Sunday , June 25 2017
Breaking News

கடைசி மூச்சின் கடைசி வார்த்தை

கடைசி மூச்சு .. உற்றார் உறவினர் சூழ்ந்து அழுது வடித்துக்கொண்டு இருக்கின்ற பொழுது .. உடலில் இருந்து சூடு, பிரியாவிடை பெறுகிற வினாடி .
தாடையை சேர்த்து கட்டப்படுவதற்கு முன்னருள்ள கடைசி முனகல்.
கண்கள் இழுத்து மூடப்படுவதற்கு முன்னரான கடைசி நிமிடம் . கடைசியாக சொல்ல கிடைக்கிற பாக்கியமான உன்னதமான வார்த்தை.

“லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதர்ரசூலுல்லாஹ் “

சின்னதொரு வசனம் தானே ..
மிக இலகுவாக சொல்லி விடலாம் என்கிற நினைப்பில் இருந்தால் அதுதான் மகா தவறு .

வாழ்க்கை முழுவதுமே பாவங்கள் செய்து விட்டு அமல்களை மறந்து விட்டு, பொடுபோக்காக இருந்து விட்டு , கடைசி தருவாயில் அந்த அழகிய வசனத்தை இலகுவாக வாயால் சொல்லிவிட்டு சொர்க்கத்துக்கு லேசாக ‘விஸா’ எடுத்து விடலாம் என்று நினைப்பது அல்லாஹ்வுக்கு எதிராக செய்கின்ற சூழ்ச்சித்திட்டம் .

நாம் அடிக்கடி செய்யும் விடயத்தின் தாக்கம், கடைசி மூச்சில் வருகிற வார்த்தையின் வெளிப்பாடாக இருக்கும் என்பது ஏகோபித்த அறிஞர்களின் கருத்து .

அத்தஹபி என்ற அறிஞர் தனது  அல் காபாயிர் என்கிற நூலில் மோசமான முடிவு குறித்து  விளக்கியுள்ளார் .

தனது வாழ்க்கை முழுவதுமே கணக்காளர்
வேலை செய்த ஒருவர் மௌத்து வருகின்ற வேளை கலிமாவை சொல்லுமாறு கூறப்படுகிறார் . ஆனால் அவர் ‘பத்து .. ‘ ‘பதினொன்று ..’ ‘பன்னிரண்டு..’ என்கிற வார்த்தைகளோடு மரணித்தார் .

தனது வாழ்க்கையில் ‘செஸ்'(chess)
விளையாட்டுக்காக தன்னை அர்ப்பணித்த ஒருவருக்கு மரண தருவாயில் கலிமா கூறப்பட்டது . ஆனால் அவர் வாயில் இருந்து வந்த வார்த்தையோ ‘check mate ‘  ‘check mate ‘ என்பதுதான் .

மதுபானம் குடிப்பதை வழமையாக்கி கொண்ட ஒருவருக்கு மரணம் வந்த போது கலிமா சொல்லுமாறு கூறப்பட்டது . ஆனால் மதுபான
போத்தலை தருமாறு அடம்பிடித்தவாறு அவர் மௌத்தை தழுவினார்.

இதேபோல  எகிப்தில் மரண தருவாயில் இருந்த ஒருவரை பார்ப்பதற்காக
மார்க்க அறிஞர் ஒருவர் சென்றபோது மரண தருவாயில் அவர் போராடிக்கொண்டிருக்க, உம்மு குல்தூம் என்கிற அரபி பாடகரின் பாட்டு சப்தமாக டேப் ரெக்கோடரில் ஒலித்துக்கொண்டிருந்தது .
இதைக்கண்டு கவலையுற்ற அந்த அறிஞர் மரண தருவாயில் அவர் இருக்கையில் இவ்வாறு சப்தமாக பாடல் போடுவது முறையற்றது என்று கூறி பாட்டை நிறுத்தவும் அல் குர் ஆனை ஒலிக்க வைக்குமாறும் உத்தரவு இடுகிறார் . மரணித்துக்கொண்டு இருந்தவர் உம்மு குல்தூமின் பாடலை ஒலிக்கச் செய்யுமாறும் அதுவே தனக்கு ஆறுதல் அளிப்பதாகவும் கோபத்துடன்  கூறுகிறார் . உம்மு குல்தூமின் பாடலோடு அவர் உலகை விட்டு பிரியாவிடை பெறுகிறார்.

