Friday , November 24 2017

பணம் அற்ற பரிவர்த்தனை பாதுகாப்பானதா?

இப்போதெல்லாம் டிவியில் மோடி பேசுவதற்கும் ‘PayTM’ விளம்பரத்துக்கும் வித்தியாசமே தெரிவதில்லை. இரண்டும் சொல்வது ஒன்றே… ‘பணத்தை மறந்துடுங்க, மொபைல் போன் மூலமா பணம் செலுத்துங்க!’ ‘அந்த போனை யாராவது திருடிவிட்டால்..?’ என்ற கேள்வி நமக்குள் வருகிறதா இல்லையா? அதைக் கேட்டால் நம்மைப் ‘பட்டிக்காடு’ என்கிறார்கள்.

உண்மையில் யார் பட்டிக்காடு? ஆன்லைன் பாதுகாப்பை எந்தத் துறை கவனிக்கிறது என்பதிலேயே தெளிவில்லாத மத்திய ஆட்சியாளர்களா? இல்லை, அவர்கள் சொன்னார்கள் என வங்கியில் பணத்தைப் போட்டு, ஆண்டவன் மேல் பாரத்தைப் போட்டு வெறுங்கையுடன் சிரிக்கும் வெள்ளந்தி இந்தியர்களா? புரியவில்லை கோப்ப்பால்… புரியவில்லை!

ஒரு விசா கார்டின் தகவல்களைத் திருட வெறும் 6 விநாடிகள் போதும்’ என்கிறது இங்கிலாந்தின் நியூ காஸ்லே பல்கலைக்கழகம். இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த கணினி வைரஸ் ஒன்று, உலகம் முழுவதும் உள்ள 10 லட்சம் ஆண்ட்ராய்டு போன்களில் புகுந்து, வங்கிப் பரிவர்த்தனைகளை உளவு பார்த்துக்கொண்டிப்பதாகச் சொல்கிறார்கள் விஞ்ஞானிகள். பெரிய பெரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் செய்து வைத்திருக்கும் வளர்ந்த நாடுகளிலேயே இதுதான் நிலைமை.

இதனால்தான் ‘பணமற்ற பொருளாதாரம்’ என்பது எங்குமே நூறு சதவீதம் சாத்தியப்படவில்லை. இந்த கண்டிஷனில் இந்தியாவில் பணமற்ற பொருளாதாரம் என்பது நாமெல்லாம் விழுந்து புரண்டு சிரிக்க வேண்டிய காமெடியன்றி வேறில்லை. உலகிலேயே இணையம் மூலமாக வங்கிப் பணம் திருடப்படுவதில் நான்காவது இடத்தில் இருக்கிறது இந்தியா.

சமீபத்தில் ‘ட்யூப்கின்’ என்ற கணினி வைரஸ், ரஷ்யாவில் இருந்து பரப்பப்பட்டது. ஏ.டி.எம் மெஷின்களில் இந்த வைரஸை ஏற்றினால் அது வாயைப் பிளந்து, ‘எடுத்துக்கோ’ என மொத்தப் பணத்தையும் கொட்டிவிடும். உலகம் முழுவதும் இந்த வைரஸ் பரவினாலும் இந்தியாவில்தான் அது அதிகப் பணத்தை லவட்டியது. காரணம், இங்குள்ள ஏ.டி.எம் இயந்திரங்கள் எல்லாம் சுரேஷும் நதியாவும் லைட் எரியும் உடை அணிந்து லைட் மியூசிக் பாடிக்கொண்டிருந்த எண்பதுகளில் உருவாக்கப்பட்டவை.

இவற்றின் பாதுகாப்பை உடைப்பது மிக எளிது. கடந்த செப்டம்பர் மாதம் ஒரு குறிப்பிட்ட வங்கியின் ஏ.டி.எம்களில் கார்டை சொருகிய 6 லட்சம் இந்தியர்களின் மொத்த விவரங்களும் திருடப்பட்டன. அதைக் கண்டுபிடித்து, ‘இப்படி பலானது பலானது ஆகிப் போச்சு’ என வாடிக்கையாளர்களிடம் தலை சொறிந்து ஒப்புக்கொள்ளவே நம் வங்கிகளுக்கு ஒரு மாதம் தேவைப்பட்டது.

இந்தியாவில் பெரும்பாலான வங்கி ஏ.டி.எம்.களை இயக்கும் ஹிட்டாச்சி நிறுவனத்தின் சர்வரைத் தாக்கி, அதன் மூலம் 32 லட்சம் கார்டுகளின் விவரங்கள் திருடப்பட்டன. இது தெரிய வந்தபோது, அரசு அமைப்பான ‘நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா’ எந்தப் பதற்றத்தையும் காட்டவில்லை. ‘இதற்கு வங்கிகளே பொறுப்பு’ என ஆள்காட்டி விரலை நீட்டிவிட்டுப் போய்விட்டது.

