Friday , November 24 2017

வரலாற்றுப் பாட புத்தகங்களில் தமிழ், முஸ்லிம் வரலாறு திரிபு

கல்வி அமைச்சு வெளியிடும் இலவச பாடநூல்களில் தமிழ் வரலாற்றுப் பாட புத்தகங்களில் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் வரலாறு திரிபுபடுத்தப்பட்டும், மறைக்கப்பட்டுமிருப்பதாகவும் அதிகாரிகள் இது விடயத்தில் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்வியொன்றின் காரணமாக அரசு உடனடி கவனம் செலுத்தியுள்ளது.

ஒரு இனத்தின் வரலாறு மறைக்கப்படுமானால் அந்தச் சமூகம் கழுத்து நெரித்துக் கொல்லப்படுவதற்கு சமமாகவே நோக்கவேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவின் குற்றச்சாட்டு, அல்லது முறையீடு வரவேற்ககக்கூடியதொரு விடயமாகும்.

கடந்த காலத்தில் இனவாதச் சக்திகள் இந்நாட்டில் தமிழர்களதும், முஸ்லிம்களதும் வரலாற்றுத் தடயங்களையும், பதிவுகளையும் அழித்தொழிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டதை நாம் மறந்து விட முடியாது.

நல்லாட்சி அரசுக்காலத்திலும் இது போன்ற சதித் திட்டங்களில் தீய சக்திகள் செயற்பட்டு வருகின்றனரோ? என்ற சந்தேகம் கூட சிறுபான்மைச் சமூகங்களிடம் இருக்கவே செய்கிறது.

இவ்வாறானதொரு நிலைமையிலேயே 2017ம் ஆண்டுக்கான இலவச பாடநூல்களில் தரம் 6,7,8.9,10 என்பவற்றுக்கான வரலாற்றுப் புத்தகங்களில் தமிழ் பேசும் சமூகங்களின் வரலாறுகள் புறக்கணிப்புச் செய்யப்பட்டிருப்பதாக டக்ளஸ் தேவானந்தா குற்றம் சுமத்தியதோடு உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் துரிதமாக செயலில் இறங்கிய கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன், டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் ஆகியோர் உட்பட தமிழ் பேராசிரியர்கள் தில்லைநாதன், பாலசுந்தரம்பிள்ளை உள்ளிட்டவர்கள் தமிழ் வரலாற்றுப் பாட விரிவுரையாளர்கள், ஆசியர்கள், ஆர்வலர்கள், கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழ்ப் பாடநூல் ஆக்கப் பிரிவில் கடமையாற்றும் தமிழ் அதிகாரிகள், நூல் உள்ளடக்கத்தைத் தீர்மானிப்பவர்களாக இல்லாமல் சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்ப்புச் செய்கின்றவர்களாகவும், எழுத்துப் பிழைகளை ஒப்புநோக்குச் செய்கின்றவர்களாகவுமே கடமையாற்ற முடிகின்றதாலும், துறை சார்ந்தவர்கள் போதுமான வகையில் அங்கு கடமையில் அமர்த்தப்படாததுமே இவ்வாறான தவறுகளுக்கும், புறக்கணிப்புக்களுக்கும் காரணம் என்னவென ஆராயப்பட்டதுடன், அந்தக் குறைபாடு அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இங்கு கல்வித் திணைக்கள அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்ட முக்கிய விடயம் கடந்த பல வருடங்களாக வரலாற்றுப் புத்தகங்களை தயாரிக்கும் பொருட்டு பல்கலைக்கழக தமிழ் பேராசிரியர்களுக்கு எழுத்து மூலம் பாடவிதானம் தொடர்பில் பங்களிப்பைச் செய்யுமாறு கேட்கப்பட்ட போதிலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர்களது ஒத்துழைப்போ பங்களிப்போ கிட்டவில்லை.

தமிழ் பேராசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்காத போது கல்வித் திணைக்களம் என்ன செய்ய முடியும் என்ற அதிகாரிகளின் கருத்தை எம்மால் உதாசீனம் செய்துவிட முடியாது.

தவறு எம் பக்கம் இருக்கும்போது அதிகாரிகள் மீது பழி சுமத்துவது நியாயமானதல்ல.

இந்த விடயத்தில் தமிழ்க் கல்விமான்கள் பொடுபோக்குத் தனமாக நடந்து கொண்டிருப்பது ஆரோக்கியமான செயற்பாடாக கருதமுடியாது.

எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் இடம்பெறக் கூடாது என்பதில் தமிழ்ப் பேசும் சமூகங்கள் விழிப்புடன் செயற்படவேண்டும்.

பல்கலைக்கழக உயர்மட்டத்தினரே பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்வதானது இனத்துக்குச் செய்யப்படும் துரோகமாகவே நோக்க வேண்டியுள்ளது.

அதே சமயம் கல்வித் திணைக்கள அதிகாரிகளின் குற்றச்சாட்டை பிரச்சினைக்குத் தீர்வாக ஏற்கவும் முடியாது. பல்கலைக்கழக பேராசிரியர்களிடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்காது போனால் அதனை உயர்மட்டத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்து தவறு நடப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

அதனைச் செய்யாமல் இனங்களின் வரலாற்றை மூடிமறைக்கும் வகையில் பணிகள் முன்னெடுக்கப்படுவதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

நாளை இந்த நாட்டில் பிறந்த தமிழ், முஸ்லிம் சமுகங்களை வரலாறு இல்லாத சமூகங்களாக திரிபுபடுத்தும் தீய சக்திகளுக்கு இவ்வாறான செயற்பாடுகள் துணை போகக்கூடியதாக அமைத்து விடலாம்.

அந்த வகையில் எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம் சமுகங்கள் எதிர்நோக்க விருந்த வரலாறில்லாத சமுகம் என்ற அவச் சொல்லிலிருந்து மீட்டெடுப்பதற்கான பெரும் கைங்கரியத்தை பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா செய்திருக்கின்றார்.

சிறுபான்மைச் சமுகததின் மீதான தனது கடப்பாட்டை அவர் செய்திருக்கின்றார். இந்த விடயத்தில் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணனின் சமயோசித நடவடிக்கைகளும் பாராட்டப்பட வேண்டியதே.

பாடசாலைகளில் தான் எமது எதிர்கால பரம்பரைக்கு எமது வரலாறு பதிவு செய்யப்படவேண்டும். அதனைச் செய்யத் தவறினால் அவர்கள் வரலாற்றில்லாத சமூகங்களாக, எடுப்பார் கைப்பிள்ளைகளாக, நாடற்றவர்களாகக் கூட ஆகிவிடும் துர்ப்பாக்கிய நிலை ஏற்படலாம்.

இது போன்ற தவறுகள் எதிர்காலத்தில் இடம்பெறக்கூடாது. தமிழ், முஸ்லிம் சமூகங்கள் இனிமேலாவது கண்விழிக்க வேண்டும்.

அரசியல் சதுரங்க விளையாட்டிலிருந்து வெளியே வந்து சிறுபான்மை சமூகங்கள் தொடர்பில் மனச்சாட்சியுடன் செயற்பட அரசியல் தலைமைகள் முன்வரவேண்டும்.

நாளைய எதிர்காலத்தில் எமது இளைய சந்ததியினர் இந்த மண்ணில் தலைநிமிர்ந்து வாழும் சூழலை உருவாக்க வேண்டிய கடப்பாடு ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது என்பதை வலியுறுத்தி வைக்கின்றோம்.

–>