Friday , November 24 2017

நம்மை உளவு பார்க்கும் நமது ஹெட்போன்கள்!

ஹெட்போனை கம்ப்யூட்டரோடு இணைத்து பாட்டு கேட்டுக்கொண்டிருந்தால் அதை சிறிது நேரம் அகற்றி வைத்து விடுங்கள். கட்டுரையை படிக்கும் வரை; ப்ளீஸ்!  சிக்கலே உங்கள் காதுகளில் உள்ள ஹெட்போன்கள்தான்.கம்ப்யூட்டரின் வெப் கேமிராக்களை ஹேக் செய்து நம்மை கண்காணிக்கலாம் என்பது பழைய நியூஸ்.

தற்போது உளவாளிகள் அப்டேட்டாக கணினியின் ஆடியோ டிவைஸ்களிலும் கைவைத்து விட்டனர். எப்படி? சிலர் கணினியில் உள்ள மைக்ரோபோன்களை  டிஸேபிள் செய்துவிட்டு ஷார்ப்பாக இணையத்தில் உலவுவார்கள்.

ஆனால் இனி அது வேலைக்கே ஆகாது. இஸ்‌ரேலிய ஆராய்ச்சிக் குழுவினர் செய்த ஆராய்ச்சியில் குறிப்பிட்ட மால்வேர் புரோகிராம் ஒன்று ஹெட்போன்களையே மைக்ரோபோன்களாக மாற்றி சைலண்டாக நமது உரையாடல்களை பதிவு செய்கிறது என்பதை கண்டறிந்து கூறியது மெகா டெக்னோ ஷாக்.

இஸ்‌ரேலைச் சேர்ந்த பென் குரியன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்தான் இதனை கண்டுபிடித்த டெக்னோ தீர்க்கதரிசிகள். இவர்கள் ஸ்பீக்கர் என்று புரோகிராமினால்  கணினியிலிருந்து மைக்ரோபோன்கள் நீக்கப்பட்டாலும், செயலிழக்கப்பட்டு இருந்தாலும் கூட அதனை இயக்குபவரின் உரையாடல்களை பதிவு செய்யலாம் என்று கூறியதோடு பிராக்டிகலாக செய்து காட்டினர். நாம் கணினியில் பயன்படுத்தும் ஹெட்போன்களை குறிப்பிட்ட மால்வேர் புரோகிராமினால் இயக்கி காற்றின் அதிர்வுகளை மின்காந்த அதிர்வு களாக மாற்றி அறையில் உள்ள ஒலிகளை பதிவு செய்யலாம் என விளக்கினர்.

‘மக்களுக்கு அவர்களறியாமலேயே நிகழும் தனிப்பட்ட சுதந்திரத்தின் மீதான தாக்குதல் இது. கணினியின் மைக்ரோபோனை கழற்றியிருந்தாலும் ஹெட்போன்களின் மூலம் உங்களது நடவடிக்கைகளை பதிவு செய்யலாம். டெக்னோ உளவின் விளைவுகளை மக்கள் இன்னும் அறியவில்லை’ என பகீர் பயத்தை தருகிறார் பென் குரியன் பல்கலைக்கழகத்தின் இணையப் பாதுகாப்பு ஆய்வகத்தின் தலைவரான மோர்டேஷாய் குரி.

ஹெட்போன்கள், இயர் போன்கள் மைக்ரோபோன்களாக எப்படி செயல்படுகின்றன என்பதை படம் வரைந்து பாகம் குறிக்கும் ஆயிரக்
கணக்கான வீடியோக்கள் யூட்யூபில் உண்டு. மின்காந்த அலைகளை ஸ்பீக்கர்கள் ஒலியாக மாற்றுகின்றன. அதே வேலையை ரிவர்ஸாகவும் செய்ய முடியும் என்பதுதான் நீங்கள் ஆகமொத்தம் விளங்கிக்கொள்ள வேண்டியது.

பென் குரியன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருப்பது இச்செய்திகளையல்ல. பெரும்பாலான கணினிகளில் ரியல்டெக் எனும் ஆடியோ புரோகிராம்தான் ஸ்பீக்கர்களை இசைக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே அதனை குறிவைத்து இயங்கும் இந்த புதிய உளவு மால்வேர், அதில் இணைக்கப்படும் ஹெட்போன்களை அப்படியே ரிவர்ஸ் செய்து சைலண்டாக உளவு வேலைக்கு பணிக்கிறது. இந்த சிக்கல் குறித்து ரியல்டெக் நிறுவனம் இன்னும் வாய்திறக்கவில்லை.

‘இது மிக ஆபத்தானது. இன்று அனைவரின் கணினிகளும் இந்த ஆபத்துள்ளது’ என்று கூறும் மோர்ஷெடாய் குரி, இதற்கு ஆதாரமாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்கின் லேப்டாப் கேமிரா மூலம் அவரது நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்ட நிகழ்வை குறிப்பிடுகிறார். கணினியிலிருந்து மைக்குகளை அகற்றிவிட்டாலும்கூட இந்த உளவு மால்வேர் பிடியிலிருந்து நீங்கள் தப்பிக்கவே முடியாது என்பதுதான் டிஜிட்டல் நிஜம்.

பென் குரியன் குழுவினர் இது குறித்து சோதித்தபோது ஹெட்போன்களின் மூலம் 6 மீட்டர் தொலைவுக்கு துல்லியமாக ஒலிகள் பதிவாகியிருந்தது கண்டு பிரமித்துப்போனார்கள். இது சாதாரண புரோகிராமே அல்ல. ரியல்டெக் சிப் புரோகிராமும் இதனை எளிதில் ஏற்று தன்னை மாறுதல் செய்ய அனுமதிக்கிறது என்பது தற்செயல் அல்ல என்பதோடு பாதிப்பிற்குட்பட்ட சிப்களை திரும்ப மாற்றித்தருவது ரியல்டெக் நிறுவனத்திற்கு பெரும் சிக்கல்தான் என ஆழமாக விரிவாகப் பேசுகிறார் மோர்டெஷாய் குரியன். டிஜிட்டல் உளவு தீராது!