முஸ்லிம்கள் விழிப்பாக நடந்து கொள்ள வேண்டும் – மு.அமைச்சர் ஹலீம்

கொரோன அபாயம் எமது நாட்டில் முற்றாக நீங்கவில்லை. இந்நிலையில், முற்றாக முடக்கப்பட்டிருந்த சில முஸ்லிம் கிராமங்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதால் முஸ்லிம்கள் கவனமாக நடந்துகொள்ள வேண்டும் என முன்னாள் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் அப்துல் ஹலீம் தெரிவித்தார்.

மாவில்மடயிலுள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரதமரின் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் நாம் கலந்துகொள்ளவிடினும் கொரோனா ஒழிப்பு செயற்திட்டங்களுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கியே வருகின்றோம். எனினும் கொரோனா தாக்கத்தை வைத்து அரசியல் இலாபம் அடைய முயற்சிப்பதையே எதிர்த்து வருகின்றோம்.

அரசியலமைப்பை மீறாதவகையில் மீண்டும் பாராளுமன்றத்தை கூட்டி கொரோனா தாக்கத்தை எதிர்கொள்வதற்கான காத்திரமான நடவடிக்கை எடுக்கும்படியே இந்த அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறோம்.

அத்துடன் 5000 ரூபா நிவாரன நிதி வழங்களிலும் சில அரசியல் ரீதியிலான பாகுபாடுகள் காட்டப்படுகின்றமை மற்றும் ஊழல் என்பவை இடம்பெறுகின்றமையை கேள்விப்படுகின்றோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். மக்களின் பணத்தில் மோசடி செய்ய வேண்டாம் என்பதே எமது கோரிக்கையாகும்.

ஒரு மாதத்திற்கும் மேலாக முற்றாக முடக்கப்பட்டிருந்த சில முஸ்லிம் கிராமங்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளன. இதில் சந்தோஷப்பட்டாலும் மிகவும் புத்தி சாதுர்யமாகவும் கவனமாகவும் நடந்துகொள்ள வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். ஏனெனில் கொரோன அபாயம் எமது நாட்டில் முற்றாக நீங்கவில்லை. உலகலாவிய ரீதியில் அனேகமான நாடுகளில் அதன் தாக்கம் இன்னும் தொடர்கின்றன.

பிரதேச செயலக அதிகாரிகள், சுகாதார பிரிவினர், பாதுகாப்பு தரப்பினர், பொலிஸார், பள்ளிவாசல்களின் நிர்வாகத்தினர்களின் அறிவுறுத்தல்களுக்கமைய நாம் நடந்துகொள்ள வேண்டும்.

குறிப்பாக அக்குறணை மக்களாக இருந்தாலும் சரி, ஏனைய முஸ்லிம்களாக இருந்தாலும் சரி, தமது சொந்த ஊர்களில் அல்லாது வேறுபகுதிகளில் வியாபாரம் செய்பவர்களாக இருக்கின்றனர்.

சிங்கள கிராமங்களிலும் தமது வியாபார நடவடிக்கையை முன்னெடுக்கின்றனர். இவர்கள் மிகவும் அவதானமாக நடந்துகொள்ள வேண்டிய காட்டாயம் இருக்கிறது. ஏனெனில், முஸ்லிம்கள் இந்த கொரோனா தொற்றை பரப்புபவர்கள் என்கிற இனவாத பிரசாரமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நாம் அவசரப்பட்டு பிற இடங்களுக்கு சென்று தொழிலை ஆரம்பிப்பதற்கு முன்னர் சுகாதார நடைமுறைகள் மற்றும் சுகாதார தரப்பினரின் அறிவுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றார்

Check Also

75வருட பூர்த்தியினை காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் பாடசாலை

பவள விழா காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் முஸ்லிம் வித்தியாலயம் ஒரு பார்வை கண்டி மாவட்டத்தில் கட்டுகஸ்தோட்டைக் கல்வி வலயத்தில் …

Free Visitor Counters Flag Counter