிய வழிய அவனை இழுத்துச் சென்றார்கள். அவர்கள் தான் விடுதலைப்புலிகள் அவர்களுக்குத் தான் தமிழீழம் வேண்டும்.

ஆனால் மனாப் எந்தக் குற்றமும் செய்திருக்கவில்லை. அவனுக்கு குற்றம் செய்யத் தெரியாது. யாரையும் வஞ்சிக்கவும் தெரியாது. அவனுக்கு அதிகமான ஆசையும் கிடையாது. அவனது ஒரேயொரு ஆசை நயீமா தான். அவனது கவனமெல்லாம் அவள் பெற்றெடுத்த குழந்தைகள் மீது தான்.

மனாப் எல்லாத் தொழிலையும் செய்யக் கூடியவன். எந்தத் தொழிலும் அவனுக்கு ஒன்று தான். நியாயமான கூலி தான் அவன் பெறுவான். அவன் பெரிய படிப்புப்படித்தவனல்ல. ஆனால் நிறைய வாசிப்பான். அவனுக்கு எதிலும் ஒரு தெளிவான நோட்டம் இருந்தது.

அவனுக்குத் தமிழர்களின் போராட்டத்தில் ஆரம்ப காலத்தில் நம்பிக்கை இருந்தது. ஆனால் தமிழர்களின் இயக்கம் இரண்டைத் தாண்டியதும் அவனுக்கு தமிழர்கள் தமது கோரிக்கையை ஒன்றுபட்டு வெல்ல முடியாது என்று சொல்வான். அவன் அவர்களது எந்த இயக்கத்திலும் அனுதாபியல்ல. ஆனால் பத்மாநாபாவை மட்டும் உயர்ந்த மனிதனாக நினைத்தான். ஈபீஆர்எல்எப் ஐ அல்ல. எல்லாத் தமிழ் இயக்கங்களும் துவேஷேரோஹம் பீடித்த அக்கிரம ராட்சதர்கள். கொலைக்கார கும்பல் என்று சொல்வான்.

முஸ்லிம் வட கிழக்கில் தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால் அவர்களுக்கென்று ஒரு கட்சி தேவையில்லை. ஒரு இயக்கம் தான் வேண்டும் என்று சொல்வான். ஆனால் முஸ்லிம்களை வைத்து கொண்டு யாரும் இயக்கம் தொடங்க முன்வரக்கூடாது என்று பிரார்த்திப்பான். முஸ்லிம்கள் வியாபார நோக்கமாக இலங்கை வந்தார்கள். அவர்கள் இரத்தினத்திலிருந்த வியாபார நோக்கத்தை அவர்கள் தம் சந்ததிகளுக்கு தாரை வார்த்து கொடுத்து மறைத்துவிட்டனர். இன்றைக்கு முஸ்லிமகளுக்கு எல்லாமே வியாபாரம் என்று சொல்வான்.

முஸ்லிம்களுக்கென ஒரு அரசியல் கட்சி தொடங்கிய போது அவன் அன்றே சொன்னான் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடம் எந்தக் கொள்கையும் கிடையாது. வெறும் இன ஆவேச சுலோகங்களின் மூலம் பதவிக்கு வரவே அவர் விரும்புகிறார். எல்லா முஸ்லிம் தலைவர்களையும் விட அவர் தான் முஸ்லிம்களைக் காட்டிக் கொடுப்பார்- இவரரை நம்பி முஸ்லிம் சமூகம் கொஞ்சத் தூரம் அழிந்து போகும் என்றும் அப்துல் மனப் சொன்னார்.

அன்று அவன் சொன்ன வார்த்தைகள் இன்று எவ்வளவு உண்மையாகப் போய்விட்டன என்று நயீமா நினைத்துப் பார்த்து அழுதிருக்கிறாள்.

இவர்கள் யாருமே தனக்கு நியாயம் வழங்கப் போவதில்லை என்றும், தன் பழியைத் தானே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற பிடிவாதமும் அவளிடம் இன்று எஞ்சியுள்ள சொத்தாகும். இந்தச் சொத்தை விதவையென்ற பெயரிலோ, இனனொருத்தனின் மனைவி என்ற ஸ்தானத்திலோ இழந்துவிட தயாரில்லை.

மனாபைப் பார்க்க புலிகளின் கூடாரத்திக்கு அவள் தினமும் செல்வாள். ஒரு நாளைக்கு இரண்டு தரம் செல்வாள். மனைவியின் தம்பியைப் பாரம் கொடுத்தால் மனாபை விடுவதாக சொன்னார்கள்.

