உலக நிறுவனங்களை கைப்பற்றுகிறது சீனா

இவ்வருட ஆரம்பத்தில் சீனா அதன் அரசாங்கத்திற்கு களங்கம் ஏற்படக்கூடாது என்பதற்காக தொடக்கத்தில் கொரோனாவைரஸ் தொற்றை மூடிமறைத்ததாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகினது.

வைரஸ் மனிதர்களில் இருந்து மனிதர்களுக்கு பரவமுடியாது என்று கடந்த வருட இறுதியில் வூஹான் மாநகர சுகாதார ஆணைக்குழு பொய்யான அறிவிப்பைச் செய்தது. சுமார் இரு மாதங்களுக்கு உலக சுகாதார நிறுவனத்திற்கும்  வைரஸ் பரவல் பற்றிய முக்கியமான தகவல்களை பெய்ஜிங் வழங்காமல் மறைத்தது.

உலக சுகாதார நிறுவனமும் தொற்றுநோய் விடயத்தில் பெய்ஜிங்கின் அணுகுமுறைக்கு நெருக்கமாக நடந்துகொண்டது. கொவிட் — 19 மனிதர்களில் இருந்து மனிதர்களுக்கு பரவுவதில்லை என்ற சீனாவின்  வாதத்துக்கு ஆதரவாக ஜனவரி நடுப்பகுதியில்  சுகாதார நிறுவனம்  ருவிட்டரில் பதிவொன்றைச் செய்தது. அப்போது, சீனா செய்த மூடிமறைப்பு பற்றிய செய்திகள் வெளியாகத் தொடங்கிவிட்டபோதிலும் கூட சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ரெட்ரோஸ் அதானம் கெபிரியேசஸ் ரைஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு பெய்ஜிங் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டினார். 

பெப்ரவரியில் மூனிச் பாதுகாப்பு மகாநாட்டில் உரையாற்றியபோது அவர், ” வைரஸ் பரவலை முன்கூட்டியே வரவிடாமல் தடுப்பதற்கு சீனா உலகத்துக்கு காலஅவகாசத்தை கொடுத்திருக்கிறது ” என்று குறிப்பிட்டிருந்தார்.சீனாவுக்கான பயணங்கள் மீது கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்த நாடுகளை அப்போது அவர் கண்டிக்கவும்  செய்தார்.

சீனாவில் 2003 சார்ஸ் நோய் பரவலைத் தொடர்ந்து உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட தீர்க்கமான நடவடிக்கைகளுக்கு முரணானதாக அதன் தற்போதைய அணுகுமுறைகள் இருப்பதாக இந்தியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள விமர்சகர்கள் சுட்டிக்காட்டினார்கள்.சார்ஸ் பரவலின்போது சுகாதார நிறுவனம் முதன்முதலாக பயண அறிவுறுத்தல்களை வெளியிட்டதுடன் தென்சீனாவுக்கு செல்வதையும் அங்கிருந்து வெளியே  வருவதையும் தவிர்க்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்து வரலாறு படைத்தது.

நோய் பரவல் குறித்து தொடக்கத்தில் மூடிமறைத்ததற்காக சீனாவை அன்றைய அதன் பணிப்பாளர் நாயகம் குறோ ஹார்லெம் புருண்ட்லாண்ட் கண்டிக்கவும் தவறவில்லை. சார்ஸ் நோய் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் சுகாதார நிறுவனம் தொற்றுநோய்கள் பரவல் குறித்த தகவல்கள் எதிர்காலத்தி்ல்  மூடிமறைக்கப்படாதிருப்பதை உறுதிசெய்ய புதிய சர்வதேச சுகாதார ஒழுங்குவிதிகளை நடைமுறைக்கு கொண்டுவந்தது.