இப்ன் அல் கையூம் (ரஹ் ) கூறுகிறார்கள்,
“மரண தருவாயில் உள்ள ஒருவருக்கு கலிமாவை சொல்லுமாறு கூறப்பட்ட  போது அவர் அதை கூற மறுத்தார் . பேசுவதில் அவர் எந்த சிரமத்தையும் எதிர் நோக்கவில்லை ஆனால் அவருக்கு கலிமா வாயில் வரவில்லை”

பாகிஸ்தானை சேர்ந்த  வைத்தியர் நூர் அஹமது நூர் என்பவர்  எழுதிய ‘மரணத்தின் பின்னரான வாழ்க்கை ‘ என்ற நூலில் தனது 40 வருட கால வைத்திய அனுபவத்தில் நூற்றுக்கணக்கான நோயாளிகளின் கடைசி மூச்சில் கலிமா சொல்ல முயற்சித்ததையும் ,அவர்களால் அது சொல்ல முடியாமல் போய் விட்டதையும் மூன்றே மூன்று பேர் மாத்திரமே தான் அறிந்து கடைசி நேரத்தில் கலிமா சொல்லி மரணித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பலரின் கடைசி தருணங்களை குறிப்பிட்டுள்ள அவர் , மரண தருவாயில் இருந்த ஒருவர் மில்க்சேக் (milk shake) தருமாறு அடம்பிடித்துள்ளார் . இன்னொருவர் சினிமா நட்சத்திரங்களின் பெயர்களை கூறியபடியே மரணித்துள்ளார் .
மரணப்பிடியில் இருந்த இன்னொருவர்
ரீடர்ஸ்    டைஜஸ்ட் என்ற சஞ்சிகையை
கொண்டு வருமாறு கேட்டு அடம்பிடித்துள்ளார் . இன்னொருவர்  தனக்கு சொந்தமாக இருந்த நிலத்தைப்பற்றி மரண தருவாயில் பேசிய படியே மரணம் அடைந்துள்ளார்

ஆக , வாழ்க்கையின் முடிவு என்பது
மிக அவசியமானது . அதுவே மறு உலக வாழ்க்கையை பிரதி பலிக்கிறது . அதனால்தான் நபிகள் நாயகம் ( ஸல் ) கூறினார்கள்
“உங்களில் ஓருவர் சொர்க்க வாசிகளின் அமல்களை செய்வர் அவருக்கும் சொர்கத்துக்கும்
இடையே ஒர் அடி தூரம் இருக்கும் அளவுக்கு நன்மை செய்வார். இறுதியில் மரணிக்கும் வேளையில்   நரகவாசிகளின் பாவங்களை செய்து நரகத்தில்  நுழைந்து விடுவார் . அதேபோல உங்களில் ஓருவர் நரக  வாசிகளின் பாவங்களை செய்வர்.   அவருக்கும்  நரகத்துக்கும்
இடையே ஒர் அடி தூரம் இருக்கும் அளவுக்கு தீமைகள் செய்வார். இறுதியில் மரணிக்கும் வேளையில்
சொர்க்க வாசிகளின் நன்மைகளை
செய்து  சொர்க்கத்துக்குள் நுழைந்து விடுவார் “

மொத்தத்தில் எதில் நாம் அதிக ஆர்வமும் தீவிரமும் காட்டுகிறோமோ, எதை அடிக்கடி செய்கிறோமோ அதுதான் மரணத்தின் தருவாயில் நம் முன்னே வந்து நிற்கும் .மரணத்தின் வேதனையின் போது அதுவே செயற்கை ஆறுதல் அளிப்பது போன்ற மாயையை உருவாக்கும்.

சகோதர சகோதரிகளே !
இஸ்லாத்துக்கு முரணான விடயங்களில்    மூழ்கி அவற்றிலே திளைத்து கிடந்தால் படிப்படியாக அவற்றில் இருந்து விலகிக்கொள்ளுங்கள்  

மரணம் வருவதற்கு  முன்னர்  அவற்றில் இருந்து விடுபட முயற்சி செய்யுங்கள்

லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதர்  றஸூலுல்லாஹ் என்கிற அற்புத வார்த்தையை கடைசி வார்த்தையாக்க அளவற்ற அருளாளன் நிகரற்ற அருளாளன் அல்லாஹு த ஆலா நம் அனைவருக்கும் அருள் புரிவானாக !
ஆமீன் !
-முஹம்மது ராஜி

Originally posted by Madawelanews