இந்தியப்படை முல்லைத் தீவைவிட்டு வெளியேறிகையோடு அவனும் இந்தியா சென்று விட்டதாக சொன்னார்கள். அந்தக் கதையை புலிகள் நம்பத் தயாராக இல்லை.

புலிகளின் முகாமில் மனாபை வண்ணான் வேலைக்கு வைத்திருக்கிறார்கள் என்று சொன்னார்கள். கையிலும் காலிலும் விலங்கு போட்டு அவனை எடுபிடி வேலைக்கு வைத்திருப்பதாக சொன்னார்கள். அவள் அவற்றைக் கேட்டு அழுவாள்.

மனாபை ஒரே ஒரு முறை ஆசைதீரப் பார்க்க வேண்டுமென்று புலிப்பொடியன்கள் அவளிடம் எதையெதையோ காட்டினார்கள். மிருகங்கள்! அவள் இனி அங்கே வரக்கூடாது என்று பயமுறித்தி அவளை ஓட ஓட சுட்டு விரட்டினார்கள். அவளைக் கேலிபண்ணி சிரித்தார்கள்.

அதற்குப் பின்னரும் நயீமா மனாபைப் பார்க்கவென்று போவாள். தூரத்திலிருந்து முகாரமைப் பார்த்துவிட்டுத் திரும்புவாள்.
இரண்டொரு மாதங்களில் புலிகளுக்கும் ஐ.தே. கட்சி அரசாங்கத்தும் ஏற்பட்ட மோதலில் வாழ்க்கை மேலும் இருண்டது. முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் இருபத்திநான்கு மணித்தியாலத்துக்குள் வெளியேற வேண்டும் என்று புலிகள் உத்தரவிட்டனர்.

போவதற்கு முன் முகாமுக்கு போனாள். கடைசியாக தன் கணவரைப் பார்க்கும் சந்தர்ப்பத்தை தனக்கு வழங்கும்படி மற்றாடினாள். அவள் சேலையைப் பிடித்து இழுத்து உரிந்து கையில் கொடுத்து அவளை விரட்டினார்கள் புலிகள். அந்த முகாம், அந்த புலிகள், அவர்கள் போராட்டம், சுதந்திரம், தமிழீழம் அனைத்தும் சாம்பரபகட்டும் என்று சபித்தவளாக ஹிஜ்ரா புரத்தை விட்டு, முள்ளிவளைவிட்டு, முல்லைத்தீவு மாவட்டத்தை விட்டு, வட மாகாணத்தை விட்டு, அவள் ஹிஜ்ரா புறப்பட்டாள்.

இன்று மனாப்பை அவர்கள் இழுத்துச் சென்று சரியாக மூன்று வருடங்கள். இந்த மூன்றாவது வருட ஞாபகர்த்த தினம் அவளுக்கு எந்த புதிய செய்தியையும் கொண்டு வரவில்லை. ஆனால் மனம் கட்டியாகி இறுகிக் கொண்டே வருகிறது.

என்றாவது தீர்வு ஒன்று வரும். அன்று தான் ஹிஜ்ரா புரம் திரும்புவேன். அங்கிருந்து தனது பழியைத் தீர்த்துக் கொள்ளுவேன் என்று வஞ்சம் அவள் உள்ளத்தில் ஒவ்வொரு கணமும் ஒலியெழுப்பிக் கொண்டிருக்கிறது. இந்தக் காற்றைப் போல், இந்தக் கடலைப் போல் அவள் மனம் ஓயாது வீசிக் கொண்டும் அடித்துக் கொண்டும் இருக்கிறது.

கற்பிட்டி முஸ்லிம் அகதிகள் முகாம்கள் ஒவ்வொன்றுக்கும் குறைந்தது ஒருடசின் நயீமாக்களும், ஒரு நூறு எரிமலைகளும் முடங்கிக் கிடக்கின்றன.

இந்த எரிமலைகள் ஒரு நாள் வெடிக்கும். அன்று இந்த நயீமாக்கள் தமது நோன்புகளைத் திறப்பார்கள்.

இவ் ஆக்கம் 1993ம் ஆண்டு மார்ச் மாதம் முஸ்லிம் கட்சி இதழில் பிரசுரம் செய்யப்பட்டது. காலத்தின் தேவை கருதி மீள்பிரசுரம் செயய்யப்படுகின்றது.

கலைக்கப்பட்ட  வடகிழக்கு மாகாண சபையின் எதிர் கட்சித் தலைவர், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தவிசாளர், முன்னாள் அமைச்சர்,  சட்டத்தரணி, வேதாந்தி எம்.எச்.எம். சேகு இஸ்ஸதீன் 

Originally posted by Madawelanews