மாறியது என்ன? பெய்ஜிங் தொடர்பிலான உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கை உணர்வுடனான அணுகுமுறை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சொந்த வெளியுறவுக்கொள்கையின் தவிர்க்கமுடியாத விளைவேயாகும். கடந்த ஒருசில வருடங்களில் பல்தரப்பு தலைமைத்துவத்திலிருந்து  ( Multilateral Leadership ) அமெரிக்கா தன்னை வாபஸ்பெற்றுக்கொண்டுவந்த அதேவேளை, சீனா அதன் சொந்தச் செல்வாக்கை படிப்படியாக உறுதியானமுறையில் அதிகரித்துவந்திருக்கிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் தற்போதைய பணிப்பாளர் நாயகத்தின் சொந்த நாடு எதியோப்பியா.1991 ஆம் ஆண்டில் இடதுசாரிப் போக்குடைய எதியோப்பிய மக்கள் புரட்சிகர ஜனநாயக முன்னணி  ( ஈ.பி.ஆர். டி. எவ்.) அடிஸ் அபாபாவில் அதிகாரத்துக்கு வந்தது. அது விரைவாகவே பெய்ஜிங்குடன் நெருக்கமான உறவுகளை வளர்க்கத்தொடங்கியது. பதவிக்கு வந்து மூன்று வருடங்களில் ஈ.பி.ஆர்.டி.எவ். ‘ எதியோப்பிய அபிவிருத்தி தொடர்பில் சீனாவின் ஆலோசனையை ‘ நாடுவதற்காக தூதுக்குழுவொன்றை பெய்ஜிங்கிற்கு அனுப்பியது.

அதன் பிறகு 2005 ஆம் ஆண்டில் முக்கியத்துவமான திருப்புமுனையொன்று ஏற்பட்டது. அந்த வருடம் நடத்தப்பட்ட ஓரளவுக்கு  சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலில் ஆளும்  ஈ.பி.ஆர்.டி.எவ். பெரும் பின்னடைவைக்கண்டது. எதியோப்பிய அரசியலில் குறைந்த  முக்கியத்துவத்தை அதுவரையில் கொண்டிருந்த எதிரணிக் குழுக்கள் பாராளுமன்றத்தில் உள்ள ஆசனங்களில் மூன்றில் ஒரு பங்கைக் கைப்பற்றின. அதையடுத்து ஈ.பி.ஆர்.டி.எவ்.அரசியல் எதிரிகள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது.

பிறகு ஈ.பி.ஆர்.டி.எவ்.கிழக்கு நோக்கி சீனாவுடன் நெருங்கத்தொடங்கியது. அதற்கு சாதகமான முறையில் சீனாவும் செயற்பட்டது. பெய்ஜிங்கில் அமைந்திருக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சொந்தப் பாடசாலையை ஒத்த மத்திய கட்சிப் பாடசாலையொன்றை ஈ.பி.ஆர்.டி.எவ்.அமைப்பதற்கு  சீனா உதவியது.கட்சி உறுப்பினர்கள்  கற்கைத்தொகுதியொன்றும் அந்த பாடசாலையில் ஏற்படுத்தப்பட்டது. கட்சி உறுப்பினர்கள் நிறுவன ஒழுங்கமைவை எவ்வாறு கையாளுவது, கோட்பாடொன்றை வளர்த்தெடுத்தல், பிரசார முறைமையொன்றை விருத்திசெய்வது போன்ற விவகாரங்கள் அங்கு போதிக்கப்பட்டன. மேற்கொண்டு கல்வியைப் பெறுவதற்காக சிரேஷ்ட எதியோப்பிய பயிற்சித் தூதுக்குழுக்கள் கிரமமாக பெய்ஜிங் சென்றுவந்தன. ஒவ்வொரு பயணத்தின்போதும் வறுமை ஒழிப்பு தொடக்கம் இளைஞர் அபிவிருத்தி வரை வெவ்வேறு ஆய்வுத்துறைகளில் கவனம் செலுத்தப்பட்டது. இந்த விடயத்தில் சீனா வழங்கிய வழிகாட்டல் பயிற்சி பயன்தந்தது. சுமார் மூன்று தசாப்த காலமாக ஒரு கட்சி அரசு போன்றே ஈ.பி.ஆர் டி.எவ்.அடிஸ் அபாபாவில் ஆட்சிசெய்தது. கடந்த வருடம் கலைக்கப்படும் வரை அந்த கட்சி  ஒவ்வொரு தடவையும் பெருவெற்றியைப் பெற்றுவந்தது.