அங்கே இங்கே கை வைத்து ஒருமுறை இந்திய ரயில்வே முன்பதிவுத் தளமான ஐ.ஆர்.சி.டி.சியிலேயே ஆன்லைன் திருட்டு நடந்தது. சுமார் ஒரு கோடிப் பேரின் பர்சனல் தகவல்கள் அதில் திருடப்பட்டதாகச் சொல்லப்பட்டது. வங்கிகளாவது திருட்டு நடந்ததை ஒப்புக்கொள்கின்றன. வாடிக்கையாளர்களுக்கு வேறு கார்டுகளை மாற்றித் தருகின்றன. அல்லது பாஸ்வேர்டை மாற்றும்படி அறிவுறுத்துகின்றன.

ஆனால், ரயில்வே நிர்வாகம் இன்று வரை தமது தளத்தில் திருட்டு நடந்ததை ஒப்புக்கொள்ளவே இல்லை. கொலை நடந்ததாக ஒப்புக்கொண்டால்தானே குற்றவாளியைக் கண்டுபிடிக்கவேண்டும்? அவனே கரன்ட் வயரைக் கடித்தான் என கணக்கெழுதிவிட்டால்..? சிம்பிள் லாஜிக்! வருங்காலத்தில் உலகப் போரே இணையம் மூலமாகத்தான் நடைபெறும் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

எல்லா நாடுகளும் அந்த சைபர் போருக்குத் தயார். சீனாவில் இணையப் பாதுகாப்புக்காக ‘நெருப்புப் பெருஞ்சுவர்’ என்ற பெயரில் அரசே ஆண்டுக் கணக்கில் உழைத்து, ஒரு பாதுகாப்புப் படலத்தை உருவாக்கி வைத்திருக்கிறது. நீங்கள் சீனர் ஒருவருக்கு அனுப்பும் மின்னஞ்சலில் ‘தலாய் லாமா’ என்ற சொல் இருந்தாலே அது அந்த படலத்தைத் தாண்டிப் போகாது. பிறகெப்படி கணினி வைரஸ் போகும்?

ஆனால், இந்தியா இதுவரை தன் இணையப் பாதுகாப்பு பற்றி யோசிக்கவே இல்லை. வடக்கத்திய அரசியல்வாதிகளிடம் ‘சைபர் அட்டாக்’ என்றால் ‘ஹாலிவுட் ஹீரோயினா?’ என்பார்கள். அவ்வளவுதான் விழிப்புணர்வு. அதனால்தான் உலகம் முழுவதும் உள்ள ஆன்லைன் திருடர்களின் முதல் சாய்ஸ் இந்தியாவாக இருக்கிறது. இங்கே அரசின் சொந்த இணையதளங்களின் பாதுகாப்பே ததிங்கிணத்தோம்தான்.

சமீபத்தில் எல்லையில் இந்தியப் படைகள் பாகிஸ்தானுக்கு ‘சர்ஜிகல் ஸ்ட்ரைக்’ என்ற பெயரில் பதிலடி கொடுத்தபோது, பாகிஸ்தானிலிருந்து பதிலுக்கு இணையப் போர் தொடுக்கப்பட்டது. ‘டீம் டெவில்’ என்ற பெயரில் ஆன்லைன் திருடர்கள், அரசின் 35 இணையதளங்களை முடக்கினார்கள். அதில் பீகார் மாநில அரசின் அதிகாரபூர்வ இணையதளமும் ஒன்று. அரசுத் தரப்பில் இதுபற்றியெல்லாம் மீடியாவிடம் வாயைத் திறந்திருக்க வேண்டுமே… மூச்!

சமீபத்தில் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு திருட்டு, காங்கிரஸின் இணையதளம் முடக்கம் என பைசா பெயராத இணையத் தாக்குதல்களும் இந்தியாவில் சகஜம். ஆபத்தான ஆன்லைன் திருடர்களெல்லாம், ‘இந்திய அரசின் தகவலைத் திருடி நாம என்ன பண்ணப் போறோம்’ என யோசிப்பதால் ஏதோ வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது எனலாம். ‘‘ஒட்டுமொத்த இந்தியப் பொருளாதாரமும் வங்கி மூலம் நடைபெறும் என்ற நிலை மட்டும் வந்தால், அத்தனை திருடர்களும் இந்தியாவைத்தான் குறி வைப்பார்கள்’’ என்கிறது சைபர் பாதுகாப்பு நிறுவனமான ஃப்யர் ஐ.

இந்த வருடத்தில் மட்டும் இந்தியாவில் 3 லட்சத்து 90 ஆயிரம் ஆன்லைன் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாகச் சொல்கிறது ஆன்டி வைரஸ் நிறுவனமான ‘கேஸ்பர் ஸ்கை’. இங்கே நமது மொபைல் போனை யாரும் தட்டிப் பறிக்கக் கூட வேண்டாம். எங்கோ இருந்தபடி ஜஸ்ட் ஒரு க்ளிக் மூலம் நம் வங்கி விவரங்களைத் திருட முடியும். கணக்கில் இருக்கும் மொத்தப்பணத்தையும் விழுங்கி, பீடா போட்டுக் கொண்டு சிரிக்க முடியும். இதற்கு அரசு பொறுப்பேற்காது. வங்கிகள் பொறுப்பேற்காது. ‘நீ ஏன் பாஸ்வேர்டை மாத்தலை?’ என்று நம்மிடமே கேட்பார்கள். இப்படி ஒரு நாட்டில்தான் பணமற்ற பொருளாதாரம் வரப் போகிறது.