Sunday , April 30 2017

அமெரிக்கர்களின் வேலை பறிபோவதை அனுமதிக்க முடியாது!


குறைந்த சம்பளத்தில் வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு ஆட்களை எடுப்பதன் மூலம் அமெரிக்கர்களின் வேலை பறிபோவதை இனியும் அனுமதிக்க முடியாது என டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், வரும் ஜனவரி மாதம் அந்நாட்டின் புதிய அதிபராக பதவியேற்கவுள்ளார். தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக இங்குள்ள ஐயோவா மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் டிரம்ப் பங்கேற்றார்.

அமெரிக்காவின் மிகப்பெரிய கேளிக்கை அரங்கமான ‘டிஸ்னி லேன்ட்’ நிறுவனத்தில் பணியாற்றிய பல அமெரிக்கர்களை வேலைநீக்கம் செய்துவிட்டு, அவர்களுக்கு பதிலாக இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து ஆட்களை அழைத்துவந்து பணியமர்த்தியதற்கு எதிராக வேலை இழந்த சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளதை சுட்டிக்காட்டி டிரம்ப் பேசினார்.

வேலையை இழந்தது மட்டுமின்றி, உங்களுக்கு பதிலாக குறைந்த சம்பளத்தில் பணியாற்ற வந்த வெளிநாட்டினர்களுக்கு நீங்களே பயிற்சி அளிக்க வேண்டும் என்பது இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடர நாங்கள் அனுமதிக்க மாட்டோம். கடைசியாக இருக்கும் ஒவ்வொரு அமெரிக்கரின் வாழ்வுரிமைக்காகவும் நாங்கள் போராடுவோம்.

சட்டப்புறம்பாக நாட்டுக்குள் குடியேறுபவர்களை நாங்கள் தடுத்து நிறுத்துவோம். நமது அழகான-அன்பான இளையதலைமுறையினரை நச்சுப்படுத்தும் போதைப்பொருட்கள் நாட்டுக்குள் ஊடுருவாமலும் தடுப்போம். நமது எல்லைப்பகுதியில் (மெக்சிகோ) நடைபெறும் வன்முறைக்கு முடிவு கட்டுவோம் என்றும் அவர் சபதம் ஏற்றார்.

 

The post appeared first on Akuranatoday.com