ரெட்ரோஸும் நீண்டகால அனுபவத்தைக் கொண்ட ஒரு எதியோப்பிய அரசியல்வாதியே. அவர் பல வருடங்களாக சுகாதார அமைச்சராகவும் வெளியுறவு அமைச்சராகவும் பதவிகளை வதித்தார். 2017 ஆம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கான தேர்தல் வந்தபோது சீனா எதிர்பார்க்கப்பட்டதைப் போன்றே தனது நேசநாடான எதியோப்பியாவின் வேட்பாளரான ரெட்ரோஸை ஆதரித்தது. அந்த பதவிக்கு தெரிவுசெய்யப்படுவதற்கு சில மாதங்கள்  முன்னதாக பீக்கிங் பல்கலைக்கழகத்தில் உலக சுகாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் உரையாற்றுவதற்காக அவர் பெய்ஜிங்கிற்கு அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதியோப்பியா போன்ற நேச நாடுகளுக்கு சீனா வழங்குகின்ற ஆதரவு ஐக்கிய நாடுகளில் அதிகரித்துவருகின்ற அதன் செல்வாக்குடன் சமாந்தரமானதாக செல்கிறது. ஐக்கிய நாடுகளின் பட்ஜெட்டுக்கு இரண்டாவது பெரிய நிதிப் பங்களிப்புச்செய்யும் நாடாக சீனா இப்போது விளங்குகிறது. இரு தசாப்தங்களுக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் பட்ஜெட்டின் ஒரு சதவீதத்தை மாத்திரமே வழங்கிய இப்போது 12 சதவீதத்தை வழங்குகிறது. ஐக்கிய நாடுகளின் வரலாற்றிலே உயர்ந்தளவு நிதியையும் அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கு உயர்ந்த எண்ணிக்கையில் படைகளை அனுப்பி உதவுகின்ற ஒரேநாடாக சீனா மாத்திரமே இப்போது விளங்குகிறது. மேலும் முக்கியமாக, ஏனைய வளர்முக நாடுகளுடன் உறுதியான கூட்டணிகளையும் சீனா உருவாக்கிக்கொண்டு ஐக்கிய நாடுகளின் பல்வேறு நிறுவனங்களின் உயர்பதவிகள் தெரிவின்போது அந்த நாடுகளின் வேட்பாளர்களை ஆதரிக்கின்றது. இவ்வாறாகத்தான் எதியோப்பியரான ரெட்ரோஸ் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவராக சீனாவின் ஆதரவுடன் தெரிவானார்.

 ‘அமெரிக்கா முதலில் ‘ என்ற ட்ரம்பின் வெளியுறவுக்கொள்கை இவையெல்லாவற்றுக்கும் முரணாக அமைந்திருக்கிறது. ட்ரம்ப ஜனாதிபதியாக வந்த பிறகு பொதுவில் சகல ஐக்கிய நாடுகள் நிறுவனங்களையும் கண்டனம் செய்த ட்ரம்ப் வாஷிங்டனின் தாராளமனப்பான்மையில்  அவை பிழைத்துக்கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டிக்கொண்டிருந்தார். ஐக்கிய நாடுகள் நிறுவனங்களை தொடர்ந்து தாக்கிக்கொண்டிருக்கும் ட்ரம்ப் அவற்றுக்கான நிதியுதவிகளை குறைப்புச் செய்வது அல்லது ரத்துச் செய்வது பற்றிஇடையறாது பேசுகிறார். தற்போதைய நெருக்கடிக்கு மத்தியிலும் கூட, உலக சுகாதார நிறுவனத்துக்கான அமெரிக்க நிதியுதவியை அவர் கடந்தவாரம் நிறுத்தினார்.

ஜனநாயக நாடுகளில் அதிகரித்துவரும் ஜனரஞ்சகவாத அரசியல் (Populism) பல்தரப்பு அணுகுமுறையில் (Multilateralism) இருந்து அந்த நாடுகளை வெளியே இழுத்துக்கொண்டிருக்கிறது. ஐக்கிய நாடுகள் மற்றும் அதன் நிறுவனங்கள் பற்றிய இந்திய, அமெரிக்க அபிப்பிராயங்கள் இப்போது அவநம்பிக்கை உணர்வு மிகுந்தவையாக வளர்கின்றன. அமெரிக்காவில் உள்ள வலதுசாரி தேசியவாதிகள் உலகளாவிய ஒத்துழைப்பையும்( Global co-operation) பல்தரப்பு அணுகுமுறையையும் பலவீனத்தின் ஒரு வெளிப்பாடாக நோக்குவது மிகுந்த கவலையளிக்கிறது. ஐக்கிய நாடுகளில் தீர்மானங்களை பல்தரப்பு அணுகுமுறையின்  அடிப்படையில் எடுப்பது (Multilateral decision –making ) ஜனாதிபதி ட்ரம்புக்கு பெருஞ்செலவுபிடிக்கின்ற ஒரு விடயமாக இந்த வலதுசாரி தேசியவாதிகள் கருதுகிறார்கள்.

இது மிகவும் கவலைக்குரிய ஒரு போக்காகும். உலக தீர்மானங்களை மேற்கொள்ளும் அரங்கங்களை( Global decision –making Forums) )கைவிடுவதும் அவை சீனாவின் கைகளுக்குள் போவதும் அமெரிக்காவையும் இந்தியாவையும் பொறுத்தவரை, ஒரு பெரிய பிரச்சனையேயாகும். இரண்டாவது உலகமகா யுத்தத்திற்கு பிறகு அமெரிக்கா, உலகளாவிய விவகாரங்களில் கொள்கைகளை வகுப்பதிலும் தீர்மானங்களை எடுப்பதிலும் வெளிப்படைத்தன்மையும் பொறுப்புக்கூறும் தன்மையும் பெருமளவில் இருக்கவேண்டும் என்பதற்காக  பெருவாரியான சர்வதேச நிறுவனங்களையும் ஒழுங்குவிதிகளையும் உருவாக்கியது.இதுவே உலகமயமாக்கலை சாத்தியமாக்கியது. வர்த்தகங்களும் தொழில்முயற்சித்துறைகளும் மக்களும் வெளிநாட்டு அரசாங்கங்களினால் தவறாக நடத்தப்படும் அச்சுறுத்தல் இல்லாமல் எல்லைகள் கடந்த நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடியதாக இருந்தது. அத்தகைய ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பில் இருந்து அமெரிக்காவினதும் இந்தியாவினதும் தனியார் நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் ஊழியர்களும் குறிப்பிடத்தக்க பயன்களை அடையக்கூடியதாக இருந்தது.

    ஆனால், சீனாவைப் பொறுத்தவரை, சர்வதேச நிறுவனங்களும் ஒழுங்குவிதிகளும் பெரும் இடைச்சலாக இருந்தன. உதாணத்துக்கு, ஒரு தொற்றுநோய் பரவலின்போது வெளிப்படைத்தன்மை தொடர்பிலான உலக சுகாதார நிறுவனத்தின் ஒழுங்கு விதிகளை எடுத்துக்கொள்வோம். அத்தகைய ஒழுங்கு விதிகள் பெய்ஜிங்கின் சுயாதிபத்தியத்தை மலினப்படுத்துவதுடன் வெளிநாடுகளின் கேள்விகளுக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி பதில் கூறவேண்டிய நிலையையும் உருவாக்குகின்றன. அண்மைய வருடங்களில், சர்வதேச நிறுவனங்களில் ட்ரம்ப் விட்டுச்செல்கின்ற அதிகார வெற்றிடத்தை நிரப்புவதன் மூலமாக சீனா அத்தகைய பொறுப்புக்கூறலில் இருந்து தப்புவதற்கான பாதையொன்றைக் கண்டுபிடிக்க முயற்சித்தது.

இன்னமும் கூட ஐக்கிய நாடுகளுக்கான நிதியுதவியில் மிகப்பெரிய பங்கை அமெரிக்காவே வழங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால், வாஷிங்டன் அதன் நேசநாடுகளையும் ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களையும் ஏளனமும் அவமதிப்பும் செய்கிறது. அதன் விளைவாக அந்த நாடுகளும் நிறுவனங்களும் தவிர்க்கமுடியாத வகையில் தலைமைத்துவத்துக்காக பெய்ஜிங்கை நோக்கித் திரும்பும் போக்கு மேலும் மேலும் அதிகரிக்கிறது.

(இராஜதந்திரியான கட்டுரையாளர் ஃபிறீடம் சசெட் பத்திரிகையின் பிரதம ஆசிரியர்.முன்னர் ஐக்கிய நாடுகளுக்கான இந்திய நிரந்தரத் தூதரகத்தில் ஆலோசகராக பணியாற்றினார்.)

மொஹமட் சீஷான்

Check Also

ஆளை அடித்து வளர்த்தாட்டி இருக்கிறேன் – முஸ்அப் மரணத்தில் நடந்தவை

“தலையில் தொப்பி போடாது, நின்று கொண்டு ‘சூ’ பெய்திருக்கிறான் ஆளை அடித்து வளர்த்தாட்டியிருக்கிறேன்” சாய்ந்தமருது சபீலிர் ரசாத் மத்ரசாவில் மாணவர் …

Free Visitor Counters Flag Counter